“அய்யோ முதலாளி.. எதுக்கு இப்போ உங்களுக்கு இவ்வளவு கோபம்..நான் என்ன சொல்ல வந்தேன்னு நீங்க புரிஞ்சுக்கல.. நான் சொன்ன வந்தது என்னன்னா, அவங்களை பொறுத்த வரைக்கும் தான் இது கல்யாணம், நம்மள பொறுத்த வரைக்கும், நம்ம தம்பியை குணமாக்க இது ஒரு நாடகம்..”
“என்னடா சொல்ற?”
“கனகா சொல்ற வழிக்கே போய், இந்த கல்யாணம்ங்கிற பேர்ல நம்ம திட்டத்தை நிறைவேத்திக்கலாம்னு சொல்றேன். உங்களுக்கு புரியுது இல்ல..”
“ஆனா இது எப்படிடா முடியும், பின்னாடி ஏதாச்சும் பிரச்சினை வந்தா, நான் தான் பொண்டாட்டின்னு அந்த பொண்ணு வந்து நின்னா?”
“என்ன முதலாளி.. நம்மளால அதை சமாளிக்க முடியாதா? நான் உங்கக் கூட இருக்கப்போ உங்களுக்கு என்ன கவலை!”
“உனக்கு தெரியாதுடா.. எங்க அக்காக்கோ, என்னோட பொண்டாட்டிக்கோ இந்த விஷயம் தெரிய வந்தா, அவங்களே இந்த கல்யாணத்தை ஒத்துக்கிட்டு அந்த பொண்ணை ஆரத்தி எடுத்து கூப்பிட்டுப்பாங்க..”
“அய்யோ முதலாளி.. இந்த நாடகத்தை நம்மளே காதும் காதும் வச்சா மாதிரி முடிச்சிக்கனும்.. இதை ஏன் வீட்டுக்கு தெரியும்படி கொண்டு போகப் போறோம்..”
“நீ சொல்ற மாதிரி வீட்டுக்கு தெரியாம மறைக்கலாம், ஆனா ராஜா தானடா தாலிக்கட்டனும், அவனுக்கு எப்படிடா தெரியாம பார்த்துக்க முடியும்? அவனும் எங்க அக்கா, மாமா போல தானடா இருப்பான். அவனை எப்படி ஒத்துக்க வைக்க முடியும்?”
“முதலாளி புரிஞ்சு தான் பேசறீங்களா? இப்போதைக்கு நம்ம ஈஸியா ஒத்துக்க வைக்கக் கூடிய ஒரே ஆள் நம்ம தம்பி தான், தம்பி இருக்கும் நிலையை பத்தி மறந்துட்டீங்களா? தம்பி இப்போ என்ன செஞ்சுச்சுன்னு ஒரு அரைமணி நேரம் கழிச்சு கேட்டாலே, அதுக்கு ஞாபகம் இருக்காது.. இதுல தன்னோட கல்யாணத்தை எப்படி ஞாபகம் வச்சிக்கும்.. அதிலும் தம்பி கேக்கற மருந்தை அந்த நேரம் கொடுத்தா, கரெக்டா நம்ம செய்ய சொல்றதை செஞ்சுடும்”
“இது தப்பில்லையா?”
“டாக்டர் இப்போதைக்கு கொஞ்சமா கொடுக்கலாம்னு சொல்லி இருக்கார் இல்ல, நாம அதைவிட கொஞ்சம் கூட கொடுக்கப் போறோம் அவ்வளவு தான்..”
“இப்போதைக்கு நீ சொல்றதெல்லாம் சரி.. ஆனா அவன் குணமாகற நேரம் அந்த பொண்ணைப் பத்தி அவனுக்கு தெரிய வராதா?”
“நான் உங்கக் கூட இருக்கப்போ, உங்களுக்கு என்ன கவலை? பயப்படாம இதுக்கு ஒத்துக்கோங்க முதலாளி.. இப்போதைக்கு நாம சமாளிக்கக் கூடிய ஒரே ஆள் நம்ம தம்பியை குணப்படுத்த வர டாக்டர் தான், ஒருப்பக்கம் நாம கல்யாணத்தை செஞ்சு வைப்போம், இன்னொரு பக்கம் டாக்டரும் வந்து பார்க்கனுமில்ல, அதனால அவர் எந்த பிரச்சனையும் செய்யக் கூடாது. அவர் மூலமா சென்னை டாக்டருக்கும், உங்க குடும்பத்துக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது.. அது தான் நாம இப்போதைக்கு செய்ய வேண்டிய ஒரே விஷயம்” என்றதும், அண்ணாமலையும் அதை ஆமோதிப்பதாய் தலையாட்டினார்.
அடுத்து இருவரும் பேசியது மருத்துவரிடம் தான், அவரோ முதலில் இதை ஒத்துக் கொள்ளவே இல்லை. “இது ரிஸ்க்கான விஷயம், அவருக்கு வெறும் போதை பழக்கம் மட்டுமில்ல, கூடவே மனரீதியா அவர் பாதிக்கப்பட்டிருக்கார்.. இந்த நேரத்துல அவருக்கு கல்யாணம் செய்றது நல்ல விஷயமே இல்லை.. ஒரு பொண்ணு அவரை ஏமாத்தியிருக்கா, அந்த கோபத்தை அவர் இந்த பொண்ணுக்கிட்ட காட்டலாம், அப்போ அந்த பொண்ணுக்கு அது சேஃப் இல்ல,
இந்த மாதிரி நேரத்துல அவருக்கு தேவையானது அன்பும் அனுசரனையும் தான், ஆனா பணத்துக்காக ஒரு பொண்ணு இவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அவளால இவரை எப்படி பார்த்துக்க முடியும்? ஒருவேளை கடமையேன்னு அந்த பொண்ணு இவரை பார்த்துக்கலாம், ஆனா அது எத்தனை நாள் நீடிக்கும்? ஏதோ ஒரு விதத்துல இவர் கூட இருக்க முடியாதுன்னு அந்த பொண்ணு போயிட்டா, அப்போ திரும்ப இவருக்கு மனரீதியா பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு, அதனால இந்த கல்யாண ஏற்பாடெல்லாம் வேண்டாம்” என்று கோபப்பட்டார்.
“அய்யோ இந்த கல்யாணம் பணத்துக்காக இல்லை டாக்டர்.. எங்க சொந்தக்கார பொண்ணை தான் கட்டப்போறோம், அவ விருப்பத்தோட தான் ஒத்துக்கிறா.. அவ ராஜாக்கு நல்லா குணமாகனும்னு தான் எதிர்பார்க்கிறா, அதனால ஒன்னும் பயப்பட தேவையில்லை, எங்க ராஜா சீக்கிரம் குணமாகறது எங்களுக்கு முக்கியம் டாக்டர்..” என்று அண்ணாமலை கெஞ்சினார். மருத்துவரும் அதற்கு இறங்கி வந்தார். கூடவே இப்போதைக்கு இந்த திருமணம் பற்றி யாருக்கும் தெரிய வேண்டாம், கோர்ட்ல கேஸ் நடக்கிற சமயத்துல இதுப்பத்தி வெளிய தெரிய வேண்டாம் என்று நினைக்கிறோம், ராஜா குணமாகும் போது தான் வீட்டில் உள்ளவர்களிடமும் சொல்லலாம் என்று இருக்கிறோம், என்று அண்ணாமலை கேட்டாதற்கு மருத்துவருக்கும் அவரை பற்றி அரசல் புரசலாக தெரியும் என்பதால், இதற்கு தலையை ஆட்டினார்.
மருத்துவர் ஒத்துக் கொண்டதும் அடுத்து அவர்கள் தங்கள் சம்மதத்தை கனகாவிடம் கூறினார்கள். அதைக் கேட்டதும் கனகாவின் வாயெல்லாம் பல்.. அவரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவருக்கு பணத்தின் மேல் ஆசை தான், ஆனால் அதற்காக உடலை விற்று பணத்தை பெறுவதை அவரும் கொஞ்சம் இழிவாகத் தான் நினைத்தார். அதிலும் இல்லாமல் இதனால் அவருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது அதையும் யோசித்தார்.
மேனேஜர் முத்து கொஞ்சம் விலக்கமாக எல்லாம் சொல்லி தான் கனகாவை ஒற்றுக் கொள்ள வைக்க நினைத்தான். அண்ணாமலை ஒன்னும் இந்த எஸ்டேட்க்கு முதலாளி இல்ல, துஷ்யந்தும் அவங்க தம்பியும் தான் இந்த சொத்துக்கெல்லாம் வாரிசு, அவர் குணமாகறது இப்போ ரொம்ப முக்கியம் என்று மேனேஜர் சொன்னதும் கனகாவின் மனது வேறொரு திட்டம் போட்டது. கங்காவை துஷ்யந்திற்கு திருமணம் முடித்துவிட்டால், யமுனாவின் அறுவை சிகிச்சைக்கு பணமும் கிடைக்கும், அதே சமயம் அவள் அந்த வீட்டின் மருமகள் என்ற பட்சத்தில் காலம் முழுதும் அவளோடு ஒட்டிக் கொண்டு அந்த வீட்டில் உட்கார்ந்தே சாப்பிடலாம், துஷ்யந்திற்கு குணமானாலும் குணமாகாவிட்டாலும் அவள் அந்த வீட்டு மருமகள் தானே, என்ற யோசனை மனதில் தோன்றவே, அதை மேனேஜரிடம் கூறினாள். இதற்கு அவர்கள் ஒத்துக் கொண்டால் லாபம், இல்லையென்றால் கங்கா நினைத்தப்படி மதர் ஜெர்மனிடம் பணம் வாங்கிக் கொள்ளட்டும் என்று நினைத்து தான் மேனேஜரிடம் இந்த திட்டத்தை கனகா கூறினார். இப்போது அதுவும் கைக்கூடி வந்ததில் அவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி வந்தது. ஆனால் கங்கா இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே! என்ற கவலையும் அவருக்கு இருந்தது.