(Reading time: 17 - 33 minutes)

ங்காவின் நிலை கண்டு வாணி மட்டும் இல்லாமல் துஷ்யந்திற்கு வைத்தியம் பார்க்க வந்த மருத்துவரும் கவலைக் கொண்டார். கங்கா இடத்தில் வேறு ஒரு பெண் இருந்தால் இவ்வளவு தூரம் தாக்குப் பிடித்திருப்பாளா? என்பது சந்தேகம் தான், மனரீதியாக பிரச்சனையில் இருக்கும் ஒருவனுடனான தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது அவருக்கும் புரிந்து தான் இருந்தது. ஆனால் அண்ணாமலையின் பேச்சை மீறி ஏதும் செய்ய முடியவில்லை. இருந்தும் துஷ்யந்த் ஓரளவுக்கு சரியானதற்கு கங்கா தான் காரணம் என்பதை நன்கு அறிந்தார். வாழ்க்கை இப்படியே சென்றுவிடுமோ! என்று அந்த பெண் மனதில் பதிந்து விடக் கூடாது என்று நினைத்தவர், துஷ்யந்தை குணப்படுத்துவதும் அவளால் மட்டுமே முடியும் என்றும் புரிந்துக் கொண்டார். அதனால் அவளிடம் பேசினார்.

“உங்க ஹஸ்பண்ட் குணமாகறது உங்க கையில் தான்ம்மா இருக்கு.. எதிர்பாராத அளவு கிடைச்ச தோல்வி, ஏமாற்றம், அதெல்லாம் நான் தான் சரிப்பண்ணனும், அது என்னால முடியுமான்னு பயம், என்கூட இதெல்லாம் சரி செய்ய ஆள் இல்லையேன்னு ஒரு எண்ணம், இதுதான் அவருக்கு இருக்க பிரச்சனையே!

முதலில் அவரை இப்படி ரூம்ல அடைச்சு வச்சிருக்காம வெளிய கூட்டுட்டு வாங்க, அவரோட நிறைய பேசுங்க, தோல்வி ஒன்னும் பெரிய விஷயமில்லன்னு உணர்த்துங்க.. அவருக்கு தன்னம்பிக்கையை வளர்க்க, நிறைய புக்ஸ் படிச்சு காட்டுங்க.. நீங்க அவருக்கு துணையா இருப்பீங்கன்னு சொல்லி புரிய வைங்க.. அப்பப்போ வாக்கிங் போங்க.. நான் உங்களுக்கு தியானம் சொல்லிக் கொடுக்கிறேன், அதை அவருக்கு கத்துக் கொடுங்க.. இதெல்லாம் ஆரம்பத்துல இருந்து சொல்றது தான், ஆனா அவர் யாரோட பேச்சையும் கேட்கறதில்ல, ஆனா உங்க பேச்சை அவர் கேட்பாரு.. உங்களால தான் அவரை சரிப்பண்ண முடியும்..” என்று சொன்னப்போது, கங்காவிற்கும் துஷ்யந்தை சரி செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. அவனுக்கு இருக்கும் மனோரீதியான பிரச்சனைகள் அவளுக்கு தெரியவில்லையென்றாலும், இந்த காரணங்களால் தான் போதை பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறான் என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

மருத்துவர் சொல்வதையெல்லாம் என்னால் செய்ய முடியுமா? என்ற அந்த வயதுக்குறிய பயமும் பதட்டமும் அவளுக்கு இருந்தாலும், முடித்து விட முடியும் என்ற நம்பிக்கையும் மன தைரியமும் அவளுக்கு இருந்தது. அதனால் மருத்துவர் சொன்னதையெல்லாம் அவள் செய்ய ஆரம்பித்தாள். அவனோடு தான் இனி தன் வாழ்க்கை எனும்போது அதை சரி செய்து அவனுடன் வாழ்ந்து காட்ட வேண்டுமே! என்பதை மனதில் கொண்டாள். கூடவே அந்த நேரம் தான் யமுனாவை மருத்துவனையில் சேர்த்திருந்தார்கள். அவளோடு உடன் இருந்து அவளை பார்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் யமுனாவுக்கும் சேர்த்து அவனை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். அப்படியாவது யமுனா அறுவை சிகிச்சையெல்லாம் நல்லப்படியாக முடிந்து வீடு திரும்ப வேண்டும் என்று மனதில் பிரார்த்தனை வைத்தாள்.

கங்கா எடுக்கும் முயற்சிக்கு துஷ்யந்தின் ஒத்துழைப்பும் அவசியம் வேண்டுமே! அவள் சொல்வதையெல்லாம் கேட்டு அவன் செய்வானா? என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது.. ஆனால் அந்த சந்தேகத்திற்கு அவசியமே இல்லை என்பது போல் துஷ்யந்த் அவள் சொல்வதையெல்லாம் கேட்டான். சிறு வயதிலிருந்தே தாய், தந்தையின் அரவணைப்புக்கு ஏங்கியவன், அவன் பிறந்த முதலே கோமதி படுத்த படுக்கையாக, குழந்தையில் அது அவனுக்கு தெரியவில்லையென்றாலும், வளர வளர அன்னையின் அரவணைப்புக்கு அவன் ஏங்கியிருக்கிறான்..

குழந்தை அவனை அறியாமல் உடம்பு முடியாத தன் தாயை அவன் கஷ்டப்படுத்திவிடுவானோ என்று அவன் தந்தை, “அம்மாக்கு உடம்பு சரியில்லை, ராஜா கிட்ட போனா அவங்களுக்கு வலிக்கும் என்று அவனுக்கு மூன்று வயதிலேயே சொல்லி கொடுத்திருந்தார். சரி தாயின் அரவணைப்பும் சேர்த்து தந்தையிடம் அவன் எதிர்பார்க்க, வேலை பளு காரணமாக அவரால் அவனுடன் நேரம் செலவிட முடியவில்லை. இதில் அவன் ஐந்து வயதில் செல்வா பிறக்கும்போது, பிறந்த குழந்தையிடம் கவனம் செலுத்தும்போது, அதை பார்த்து அவன் ஏங்கி விடக் கூடாது என்பதற்காக, “நீ பெரியவனாயிட்ட, இனி அம்மாவையும் தம்பியையும் நீதான் பார்த்துக்கனும்..” என்று அவன் தந்தை அடிக்கடி சொல்லி, அதுவே அவன் மனதில் பதிந்துவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.