(Reading time: 18 - 36 minutes)

மனைவி இறந்த பின் வயது வந்த பிள்ளைகளை தனியாக விட்டு விட்டு  வேலைக்குச் செல்வதை பற்றி கவலைக் கொண்ட போது, கனகா இங்கேயே இருந்து விடுவதாக யோசனை சொன்னது  கங்காவின் தந்தைக்கு  சரியென்று பட்டது. ஆரம்பத்தில் பாசம் வைத்த அத்தையாக இப்போது கனகா இருக்கவில்லை. கங்காவின் தந்தை வீட்டில் இருக்கும்போது பிள்ளைகளிடம் பாசமாக நடந்துக் கொள்வதும், அவர் இல்லாத சமயத்தில் அதட்டி மிரட்டி வேலை வாங்குவதுமாக இருந்தார். டீ எஸ்டேட்டிற்கு வேலைக்கு செல்வதையும் விட்டுவிட்டார். கனகாவிடம் மாற்றம் தெரிந்தாலும் கங்காவும் யமுனாவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வீட்டு வேலைகளை ஒற்றுமையோடு கலந்து செய்து அதே சமயத்தில் தங்கள் படிப்பிலும் கவனம் செலுத்தி படித்தனர்.

அவர்கள் வீட்டிலிருந்து பத்து நிமிடம் நடந்து செல்லும் தூரத்தில் ஒரு சர்ச் உள்ளது, அதில் ஒரு சேவை மையமும் அமைத்து இலவச ட்யூஷன், தையல் வகுப்பு, இலவச மருத்துவம் இதெல்லாம் போன்ற சேவைகளை அங்கிருக்கும் மக்களுக்கு அந்த சர்ச் சார்பாக செய்து வருகின்றனர். அது அந்த சமயம் மதர் ஜெர்மன் பொறுப்பில் தான் இருந்தது. விடுமுறை நாட்களில் கங்கா அந்த சர்ச்க்கு சென்று வருவாள், அதிலும் அங்கு போகும்போது மறக்காமல் மதர் ஜெர்மனிடம் ஆசியும் வாங்குவாள். அதனால் அங்குள்ளவர்களுக்கு கங்கா மிக பரிச்சியமானவளாக,  பிடித்தவளாக மாறியிருந்தாள்.

தன் அன்னை இருந்த போதே அவரிடம் ஓரளவுக்கு தையல் கற்றிருந்தவள், அதன்பிறகு சர்ச்சிலும் போய் முழுமையாக கற்றுக் கொண்டாள். கங்காவை மிகவும் பிடிக்கும் என்பதால், நிறைய விஷயங்களை பணம் வாங்காமலேயே அந்த ஆசிரியர் கங்காவிற்கு கற்றுக் கொடுத்திருந்தார். அப்போதெல்லாம் கங்கா வெளி ஆட்களுக்கு தைத்து கொடுக்கவில்லையென்றாலும், அவளுக்கும் அவளது தங்கைக்கும் அவளே துணிகளை தைத்து விடுவாள்.

அன்னை இல்லாத வாழ்க்கையை ஒருவாறு கங்காவும் யமுனாவும் ஏற்றுக் கொள்ள பழகிவிட்டனர். ஆனால் விதி இன்னும் சதி செய்ய நினைத்திருந்தது. ஒருநாள் கங்காவின் தந்தை, அவர் வேலை செய்த ரிசார்ட்க்கு வந்து தங்கியிருந்த சுற்றுலா வாசிகளுக்கு அவரே டூரிஸ்ட் கைடாக மாறி, இரண்டு நாட்கள்  ஊட்டி, குன்னூர் அனைத்தையும் சுற்றி காண்பித்தவர், கடைசியாக அவர்களை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலும் கொண்டு சென்று விட்டு வந்தார். அவர் சென்ற வேனில் ட்ரைவரும் அவரும் மட்டுமே திரும்பி வந்தனர். அந்த ட்ரைவர் வேலை நேரம் என்றும் பாராமல் மது அருந்தியிருந்ததால், எதிரில் வந்த பேருந்தில் மோதி அதே இடத்திலேயே அந்த ட்ரைவருக்கும், கங்காவின் தந்தைக்கும் உயிர் பிரிந்தது.

ஏற்கனவே அன்னை இழப்பு, இப்போது தந்தையின் இழப்பும் சேர்ந்து அந்த இருப் பெண்களையும் மிகவும் பாதித்தது. விபத்து நடந்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் பணம் கிடைக்குமென்று பல பேர் யோசனை கூறினார்கள். ஆனால் தவறு கங்காவின் தந்தை சென்ற வேனின் ட்ரைவருடையது என்பதால், அந்த ரிசார்ட்டின் உரிமையாளர் அந்த வழக்கு பெரிதாகமல் பார்த்துக் கொண்டார். அதனால் அவரே கங்காவின் தந்தை மரணத்திற்கு இழ்ப்பீடாக ஒரு குறிப்பிட்ட தொகையை தந்தார்.

அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக உறவினர்கள் யாரும் இல்லை என்பதால், கங்காவும் அந்த பணத்தை பெற்றுக் கொண்டாள். கனகாவோ பணமும் வந்திருக்க, அதை செலவு செய்யும் நோக்கத்துடன் உடன் இருந்தார். குடும்ப தலைவனும் இறந்து விட, எங்கே அவர்கள் பொறுப்பு தன்னை வந்து சேருமோ என்று பயந்தார். இருக்கும் பணத்தை வைத்து சிறிது காலம் குடும்பத்தை ஓட்டலாம், இப்போது கங்கா கல்லூரியின் இறுதி ஆண்டின் இறுதியில் இருப்பதால், படித்தும் முடித்ததும் தான் வேலைப் பார்த்த DR எஸ்டேட் மேனேஜரிடம் சொல்லி வேலை வாங்கி தருவதாக கனகா யோசனை கூறினார்.

இந்த வேலை கிடைத்து கங்கா குடும்ப பொறுப்பை பார்த்துக் கொண்டால், தானும் இவர்களை பார்த்துக் கொள்கிறேன் என்ற பெயரில் இருந்து விடலாம் என்ற நினைப்பு அவருக்கு, கங்காவிற்கு அவரின் எண்ணங்கள் புரிந்தது. தந்தை இறந்த சில நாட்கள் தான் அந்த துயரில் இருந்தால், அதன்பின் மதர் ஜெர்மனின் உதவியோடு தங்களுக்கு கிடைத்த பணத்தை வங்கியில் போட்டாள். கல்லூரியின் கடைசி வருட படிப்பு முடிந்ததும் அவள் B Ed படிக்க வேண்டும், தங்கை இப்போது பனிரெண்டாம் வகுப்பு படிப்பதால், அடுத்து அவளை கல்லூரியில் சேர்க்க வேண்டும், ஒரு வருட B Ed படிப்பு முடிந்தால் அடுத்து அவள் ஆசிரியை ஆகி விடுவாள், பின் அடுத்தடுத்த வருட தங்கையின் படிப்பை தன்னால் கவனித்துக் கொள்ள முடியும் என்ற கனவில் அவள் இருந்தாள்.

ஆனால் நடைமுறைக்கு அது சாத்தியப்படவில்லை, தினசரி குடும்ப செலவுக்கு கங்கா தையல் தொழிலை தான் நம்பியிருந்தாள். ஆனால் அது நினைத்த அளவு வருமானத்தை கொடுக்கவில்லை.. கஷ்டப்பட்டு இந்த வருட கல்லூரி படிப்பை முடித்தால் கூட போதும், அடுத்து அத்தை சொன்ன அந்த DR எஸ்டேட்டில் வேலை கிடைத்துவிட்டால், தங்கையை மட்டும் நன்றாக படிக்க வைத்தால் போதும் என்ற கனவில் இருந்தாள்.

இருந்தும் விதி இன்னும் அதன் ஆட்டத்தை விட்டு வைக்கவில்லை.. பள்ளியில் யமுனா அடுத்தடுத்த நாட்களில் மூன்று முறை மயங்கி விழுந்தாள். கூடவே அவளிடம் கொஞ்சம் அதிகப்படியான சோர்வும் தெரிந்தது.. பனிரெண்டாம் வகுப்பு என்பதால் படிப்பில் இன்னும் கூடுதல் உழைப்பை கொடுத்து படிப்பதால், அப்படி சோர்வு அதிகமாக இருந்திருக்கும் என்று சகோதரிகள் நினைத்திருந்தனர். ஆனால் இப்படி அடிக்கடி மயக்கம் வேறு வந்ததால், என்ன பிரச்சனையோ என்று கங்கா பயப்பட, யமுனாவின் வகுப்பு ஆசிரியரும் முதலில் மருத்துவரை சென்று பாருங்கள் என்று கூறினார்.

முதலில் வீட்டுக்கு அருகில் உள்ள சின்ன கிளினிக்கிற்கு தான் கங்கா யமுனாவை கூட்டிச் சென்றாள். மருத்துவர் யமுனாவை பரிசோதித்துவிட்டு சில சோதனைகளுக்கு எழுதிக் கொடுத்தார். அந்த ரிப்போர்ட்டைப் பார்த்தவர், பின் வேறு ஒரு மருத்துவரை சென்று பார்க்கச் சொன்னார். அதுவும் இதயம் சம்பந்தமான மருத்தவரை பார்க்க எழுதிக் கொடுத்திருந்தார்.

கங்கா மனதில் பயத்தோடு யமுனாவை அந்த மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள். அங்கேயும் சில சோதனைகள் செய்து யமுனாவிற்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறினர். விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.. அப்போது தான் உயிருக்கு ஆபத்து இருக்காது என்றனர். ஆரம்பத்திலேயே இதை கவனிக்காமல் விட்டதாக கூறினர். ஆமாம் சில வருடங்களுக்கு முன் யமுனா இதே போல தான் அடிக்கடி மயங்கி விழுவாள். அப்போது அருகிலுள்ள கிளினிக்கிற்கு கூட்டி சென்று காண்பித்து, சத்து குறைவால் தான் இப்படி என்று சத்து மாத்திரை மருந்துகள் வாங்கிக் கொடுப்பர். அப்போதே இதயத்தில் ஓட்டை இருப்பதை கண்டுபிடித்திருந்தால், மருந்து மாத்திரையிலேயே சரி செய்திருக்கலாம் என்று மருத்துவர் கூறினார்.

இப்போது அறுவை சிகிச்சை செய்வதற்கு லட்சக் கணக்கில் செலவாகும் என்றும் கூறினார். படிப்பு செலவுக்கென்று வைத்திருந்த பணத்தில் பாதி இப்போதைய சிகிச்சைக்கே கரைந்து போய்விட்டது. மீதி பணத்தை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது.. ஆனாலும் கங்கா கலங்கிடவில்லை. இப்போது அவளுக்கு இருந்த ஒரே நம்பிக்கை மதர் ஜெர்மன் தான், அங்கங்கே கிராமங்களில் இப்படி சிறிய அளவில் சேவை மையம் வைப்பதற்கு சில வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் தான் உதவிக் கொண்டிருக்கிறது. அந்த அமைப்பில் மதர் ஜெர்மனும் ஒரு முக்கியமான ஆளாக உள்ளார்.. கங்காவுக்கு தெரிந்தே, அவர் இதுபோல் மருத்துவம் பார்க்க முடியாமல் தவிக்கும் சிலருக்கு அந்த தொண்டு நிறுவனங்கள் மூலம் மருத்துவ செலவுக்கான பணத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதேபோல் யமுனாவின் மருத்துவ செலவுக்கும் மதர் உதவுவார் என்று கங்கா நம்பியிருந்தாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.