(Reading time: 17 - 33 minutes)

36. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

து கெட்டவர்களுக்கான காலம், அவர்கள் நினைப்பதெல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. அது நல்லதாக இருந்தாலும் சரி. கெட்டதாக இருந்தாலும் சரி. ஆனால் அதில் சில நல்ல உள்ளங்கள் அடிப்பட்டு போகிறதே! கங்கா, துஷ்யந்தை பார்த்துக் கொண்டிருந்த வாணியின் மனம் இப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தது.

மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று துஷ்யந்த் முழுக்க குணமாகியிருந்தான். வாணியும் அதை தானே எதிர்பார்த்தார். ஆனாலும் மனம் முழுமையாய் அதில் மகிழ்ச்சியடையவில்லை. தோட்டத்தில் துஷ்யந்தின் கைகளுடன் தன் கைகளை கோர்த்தப்படி நடை பயின்று கொண்டிருந்த கங்காவை பார்க்கும் போது, அவள் முகத்திலும் துஷ்யந்த் குணமடைந்துவிட்டான் என்ற திருப்தி நன்றாகவே தெரிந்தது. ஆனால் அந்த அளவிற்கு  திருப்தி அடைந்தது போதும் என்பது போல் அவளுக்கு இல்லையே! இன்னும் அவள் வாழ்க்கை அவனோடு நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.. ஆனால் அது நடக்குமா? அதை நினைத்து தான் வாணி கவலைக் கொண்டார்.

அண்ணாமலையும் வாணி போல் துஷ்யந்த் குணமடைய வேண்டுமென்று தான் நினைத்தார்..  அதிலும் அவருக்கு துஷ்யந்தோடு ரத்த சம்பந்த உறவும் உரிமையும் இருக்கிறது. அதிக பாசமும் இருக்கிறது. அதைவிட அவருக்கு ஜாதி பற்று தான் அதிகம், அது வாணிக்கு நன்றாகவே தெரியும்.. கங்கா துஷ்யந்த் திருமணத்தை நடத்தும் போதே அதில் அவர் கங்காவுக்கு ஏதோ அநியாயம் செய்யப் போகிறார் என்பதை வாணி அறிந்து தான் இருந்தார். ஆனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தான் தெரியவில்லை. அதைப்பற்றி கங்காவிடமும் சொல்ல முடியவில்லை. அவருக்கு அண்ணாமலையைப் பற்றி நன்கு தெரியும்.. அவருக்கு பயப்பட வேண்டிய நிர்பந்தம் வாணிக்கு உள்ளது.

சிரித்தப்படி நிற்கும் கங்காவை பார்த்த போது முதல் முதலாய் அவள் இந்த பங்களாவிற்குள் அடியெடுத்து வைத்ததை வாணி நினைவு கூர்ந்தார். அவர் தான் கங்காவையும் துஷ்யந்தையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார். என்னவோ கங்காவிடம் அப்போதே அவருக்கு நெருக்கமான உணர்வு தோன்றியது. இருவருக்கும் சில விஷயங்களில் தொடர்பு இருந்தது.

இருவருக்குமே அன்னை தந்தையில்லை, வாணியை போலவே கங்காவிற்கும் தன் தங்கை மீது பாசம் உண்டு. கங்காவை போலவே அவருக்கும் கிட்டத்தட்ட இந்த வயதில் தான் திருமணம் நடந்தது. ஆனால் வாணியையும் அவரது தங்கையை பார்த்துக் கொள்ள அவர்களுக்கு அவர்களின் சித்தப்பா குடும்பம் இருந்தது. அவர்கள் தான் வாணிக்கும் அவரது தங்கைக்கும் திருமணம் செய்து வைத்தனர். அன்னை தந்தை போல அதிக பாசம் காட்டவில்லையென்றாலும் வாணிக்கும் அவரது தங்கைக்கும் செய்ய வேண்டிய கடமைகளை சரியாகவே செய்தனர். உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தாகிவிட்டது, அதன்பிறகு உங்கள் கணவரோடு தான் உங்கள் பயணம் என்பதை தெளிவுப் படுத்தினர். அதற்கேற்றார்போல் இருவருக்கும் அன்பான கணவன் அமைந்தார்கள்.

சில வருடங்களிலேயே கணவன் இறந்த போதும் கூட வாணி திரும்ப சித்தப்பா வீட்டில் நிற்கவில்லை. ஆனாலும் உறவென்ற முறையில் அவளுக்கான ஆறுதலும் கிடைத்தது. வருடங்கள் கடந்த பின்பும் இப்போதும் சித்தப்பாவின் மகன் அவருக்கும் அவரின் தங்கைக்கும் ஒரு நல்ல சகோதரனாக இருக்கிறான். இருந்தும் வாணி யாருக்கும் பாரமாகி போய்விடக் கூடாதென்று ஒதுங்கியே இருக்கின்றார்.

ஆனால் அன்னை தந்தையின் மறைவுக்குப் பிறகு கங்காவிற்கும் அவளின் சகோதரிக்கும் இப்படி ஒரு நிலை வந்ததும், கங்காவிற்கு இப்படி ஒரு திருமணமும் நடந்ததை பார்க்கும் போது, வாணிக்கு இந்த அளவுக்கெல்லாம் கஷ்டம் வந்ததில்லை என்று தான் தோன்றியது.

ன்று இரவு இருவருக்கும் முதல் இரவுக்கான ஏற்பாடு நடந்தது. கங்காவிடம் மருந்து கொடுத்து அனுப்புவதாக துஷ்யந்திடம் சொல்லி அனுப்பியிருந்ததால் அவன் அமைதியாகவே அவளுக்காக காத்திருந்தான். ஆனால் கங்கா மனதில் தான் அலைப்புறுதல்கள் இருந்தன, திருமணம் என்றால் பெண்ணுக்கு வரும் இயல்பான கனவுகள், கற்பனைகள் எதுவுமே அவளுக்கு இல்லை. துணிந்து இந்த முடிவை எடுத்தாகிவிட்டது. ஆனால் அடுத்து என்ன? என்ற கேள்வியே பெரிதாக தெரிந்தது.

மனதில் ஏற்பட்ட குழப்பம் முகத்தில் தெரிய, பயத்தோடு அமர்ந்திருந்தவளை வாணி தான் அலங்கரித்தார். அவளின் பயத்தை உணர்ந்தவராக அவளை இரு தோள்களிலும் கைவைத்து ஆறுதல் தர முயற்சித்தார். கங்காவும் அதை புரிந்துக் கொண்டாள். அந்த நேரம் அறைக்குள் நுழைந்தார் கனகா. அவரை பார்த்த கங்கா தானாக எழுந்துக் கொண்டாள். இந்த பயம் ஒருப்பக்கம் என்றால், இன்னொருப் பக்கமோ, யமுனாவை நினைத்து அவள் கவலைக் கொண்டிருந்தாள். கல்யாணம் என்று இருவரும் காலையிலேயே கிளம்பி வந்தவர்கள் தான், அதன்பின் தான் யமுனா பள்ளிக்கு சென்றிருப்பாள். மாலையே வீடு திரும்பியிருப்பாள். பக்கத்தில் இருந்த ராதா அக்காவிடம் யமுனா வந்தால் கொஞ்சம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வந்தார்கள்.

எப்போதோ  யமுனா வீட்டுக்கு வந்திருப்பாள். இரவாகிவிட்டது தனியாக வேறு இருப்பாள். அத்தை இன்னும் செல்லாமல் இருக்கிறார்களே! என்ற கவலையும் அவளுக்கு இருந்தது. இந்த நேரத்தில் என்னத்தான் பயமும் பதட்டமும் இருந்தாலும், அதற்காக தன் அத்தை உடனிருந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றக் கூட இல்லை. என்னவோ வாணி உடன் இருப்பதே அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

“அத்தை.. யமுனா தனியா இருப்பாளே!”

“தெரியும்.. நானும் இப்போ வீட்டுக்கு தான் போகப் போறேன், மேனேஜர் கார்ல கூட்டிட்டு போய் விட்றேன்னு சொல்லியிருக்கார். அதுக்கு முன்ன உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்றவர், வாணியை பார்க்க, தனியாக பேச நினைக்கிறார் என்ற காரணத்தை புரிந்துக் கொண்ட வாணியோ,

“நான் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்.. நீங்க பேசிட்டு இருங்க..” என்று சொல்லிட்டு அந்த இடத்தை விட்டுச் சென்றார். அவர் போனதும் கங்காவின் அருகில் வந்த கனகா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.