(Reading time: 18 - 36 minutes)

34. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

குன்னூர்

ஆறு வருடங்களுக்கு முன்பு

குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் அந்த பேருந்தை பிடிப்பதற்காக கொஞ்சம் வேக நடையெடுத்து சென்று கொண்டிருந்தாள் கங்கா. இன்று காலை கொடுத்துவிடுவதாக சொல்லியிருந்த தைத்து வைத்திருந்த ஆடைகளை வாடிக்கையாளரிடம் கொடுத்து விட்டு வர தான் தாமதமாகிவிட்டது.. அந்த பேருந்தை பிடித்தால் தான் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியும்.. இன்று வேறு முதல் வகுப்பே கணிணி பேராசியருடையது. அவர் வந்ததுமே அட்டனென்ஸ் எடுக்க ஆரம்பித்துவிடுவார். அதன்பின் தாமதமாக சென்றாலும் அந்த வகுப்பிற்கான அட்டனன்ஸ் போய்விடும்.. மற்ற மாணவர்களை போல அந்த வகுப்பை விடுத்து வெளியே வரவும் அவள் விரும்பமாட்டாள். ஏனென்றால் இது அவளுக்கு மிகவும் பிடித்த பாடம். அதனால் முடிந்த அளவு விரைந்து நடந்து அந்த பேருந்தை பிடித்திட நினைத்தாள்.

தைத்த துணிகளை ராதா அக்காவிடமே கொடுத்து அனுப்ப நினைத்தாள். ஆனால ராதா அக்காவின் பிள்ளைக்கு இன்று உடல்நலம் சரியில்லை.. அதனால் தாமதமாக தான் வேலைக்கு செல்லப் போவதாக அவர் சொல்லியிருந்ததால், கங்காவே அதை அந்த வாடிக்கையாளர்களிடம் கொடுத்துவிட முடிவுசெய்தாள். ஏனெனில் அவர்கள் இன்று மதியத்திற்குள் கோயம்புத்தூர் சென்றுவிடுவார்கள். இரண்டுநாளில் திருமணம், அதற்கு தான் கங்காவிடம் துணி தைக்க கொடுத்திருந்தனர்.

இந்த வாடிக்கையை பிடித்துக் கொடுத்ததே ராதா அக்கா தான்.. ராதா அக்கா வேலைப் பார்க்கும் எஸ்டேட்டில் புதிதாக விருந்தினர் வந்திருந்தனர். அவர்கள் வெள்நாட்டில் வசிப்பவர்கள்.. விடுமுறைக்கு வந்தால் சென்னையில் தங்குபவர்கள், குன்னூருக்கு எப்போதாவது தான் வருவார்கள்.. இந்த முறை கோயம்புத்தூரில் திருமணம் என்று வந்திருந்தார்கள். அப்படி அந்த எஸ்டேட்டிற்கு விருந்தினர்கள் வரும் நேரத்தில்,  ராதா அக்காவை எஸ்டேட் பங்களாவிற்கும் வேலைக்கு கூப்பிடுவார்கள்.. அப்படி அக்கா அங்கே வேலைக்கு செல்லும் போது தான், திருமணத்திற்கான துணிகளை தைக்க நல்ல தையற்காரர் வேண்டுமென்று அவர்கள் கேட்டிருந்தனர். ராதா அக்காவும் உடனே கங்காவின் பேரை சொன்னார்.

பெண் டெய்லரா? அவர்கள் நேர்த்தியாக தைக்கமாட்டார்கள் என்று அவர்கள் மறுத்தனர், ஆனால் ராதா அக்கா தன் மகளுக்காக கங்கா தைத்துக் கொடுத்திருந்த பாவாடை சட்டையை காண்பித்தாள். அவளது குடும்ப சூழ்நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறாள். அதில் மனமிறங்கி முதலில் சில துணிகளை கங்காவிடம் தைக்க கொடுத்தனர். அதை அவளும் நேர்த்தியாக தைத்துக் கொடுத்ததால், மற்ற துணிகளையும் அவளிடமே கொடுத்தனர். ராதா அக்காவால் இன்று கங்காவிற்கு நல்ல வருமானம் கிடைத்தது. இதை வைத்து இரண்டு மாதங்களை ஓட்டிவிடலாம்.

கங்கா செல்ல நினைத்த பேருந்து சற்று தாமதமாக வந்ததால் அவளால் அந்த பேருந்தை பிடிக்க முடிந்தது. பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவளுக்கு தானாகவே தன் குடும்பம் முன்பு இருந்ததையும், இப்போது இருக்கும் சூழ்நிலையையும் மனம் அசை போட்டது.

கங்காவின் தந்தைக்கு உறவென்று சொல்லிக் கொள்ள யாருமேயில்லை. சிறு வயதில் வீட்டை விட்டு வந்தவர், பின் தன் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள கிடைத்த வேலையை செய்தார். வேலை கொடுத்த முதலாளிக்கு விசுவாசமாக இருப்பார். அதில் சில பேரின் பொறாமைக்கு ஆளாகி அதனால் அந்த வேலையை இழந்து, பின் வேறு ஒரு வேலை ஏன் சில சமயங்களில் வேறு ஒரு ஊர் என்று நாடோடியாக தான் அவர் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருந்தது.

அப்படி ஊர் ஊராக சென்றுக் கொண்டிருந்தவர், ஒரு ஊரில் தான் கங்காவின் அன்னையை மணந்தார். கங்காவின் அன்னையோடு சேர்ந்து அவர் வீட்டில் ஐந்து பெண் பிள்ளைகள், ஒவ்வொருவரையும் கரை சேர்ப்பதே அவர் பெற்றோர்களின் மிகப் பெரிய கடமையாக ஆகிப் போக, கடும் உழைப்பாளியாய், சீர்வரிசை ஏதும் எதிர்பார்க்காமல் தன் பெண்ணை மணக்க முன் வந்த கங்காவின் தந்தையை அவர்களுக்கு பிடித்துப் போக, இருவருக்கும் மணம் முடித்தனர். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதே அவரவரின் கடமையாக இருக்க, யாரும் யாரோடும் ஒட்டி உறவாடும் சூழ்நிலை அங்கு அமையவில்லை, அதனால் மனைவியோடு திரும்பவும் வேறு ஊர் பயணம். இப்படியே இரு மகள்கள் பிறந்து, அவர்கள் வளரும் வரையே, அவர்களுக்கென்று ஒரு நிலையான இடத்தை தேடிக் கொள்ளவில்லை. இதில் சில வருடங்களுக்கு முன்பு தான் கடைசியாக அவர்கள் குன்னூர் வந்து தங்களின் வாழ்க்கை முறையை நிலைப்படுத்திக் கொண்டனர்.

கங்காவின் தந்தைக்கு இங்கு ஒரு ரிசார்ட்டில் வேலை, குறிப்பிட்டு இந்த வேலை தான் என்றில்லாமல், எல்லாம் வேலைகளையும் முக சுளிப்பின்றி செய்வார். அதனால் அந்த ரிசார்ட் முதலாளிக்கு கங்காவின் தந்தையை மிகவும் பிடிக்கும், வேறு ஒரு வேலையாக கங்காவின் குடும்பம் முன்பு இருந்த ஊருக்கு அவர் சென்றிருந்த போது, அங்கே கங்காவின் தந்தையின் கடின உழைப்பை பார்த்து, நல்ல சம்பளத்தோட என்னோட ரிஸார்ட்ல வேலை தரேன் வர்றியா? என்று அந்த முதலாளி கேட்க, அந்த சமயம் அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். ஆனால் சிறிது நாட்களிலேயே தன் வேலை பறி போக, அந்த ரிசார்ட் முதலாளியிடம் சென்று நின்றார். அவரும் இவர் முன்பு மறுத்ததை பெரிதாக்காமல் வேலை கொடுத்தார்.  அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இதோடு பிள்ளைகளின் படிப்புக்கும் அவர் ஊதியம் போதுமானதாக இருந்தது. கங்காவின் அன்னையும் தனக்கு தெரிந்த தையல் வேலையை வீட்டிலேயே செய்து, அவரால் முடிந்த அளவுக்கு தன் கணவனின் பாரத்தை குறைத்தார். கங்காவும் யமுனாவும் இயல்பிலேயே பொறுப்புள்ளவர்கள் என்பதால், அவர்கள் குடும்பம் அமைதியும் மகிழ்ச்சியும் கலந்ததாகவே இருந்தது.

கனகா கங்காவின் அன்னைக்கு ஒன்றுவிட்ட அண்ணனின் மனைவி, திருமணமான புதிதிலேயே தன் அண்ணன் பிழைப்பு தேடி வேறு ஊருக்கு சென்றவர் தான், அதன்பிறகு எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.. இப்போது பல வருடங்கள் கழித்து தன் அண்ணியை குன்னூரில் பார்த்ததில் அவர் மகிழ்ந்தார். தன் அண்ணன் இறந்து போன செய்தியை கேட்டு வருத்தமும் கொண்டார்.

கனகாவிற்கு ஒரு மகன் இருக்கிறான், அவனுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.. மருமகளோடு கனகாவிற்கு ஒத்து போகவில்லை. அடிக்கடி இருவருக்கும் சண்டை, மகனும் மருமகள் சார்பாகவே பேசுகிறான். மகன் இல்லாத சமயத்தில் மருமகளும் சாப்பாடு சரியாக போடுவதில்லை.. அதனால் டீ எஸ்டேட்டிற்கு வேலைக்குப் போவதாக கங்காவின் அன்னையிடம் புலம்பி தள்ளினார்.  மருமகளோடு சண்டை பிடிக்கும் சமயத்தில் இவர்கள் வீட்டில் தங்கிக் கொள்வார். உறவுகளெல்லாம் இல்லாமல் தனித்து வாழும் குடும்பம் என்பதால் கனகாவின் வரவை அந்த நால்வரும் விரும்பினர்.

கிடைத்ததை கொண்டு மன நிறைவோடு வாழும் அந்த குடும்பத்தின் மீது யார் கண் பட்டதோ, கங்காவின் அன்னைக்கு திடிரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது.. மருத்துவரிடம் அழைத்துப் போனதில், அவர் வயிற்றில் கேன்சர் கட்டி இருப்பதாகவும், கவனிக்காமல் விட்டதில் அது பெரிதாகிவிட்டது. நெடுநாள் உயிர் வாழ்வது கடினம் என்று கூறிவிட்டனர். சாப்பிடும் சாப்பாடு செரிக்காமல் வாந்தி எடுப்பார். பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் பாரமாகி விடக் கூடாதே என்ற கவலையே நோய் தீவரமாக, அவரை மரணம் வந்து வெகுவிரைவில் ஆட்கொண்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.