(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 01 - தேவி

Kaathalana nesamo

ராம் இல்லம் .. காலை ஐந்து மணிக்கு “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா “ என்று சுப்ரபாதம் ஒலிக்க, காலை நேர பரபரப்பு ஆரம்பமாகியது.

வீட்டு வாசல் தெளித்து கோலம் போட்டிருக்க, வீட்டின் உள்ளே காபி டிக்காஷன் இரங்கும் மணம் வாசல் வரை வந்தது.

வீட்டு தலைவியான கௌசல்யா குளித்து, பூஜை அறையில் விளக்கேற்றிக் கொண்டு இருக்க, தலைவரான ஜெகன்னதானோ தோட்டத்தை சுற்றி வாக்கிங் போய்விட்டு வந்து பேப்பரில் மூழ்கி இருந்தார்.

வாக்கிங் சென்று வந்த மாமனாருக்கு காபி தயார் செய்து கொண்டு இருந்தாள் மைதிலி.. இந்த குடும்பத்தின் தற்போதைய ஆணி வேர் அவள்தான்.

அவள் மாமியார் கௌசல்யா எப்படி அந்த குடும்பத்தை அரவணைத்துக் கொண்டு சென்றாரோ , அதை தன் மருமகளுக்கும் கற்றுக் கொடுத்து இருந்தார். அதே போல் ஜெகன்னதானோ தொழில் முழுக்க தன் பையன் ராமின் கையில் கொடுத்துவிட்டு ஒதுங்கி விட்டார்.

அதிலும் பேரன் ஷ்யாம் படித்து முடித்து தொழிலிலுக்கு வரவும், அவனின் வேகம் பார்த்து மிரண்டு தான் போனார் எனலாம். ராமும் வேகம்தான் என்றாலும், அதில் ஒரு நிதானமும் இருக்கும். முடிவு எடுக்கும் முன் பல தடவை யோசித்து எடுப்பான்.. அதனால் அவன் நிர்வாகத்திற்கு வரும்போதே அவர் தலையீட்டை குறைத்துக் கொண்டார்.

அவரின் பேரன் ஷ்யாமோ ராமிற்கு மேல் பாய்ந்தான். அவன் எடுக்கும் முடிவு வேகமும், சரியானதாகவும் இருந்தது. யாருக்கும் எதை யோசிக்கவும் நேரம் கொடுக்காமல் அவன் ஜெயித்துக் கொண்டு இருந்தான். அதனால் அவனும் உள்ளே நுழைந்ததும் தானாகவே ஓய்வெடுத்துக் கொண்டார்.

மாமனாருக்கு காபி கலந்து கொண்டு இருக்கும்போதே . தன் மகனின் குரலும் கேட்க, முகத்தில் புன்னகையோடு எல்லோருக்கும் காபி கலக்க ஆரம்பித்தாள் மைதிலி. அவள் காதோ ஹாலில் நடப்பவற்றை கவனிக்க ஆரம்பித்தது.

“ஹாய்.. கிராண்ட் டாடி... இன்னைக்கு எத்தனை பேரை சைட் அடிச்சுட்டு வந்தீங்க..?” என்று அவர் அருகில் அமர,

ராமின் குரல் “ஷ்யாம்..” என்று அதட்டலாக வந்தது.

“ஐயோ .. இந்த ரூல்ஸ் ராமானுஜம் இங்கே இருக்கறத பார்க்கலையே” என்று முனகியவன்,

“சும்மாதான் பா” என்றான்.

“ஏண்டா.. நான் வீட்டை சுத்தி நடந்துட்டு வரேன்.. இதுலே யாரைடா சைட் அடிக்க முடியும்? “ என்று தானாகவே சிக்கினார் அவன் தாத்தா.

“அப்போ.. உங்களுக்கு வெளியே வாக்கிங் போய் நாலு பேரை பார்த்துட்டு வரணும்ன்னு அப்படிதானே.. கௌசி பாட்டி... உன் வீட்டுக்காரர் என்ன சொல்றார் கேட்டியா?” என்று சத்தமாக கூப்பிட,

“ஆரம்பிச்சுட்டாண்டா.. ஏண்டா.. ஏற்கனவே சுப்ரபாதம் தானே ஓடிட்டு இருக்கு.. நீ ஏன் இப்போ சஹாஸ்ர நாமத்துக்கு அடி போடுற..? “

“சும்மாஆஆஆ..” என்று கண்ணடித்தான்.

இப்போது உள்ளிருந்து மைதிலி வர தன்னை போல் அடங்கி அமர்ந்தான் ஷ்யாம். அது என்னவோ வீட்டில் எல்லோருக்கும் செல்ல பிள்ளைதான் ஷ்யாம்.. ஆனானப்பட்ட ரூல்ஸ் ராமானுஜம் என்று செல்லமாக எல்லோராலும் சொல்லப்படும் ராமின் வார்த்தைகள் கூட ஷ்யமிடத்தில் சமயத்தில் விடுபடும்.. ஆனால் மைதிலி சொல்வதை துளியும் அடிபிசகாமல் கேட்பவன் இந்த ஷ்யாம்..

உள்ளிருந்து வரும்போதே

“ஷ்யாம்.. தாத்தா கிட்டே என்ன மரியாதை இல்லாத பேச்சு?” “ என

“சாரி மா... சாரி தாத்தா..” என்றான்.

காபி தட்டோடு அவள் வரவும், கௌசல்யாவும் பூஜை முடித்து வந்தார். எல்லோருக்கும் எடுத்து கொடுக்க, ஒரு கப் மட்டும் எக்ஸ்ட்ரா இருந்தது. அதற்குண்டான ஆள் அங்கே இல்லை.

மைதிலி “சுமி .. இன்னும் எழுந்து வரலையா?” என்று வினவ, சரியாக அவர்கள் இருக்கும் இடம் ஓடி வந்த சுமி,

“குட் மார்னிங் மை டார்லிங்க்ஸ்.. மிது டார்லிங் ஸ்பெஷல் குட் மார்னிங்.. என் காபி ப்ளீஸ்”  என

சுமியின் கையை தட்டி விட்ட, மைதிலி

“எத்தனை மணிக்கு எழுந்த? குளிச்சுட்டு தான் காபி குடிக்க வரணும்ன்னு சொல்லிருக்கேன்லே?” என்று கேட்க

“அம்மா.. அவ பல் தேய்ச்சாளா கேளுங்க?:” என்றான் ஷ்யாம்.

“அடேய்... துரோகி..” என்று அவனை அடிக்க போனவள், அவள் அம்மாவின் முறைப்பை பார்த்து அடங்கினவளாக

“இல்லமா.. நான் பல் தேச்சுட்டேன்.. பாருங்க.. என் பேஸ்ட்லே உப்பு, புதினா, வேம்பு எல்லாம் கலந்து இருக்கு.. “ என்று ஈ என்று இளித்தாள்.

“ஐயோ .. பயமா இருக்கே.. அடியேய்... உன் டிராகுலா வாயை மூடு.. சின்ன புள்ள பார்த்து பயந்துருவேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.