(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 21 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

தழ் திறந்து காதலை சொல்லிக்கொள்ளாத போதும், விழி வழியே காதல் வலம் வந்து கொண்டு தான் இருந்த்து சாரு மற்றும் கௌஷிக்கின் இடையே…

இருவரும் அதனை உணர்ந்தும் உணராதவாறு தங்களுக்குள் மௌனத்திரையைப் போட்டுக்கொண்டு நடமாடிட, இன்று அதுவும் உடைந்து சின்னாபின்னமாகி போனது கண நேரத்தில்…

அவளின் தவிப்பும், பயமும் அவனுக்குள் ஒரு படபடப்பினை உருவாக்கிட, அதனை அவன் போக்கிட வேண்டும் என்று துடித்திட்டான் மிகவும்…

“பயப்படாதே…” என வார்த்தைகளினால் கூறினாலும், அவள் பயம் போகாதென உணர்ந்தவன், விழிகளினால் அதனை உணர்த்திட,

அதற்கு மேலும் தாங்கிடாத சாருவின் மனமோ, தன்னவனிடம் தஞ்சம் புகுந்த்து சிறிதும் தாமதிக்காமல்..

அவளின் பெயரை அழைத்து, இமை மூடி திறந்து “நான் உன் அருகில் இருக்கையில் பயம் எதற்கு?...” என தன்னவன் உணர்த்திடுகையில், அந்த பெண் தான் என்ன செய்திடுவாள்?...

“நானிருக்கிறேனடி….” என தன்னவனும் தன் கரம் நீட்டிடுகையில் பெண்ணானவள் அதில் தன் கரம் பதித்திடாமல் இருந்திடுவாளா?...

பயம் பாதி, சந்தோஷம் மீதியுமாய் அவள் மனது குதித்திட, அதனை எப்படி வெளிப்படுத்துவது என்று அறியாது, அவளே எதிர்பாராத விதத்தில், அவனிடத்தில் தன் கரத்தினை சேர்த்து, அவன் தோள் சாய்ந்திட்டாள் அம்மங்கையும் அவனது காதலில் திளைத்தபடி…

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு, ப்ளைட் டெல்லியில் லேண்ட் ஆகப்போவதாக அறிவிப்பு வர, மெல்ல கண் விழித்திட்டாள் சாரு…

விழித்தவளுக்கு தான் ப்ளைட்டில் இருப்பது நினைவு வர, கூடவே ஒரு கரத்தினைப் பற்றியிருப்பதும் புரிந்திட்டது…

அதுவரை தலையணையாக்கி அவள் சாய்ந்திருந்த அவனது தோளை விட்டு சட்டென்று அவள் விலக, அவனும் விழித்துக்கொண்டான் அவளது அசைவில்…

அவன் மெல்ல இமைகளைப் பிரிக்க போராடுகையில், தான் இருந்திட்ட தோற்றம் அவளுக்கு சொல்ல முடியாத உணர்வினை பரிசளிக்க, அவனது கரத்தினில் இருந்த அவளது விரல்களை விலக்க நினைத்தாள் அவள்…

அதில் முழுதும் சுதாரித்தவன், அவள் விரல்களை எடுத்துக்கொள்ள முனைவது புரிந்து அவள் விரலைப் பற்றியிருந்த அவனது விரல்களை பிரித்திட, படக்கென்று தன் விரல்களை உருவிக்கொண்டாள் அவள் வேகமாய்…

“சாரி….” தன்னை மீறி அவள் இதழ்கள் உச்சரிக்க, உள்ளமோ நாணத்தில் சிவந்து துடித்துப்போனது அக்கணம்…

அவளது மன்னிப்பையும், அதன் பிறகான அவளது மாற்றத்தையும் அவன் கவனித்திடாமல் இல்லை… இருந்தும் மௌனம் காத்தான் அவன் எதுவுமே பேசிடாது…

ப்ளைட் லேண்டிங்க் ஆகப்போகிறது என்பதை உணர்ந்தவளுக்கு தலைசுற்றிக்கொண்டு வர, அப்படியே சீட்டில் சாய்ந்து கண் மூடிப்பார்த்தாள் அவள்…

ஹ்ம்ம்…ஹூம்… யாதொரு பலனும் கிட்டாமல் போகவே, பதட்டம் நிறைந்தவளாய் காணப்பட்டாள் அவள்…

அதற்கு மேலும் அமைதியாய் இருப்பது தவறு என்று உணர்ந்த கௌஷிக், “சாரு….” என்றழைத்திட, அவள் கண் விழித்திட்டாள் வேகத்துடனும், பதட்டத்துடனும்…

“ரிலாக்ஸ் சாரு…” என்றவன் அவள் அந்த சூழ்நிலையில் சற்று திணறுவது போல் இருக்க, “ஒன்னுமில்லை… ரிலாக்ஸ்…” என கைகளை ஆட்டி அவன் கூறிட, அவன் கைகள் ஆடிய விதத்தில் விழிகளைப் பதித்திட்டாள் அவள்…

அவளின் கவனம் சற்றே பதட்டத்திலிருந்து தன் பக்கம் திரும்புவதை கவனித்தவனின் மனதில் மெல்லிய ஆசுவாசம் எழ, அதனை வெளிவராது உள்ளேயே அமிழ்த்திவிட்டு அவளிடம் திரும்பினான் அவன்…

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேட்டியில தைரியமா பதில் சொன்ன அந்த சாருவா இப்படி சாதாரண விஷயத்துக்கு பதட்டம் ஆகுறது?... விக்கிக்கு ஒரு பிரச்சினைன்னு வந்தப்போ, கொஞ்சம் கூட யோசிக்காம அட் ல நான் பண்ணுறேன்னு தைரியமா அந்த பிரச்சினையை ஈசியா ஹேண்டில் பண்ணின சாருவா இப்படி ஒரு ஃப்ளைட் லேண்டிங்க்கு கண்ணை மூடி திணறுறது?...”

புருவம் உயர்த்தி கைகளை ஆட்டி வெகு சாதாரணமாக அதே நேரம் ஓர் அழுத்தத்துடன் அவன் கேட்டிட, அவள் அவனையே பார்த்திருந்தாள்…

“இதெல்லாம் விட இதே வாரத்துல ஒரு நாள், அவார்ட் ஃபங்க்ஷன்ல அத்தனை பேர் முன்னாடி கேட்ட கேள்விக்கு வெகு இலகுவா எதுவுமே முகத்துல காட்டிக்காம கூலா, டென்ஷனே இல்லாம சிரிச்சிட்டே ரொம்ப இயல்பா பதில் சொன்ன சாருவா இன்னைக்கு இப்படி பயந்து போய் உட்கார்ந்துருக்குறது?...”

அவன் அவளுக்கு அவளது நிலையை உணர்த்தி கேட்டிட, சீட்டில் சாய்ந்திருந்தவள் அதிலிருந்து நிமிர்ந்தாள்… கைப்பிடியை இறுக பற்றியிருந்த அவள் விரல்கள் லேசாக அதிலிருந்து நழுவவும் ஆரம்பித்திட, அவளின் அச்செயல்கள் அவனுக்கு புன்னகையை தந்தது வெகுவாய்…

“உங்களைப் பார்த்து அட்மைர் ஆகியிருக்குறேன் நான்… சின்ன வயசுல உங்களுக்குன்னு ஒரு அடையாளம், அதைவிட தைரியமா எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளுற விதம், எல்லாத்துக்கும் மேல தீபனுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கி கொடுத்து இப்பவரை அவருக்கு துணை இருக்கிறது… இதெல்லாம் உங்க மேல எனக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி கொடுத்துச்சு நிறையவே… ஒரு பொண்ணா தைரியமா இத்தனை விஷயம் இருக்கு உங்களைப் பார்த்து நான் அட்மைர் பண்ண… பட் இப்போ?....” என சற்று நிறுத்தியவன்,

“எனக்கு புரியுது… பர்ஸ்ட் டைம்… ப்ளைட் ஜர்னி… லேசான பதட்டமும், நடுக்கமும் இருக்கத்தான் செய்யும்… ஆனா ஒரு தைரியமான பொண்ணான நீங்க இவ்வளவு தூரம் பயப்படலாமா?...” என நிதானமாக கேட்டிட, அவளுக்கு அவன் சொல்வது புரிந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.