(Reading time: 25 - 50 minutes)

35. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

துஷ்யந்த் குன்னூர் எஸ்டேட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று அவனுடைய பிறந்தநாள். 25 வயது முடிந்திருந்தது. இந்த ஒரு வாரத்திலேயே மகனிடம் ஏதாவது மாற்றம் வந்திருக்குமா? என்று ஆர்வத்தோடு கோமதி தொலைபேசி மூலமாக தன் தம்பியிடம் பேசினார். எந்த மாற்றமும் இல்லை, மருத்துவர் வந்து இரண்டு முறை பரிசோதித்து விட்டு சென்றிருக்கார் என்று அண்ணாமலை கூறிய பதிலில் கோமதி மிகவும் வருத்தம் கொண்டார். பிறந்தநாள் அதுவுமாக மகனுக்கு ஒரு வாழ்த்து சொல்ல முடியாத நிலையை நினைத்து அவர் கண்ணீர் வடிக்க, செல்வாவும் விஜியும்  அவரை தேற்றுவதற்கு பெரும்பாடுபட்டனர்.

துஷ்யந்தை முக்கால்வாசி நேரம் உறக்கத்திலேயே வைத்திருந்தனர். சென்னை மருத்துவர் இங்கு குன்னூரில் ஒரு மருத்துவரை பரிந்துரை செய்திருந்தார். அவர் சில மாத்திரைகளை துஷ்யந்திற்கு எழுதி கொடுத்திருந்தார். அதன் விளைவில் அவன் உறங்கி கொண்டிருந்தான். விழித்திருக்கும் சமயத்தில் போதை மருந்து கேட்பதை தவிர வேறொன்றும் பேச மாட்டான். சிறிதளவிற்கு இப்போதைக்கு போதை மருந்து கொடுக்க சொல்லி மருத்துவர் சொல்லியிருந்தார். ஆனால் சில நாட்களிலேயே அவன் அதிக அளவு போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்ததால் அந்த அளவு பற்றாமல் அவன் இன்னும் கேட்டு ரகளை செய்தான். வாணியிடம் தான் அவனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்திருந்தனர்.

துஷ்யந்த்தை இப்படி ஒரு நிலைமையில் பார்த்ததில் அவர் மிகவும் வருத்தம் கொண்டார். அந்த பங்களாவில் வேலை செய்பவர்களை தவிர வெளியாட்களை வீட்டில் விடுவதில்லை. அதேபோல துஷ்யந்த் இங்கு இருப்பது பற்றி வெளி ஆட்களிடம் சொல்லக் கூடாதென்று அண்ணாமலை அங்கு வேலை செய்பவரிடம் உத்தரவு போட்டிருந்தார். அங்கு அவர்கள் எஸ்டேட்டில் வேலை பார்ப்பவர்களை கூட பங்களாவில் அனாவசியமாக அனுமதிப்பதில்லை.

வழக்கமாக மாலை நேரங்களில் அண்ணாமலை மது அருந்துவது வழக்கம்.. மேனேஜர் தான் அவரோடு உடனிருந்து அவருக்கு மது ஊற்றி கொடுப்பான், கூடவே அவனும் சேர்ந்து மது அருந்துவான். அந்த நேரத்தில் யாரும் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். மதுவோடு சாப்பிட தேவையான பதார்த்தங்களை வாணி தான் செய்துக் கொடுப்பார்.

அன்றும் வாணி பதார்த்தங்களை கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றதும் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். கொஞ்சமாக மது சாப்பிட்டதும் அண்ணாமலைக்கு சிறிதளவு போதை ஏறியிருந்தது. இன்று தன் மருமகனுக்கு பிறந்தநாள்.. ஆனால் இப்படி ஒரு நிலையில் இருக்கிறானே என்று வேதனையில் புலம்பினார்.

“என்னடா டாக்டர் அவன், எங்க ராஜாவை வேற இடத்துக்கு கூட்டிட்டுப் போனா சரியாகும்னு சொன்னான்னு இங்க கூட்டிட்டு வந்தா, இன்னும் அவன் இதே நிலைமையிலேயே இருக்கான். அங்க பாவம் செல்வா சின்ன பையன் தனியா எல்லாமே பார்த்துக்க வேண்டியதா இருக்கு, இவன் தான் எங்களையெல்லாம் தாங்கிப் பிடிக்கனும், ஆனா இப்படி ஒரு நிலைமையில இருக்கான் என் மருமகன்.. இந்த டாக்டரை நம்பறதுல ஒரு பிரயோஜனமும் இல்ல போலயே டா.. எங்க ராஜா சரியாகவே மாட்டானா?”

“நீங்க சொல்றது சரிதான் முதலாளி.. இந்த டாக்டரை நம்பறதுல எந்த பிரயோஜனுமும் இல்லை. அவர் என்னவோ சரிப் பண்றா மாதிரி தெரியல.. இந்த டாக்டரை நம்பறத விட்டிட்டு, வேற வழி யோசிச்சா நல்லா இருக்கும்..”

“என்னடா முத்து சொல்ற? வேற வழியா! வேற டாக்டரை பார்க்கலாம்னு சொல்றியா?”

“அய்யோ இல்லைங்க முதலாளி.. நான் வேறன்னு சொன்னது வேற.. தம்பிக்கு மனசுல நிறைய கஷ்டம் இருக்கு.. அந்த வேதனையெல்லாம் மனசை விட்டு போனாத்தான அது சரியாகும்..”

“ஆமாண்டா.. ஆனா அவன் வேதனையை எப்படி போக்கறதுடா.. எங்களையெல்லாம் யாரோ மாதிரி பார்க்கிறான். எங்களை அவன் கிட்டக்கூட நெருங்க விட மாட்றான். அப்படியே போனாலும், மருந்து இருக்கான்னு தான் கேக்கறான். அப்புறம் எப்படிடா அவனை சரிப்படுத்தறது..”

“இதெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது முதலாளி.. இதுக்கு வேற வழி இருக்கு. தம்பிக்கு ஒரு பொண்ணால தான காயம் ஏற்பட்டிருக்கு, அதை இன்னொரு பொண்ணு தான் சரிப்படுத்தனும்..”

“என்னடா சொல்ற..? புரியும் மாதிரியா சொல்லு..”

“தம்பியோட இந்த போதை பழக்கத்தை சரிப்படுத்தனும்னா, அதுக்கு இன்னொரு போதையை காட்டனும்.. அதான் தம்பியோட ஒரு பொண்ணை பழக விடனும்.. அப்படி செஞ்சா, தம்பி கண்டிப்பா இந்த தப்பை மறந்திடும்.”

“என்னடா சொல்ற அது மட்டும் தப்பில்லையா?”

“இதுல என்ன தப்பு இருக்கு முதலாளி.. அந்த காலத்துல கேள்விப்பட்டதில்லையா நீங்க, பைத்தியத்துக்கு கல்யாணம் செஞ்சு வச்சா எல்லாம் சரியா போகும்னு சொல்றாங்களே எதுக்கு.. எல்லாம் இதை மனசுல வச்சு தான்..”

“எங்க ராஜா ஒன்னும் பைத்தியமில்லடா.. அவனுக்கு கொஞ்சமா தான் ஏதோ பிரச்சனை. ஏதாச்சும் ஒளராத..”

“என்ன முதலாளி.. நானே தம்பியை பைத்தியம்னு சொல்வேனா? பைத்தியத்துக்கே இப்படி ஒரு வைத்தியமிருக்கப்போ, நம்ம தம்பிக்கு அதை செஞ்சு பார்த்தா என்ன? தம்பியை இப்படி செஞ்சது ஒரு பொண்ணு தான.. அப்போ ஒரு பொண்ணால தான தம்பியை குணப்படுத்த முடியும்..”

“அப்போ அவனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க சொல்றியா? ஆனா நாங்க இப்போ இருக்க நிலைமைக்கு அவனுக்கு யாருடா பொண்ணு கொடுப்பா..”

“அய்யோ இன்னுமா உங்களால புரிஞ்சிக்க முடியல.. இதுக்கு ஒரு பொண்ணு இருந்தா போதும்.. தம்பிக்கு இப்பவே கல்யாணம் செய்யனும்னு அவசியமில்ல.. காசு இருந்தா போதும், டெய்லி ஒரு பொண்ணு கூட நான் கூட்டிட்டு வரேன்.”

“டேய்.. என் மருமகனுக்கு ஒரேடியா சமாதி கட்டப் பார்க்கிறியா? அவனுக்கு இந்த பிரச்சனை சரியாகனும்னு பார்த்தா, நீ அவனுக்கு தேவையில்லாம வேற நோய் வரவச்சிடுவ போல, அவனுக்கு எல்லாம் சரியாகி நல்லப்படியா வாழனும்னு நாங்க எதிர்பார்த்திருக்கோம். நீ என்னடான்னா, மொத்த காரியத்தை கெடுத்திடுவ போல..”

“என்ன முதலாளி.. நம்ம தம்பிக்கு நான் கெடுதல் நினைப்பேனா? நான் ஒரு பேச்சுக்கு தான் அப்படி சொன்னேன். நீங்க மட்டும் ஓகே சொல்லுங்க.. புதுசா ஒரு பொண்ணை பிடிப்போம்.. குடும்ப கஷ்டத்துக்கு இந்த தொழிலுக்கு வர பொண்ணுங்க ரெடியா இருக்குங்குங்க.. என்ன சொல்றீங்க?”

“நிஜமாவே இப்படி செஞ்சா எங்க ராஜாக்கு சரியாகிடுமாடா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.