(Reading time: 10 - 19 minutes)

ஒருவேளை கௌஷிக் அங்கே வராது போயிருந்தால், அவளிடம் இவ்வளவு பயம் இருந்திருக்குமா?... பயம் இருந்திருக்கும் தான்… ஆனால், இவ்வளவு பயம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே அவள் மனம் உரைத்திட்டது அவளிடம் வெகுவாகவே…

எனில் ஏனிந்த பதட்டம் தனக்கு?... என தனக்குள் அவள் கேள்வி கேட்டுக்கொள்ளவே இல்லை… ஏனெனில் அவளின் இந்த பதட்டத்துக்கான காரணம், தன்னவன் தன் அருகில் இருப்பதே… என்று உணர்ந்து கொண்டது அந்த பெண் மனமும்…

அவனருகில் பயத்தை வெளிப்படுத்திக்கொள்ள அவள் முனையாத போதும், அவளது முகமும், செய்கைகளும் அதனை காட்டிக்கொடுத்திட, அவன் அதனை இனம் கண்டுகொண்டான்…

பெண்ணின் மனமும் குழந்தையைப் போலத்தான்… தாயானவள் அருகே இருந்திட்டாலும், குழந்தை சில நேரங்களில் அழுவதில்லையா?... தாயின் அரவணைப்பு கிட்டிடுமே அதற்கு…

இங்கேயும் அதுபோலவே காதல் கொண்ட பெண்ணின் மனமானது தன்னவனின் அருகாமையை உணர்ந்திட, குதூகலம் ஒரு புறமும், அவன் அருகில் இருக்கிறானே என்ற படபடப்புடனும் அது அவளுள் அலைபாய்ந்து கொண்டிருந்தது அவளுக்கே தெரியாமல்…

ஒரு சீட் தள்ளி அமர்ந்திட்ட போதும், அவனது அருகாமையை அவள் உணரத்தான் செய்தாள்… அவள் வந்ததும், அவன் அவளைப் பார்த்திட்ட பார்வை, எழுந்து இடமளித்தது அனைத்தும் சேர்ந்து அவளை அவன் மேல் அதிகமாய் காதல் கொள்ள வைக்க, எங்கே அங்கே இருந்திட்டால் அவனைப் பார்த்திடுவோமோ, அதுவும் அம்மாவின் முன்னாடியே என்ற எண்ணம் மேலோங்க, சட்டென ரெஸ்ட் ரூம் எழுந்து சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள் சாரு…

“இங்க பாரு சாரு… அவர் ஏதோ தெரிஞ்சவ அப்படிங்கிற எண்ணத்துல தான் உனக்கு உதவி செஞ்சிருக்குறார்… அதை நீ வேற விதமா எடுத்துக்காத… உனக்குத்தான் அவரை பிடிக்கும்…. அவருக்கு இல்ல…” மனமானது வேகமாக கூறிட, மனம் கூறிய கடைசி வார்த்தையில் அவள் நிலை குலைந்தாள் சட்டென…

அந்த யோசனையிலேயே வந்தவள், அவனருகிலேயே தான் அமரப்போவதை தெரிந்ததும், அவளோ குதூகலம் கொள்ள, மனமோ, “அடிப்பாவி…” என்றது சத்தமே இல்லாது…

எனினும் அந்த குதூகலம் அவனருகில் அமர்ந்த உடனேயே பயமும் பதட்டமுமாய் மாறிட, டெல்லி போய் சேரும் வரை இப்படியே அல்லவா இருக்க வேண்டும்… என்ற எண்ணமும் வர, அவளுக்கு அப்பதட்டம் சற்றே அதிகரித்திட்டது தான்…

அவன் சீட் பெல்ட் மாட்ட உதவிய போது, அவளுள் இருந்த நடுக்கமானது பெருகிட, டேக் ஆஃப் ஆகும்போது அது இன்னமும் நீண்டது… அவனருகில் அவள் இருந்த போதும்…

“ப்ளைட் வேற டேக் ஆஃப் ஆகப்போகுது… கடவுளே, இந்த பதட்டத்தை விட, அவர் என் பக்கத்துல இருக்குற பதட்டம் தான் என்னை பயப்பட வைக்குது… இப்போ நான் என்ன் செய்ய?...” என அவள் கண் மூடி யோசித்துக்கொண்டிருக்கையில் தான், அவன் அவளை அழைத்திட்டான்…

விழி திறந்தவளின் முன் கரத்தினை அவனும் நீட்டிட, அதனை சற்றும் எதிர்பாராதவளுக்கு அந்நேரம் அவன் விரல்களைப் பற்றிக்கொள்ளவே மனம் விழைந்திட்டது…

அவன் கைகளுக்குள் தன் கரம் வைத்திட, தேகமெங்கும் ஓர் அதிர்வலை எழுந்து அவளுள் அடங்கியது மெல்ல… அது தந்த அதிர்வில் அவன் தன்னிலை இழந்து கொண்டிருக்க, அதற்கு ஏற்றாற்போல் ப்ளைட்டும் டேக் ஆஃப் ஆகிட, அவன் அவன் தோள் சாய்ந்துவிட்டாள் பதட்டமும் காதலும் கொண்டவளாய்…

தன்னை மறந்து அவள் அவன் தோளில் துயில் கொள்ள, அவனும் எழும்பவே இல்லை… ஏதோ சத்தம் கேட்டு தன் உணர்வு கொண்டவள், அவள் இருக்கும் நிலை அறிந்து எழுந்தாள் வேகமாய்…

ப்ளைட் லேண்டிங்க் ஆகும் அறிவிப்பு வருகிறது என புரிந்து கொண்டு, அவள் விரலை அவனிடமிருந்து எடுத்துக்கொள்ள விழைய, அவனோ விழித்துக்கொண்டான்…

விழித்து விட்டானே, என்ன சொல்லுவான்?... திட்டுவானா?... உரிமை எடுத்துக்கொண்டாயே என்று கோப்ப்படுவானா?... என்ன சொல்லிடுவான்?... பாவம் காதல் கொண்ட பெண்ணின் மனம் அவனின் பதிலை எண்ணி துடித்திட, அவனோ அவளின் துடிப்பை கண்டு கொண்டு அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் மெல்ல…

கடைசியில் அவளைப் பற்றி அவன் எண்ணியிருந்ததை அவன் உரைத்திட, ஒரு புறம் மகிழ்ந்த மனமோ, மறுபுறம், நான் ப்ளைட்டால தான் பதட்டப்பட்டேன்னே நினைச்சிட்டீங்களா என வருத்தம் கொண்டது லேசாக… அந்த உணர்விலேயே அவள் விரல்களும் கைப்பிடியிலிருந்து விலக, அவளும் சீட்டிலிருந்து நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்…

பின் அவன் பேசியதையே கேட்டுக்கொண்டு யோசனைகளின் மத்தியில் அவள் உழன்று கொண்டிருக்க, அவன் சாரு என அழைத்திட்டான் சற்றே அழுத்தம் கூட்டி…

அவன் அழைப்பு அவளை நிகழ்காலத்திற்கு இழுத்து வர, “என்ன யோசனை சாரு?... பயம் போயிடுச்சா?... டெல்லி ஏர்போர்ட் வந்துட்டோம்….” என கூறிட,

பதிலுக்கு எதுவுமே சொல்லாமல் இருந்தவள், சில நிமிட மௌனத்திற்கு பிறகு, “தேங்க்ஸ்….” என்றாள் மெல்ல…

அவளின் நன்றியை கேட்டு திரும்பியவன், அவளையேப் பார்த்திட்டு, பின், “எதற்கு?...” என கேட்டிட,

“என் பயம், பதட்டம் எதுக்குன்னு இன்னமும் உங்களுக்குப் புரியலைல்ல அதுக்குத்தான்…” என்றாள் மெல்ல அவனுக்கு கேட்டிடாத வண்ணம்…

அவள் உதட்டசைவிலும், அவள் விழி சொல்லிய சேதியிலும் அதனை உணர்ந்து கொண்டவன், அவளிடம் எதையும் கேட்கவும் இல்லை… சொல்லவும் இல்லை…

பின் மூவரும் அங்கிருந்து நியூ யார்க் பயணத்திற்கு தயாராக, மீண்டும் ப்ளைட் ஏறினர்…

கௌஷிக்கின் பக்கத்தில் அவளும், அவளின் பக்கத்தில் கல்யாணியும் அதே போலவே அமர்ந்திருக்க, சீட் பெல்ட்டை அவளே அணிவித்துக்கொண்டாள் இரண்டு மூன்று முறை முயற்சி செய்து… பின் ப்ளைட் டேக் ஆஃப் ஆகப்போகும் சமயத்தில் அவள் அவனைப் பார்த்துவிட்டு திரும்பிட, அவனுக்கு அவள் செயல்கள் புன்னகையைத் தந்தது…

வானில் விமானமானது பறந்து கொண்டிருக்க, அமைதியாக அமர்ந்திருந்தவளையே பார்த்துக்கொண்டிருந்த கௌஷிக், அவளருகே மெல்ல குனிந்து,

“இப்போ பயம் போயிடுச்சா?...” எனக் கேட்டிட, “ஹ்ம்ம்…” என திரும்பிடாமலே அவளும் பதில் கூறினாள்…

மீண்டும் புன்னகை அவனிடம் எட்டிப்பார்த்திட,

“தேங்க்ஸ்….” என்றான் அவனும்…

“எதுக்கு?....”

சட்டென்று கேட்டுவிட்டு அவளும் அவனைப் பார்த்திட,

“ப்ளைட் டேக் ஆஃப், லேண்டிங்க்கு தான், நீங்க பயமும் பதட்டமும் படுறதா நினைச்சு, நான் உங்ககிட்ட பேசினேன்னு நினைச்சீங்கல்ல… அதுக்குத்தான்…”

அவனும் அவள்புறம் திரும்பாமலே கூறிட, அவளுக்கு புன்னகையும் நாணமும் ஒருசேர எழுந்திட்டது…

அவள் இதழ்கள் சட்டென மலர்ந்திட, அந்நேரம் அவள் சிரிக்கிறாள் என்று உணர்ந்த அவனும் அவள் புறம் திரும்பிட, அவனுக்கும் அவளின் புன்னகை ஒட்டிக்கொண்டது….

இருவரும் சத்தம் வராமல் மெல்ல சிரித்திட, இருவருமே சகஜ நிலைக்கு வந்திருந்தனர் அதுவரை அவர்கள் ஆடிக்கொண்டிருந்த கண்ணாமூச்சி காதலில் இருந்து வெளிவந்தபடி…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 20

Episode # 22

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.