(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 12 - மது

AT THE END OF INFINITY

Heart

ன் அம்மா கிட்ட எப்படி சொல்றதுன்னு ஏன் இவ்வளவு யோசிக்கிற, வாயால தான் சொல்லு” நிதானமாக சொன்னான்.

அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவனிடம் மட்டும் தானே சொல்லியிருந்தாள். அவள் தத்தெடுக்கப் பட்டவள் என. ஒரு வேளை மறந்து விட்டானோ என்று எண்ணினாள்.

“ஹரி விளையாடாதே. அன்னிக்கு உன்னிடம் சொன்னேனே. வந்து நான்....அதாவது என்னோட அம்மா அப்பா.... என்னை......” சொல்ல முடியவில்லை அவளால். அன்று ஒரு வேகத்தில் அவனிடம் கொட்டித் தீர்த்து விட்டாள். ஆனால் இப்போது அவளால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. நடந்தது எல்லாம் கனவாகிவிடாதா என்று மனம் ஒவ்வொரு நொடியும் ஏங்கியது.

ஹர்ஷா அவளது மனநிலையை நன்றாக உணர்ந்து கொண்டான். ஒரு வாரமாக அவளை அவன் கவனித்துக் கொண்டு தான் வருகிறான்.

இது வரை பயிற்சி பெற்ற அனைத்து துறைகளிலும் அவள் எவ்வளவு ஆர்வமாக பணியை செய்தாள். நோயாளிகளை கவனித்துக் கொண்டாள். ஆனால் டெலிவரி வார்ட்டில் அவள் நுழைய கூட தயக்கம் காட்டி மற்ற பணிகளை தலை மேல் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தை அவன் நன்றாக கவனித்தே இருந்தான்.

அன்று இறுதி ஆண்டு தேர்வு முடிந்தபின் அவள் அவனிடம் கொட்டித் தீர்த்த பிறகு அவன் அதை பற்றி நிறையவே சிந்தித்தான். ஆனால் ஹவுஸ் சர்ஜன் தொடங்கியதில் இருந்து அவள் இயல்பாகவே இருந்ததால் அவனும் அந்த சிந்தனைகளை ஒதுக்கி வைத்தான்.

ஆனால் அவள் எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு எப்போதும் போல நத்தை ஓட்டிற்குள் சுருண்டு கொண்டு அவளாகவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறாள்.

தன்னைச் சுற்றி தானே சிலந்தி வலையைப் பின்னிக் கொண்டு இப்போது அதிலிருந்து வெளியே வர இயலாமல் தவிப்பதும் அவனுக்குப் புரிந்தது.

டாக்டர் துரையின் முன், “நான் பொறுப்பேற்கிறேன் எனக்கு பனிஷ்மன்ட் கொடுங்க” என்று தீர்க்கமாய் சொன்ன அந்த துணிச்சலான பெண் தான் இப்போது திக்குத் தெரியாமல், கரை எங்கே என்று காணாமல் புயலில் சிக்கிய மரக்கலம் போல தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்.

அவள் மனதை அலைகழிக்கும் அச்சுழலில் சிக்கி மூழ்கிப் போய்விடுவாளோ?

இப்படி ஓர் சூழ்நிலையில் வெறும் ஆறுதல் வார்த்தைகள் எந்த வித பயனும் இல்லை. உதவிக் கரம் கொண்டு அதிலிருந்து அவளை இன்னொருவர் மீட்டுக் கொண்டு வருவதும் முடியாத காரியம்.

அவளது தேவை ஓர் கலங்கரை விளக்கம்!!! நிலையானதொரு வழிகாட்டி!!! அது கிடைத்து விட்டால்  அவளாகவே அலைகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டு கரையை அடைந்து தன்னைத் தானே மீட்டுக் கொண்டு வந்துவிடுவாள்.

பற்றியிருந்த அவள் கரங்களை விட்டுவிடாமல் கல்லூரியின் ஆடிடோரியத்தின் வாயிலுக்கு அழைத்துச் சென்றான்.

அரங்கம் பூட்டியிருந்த போதிலும்  வராண்டாவில் ஒளிவிளக்கின் வெளிச்சம் இருந்தது.

முன் படிக்கட்டில் அவளை அமர வைத்து தானும் அமர்ந்தான்.

அவள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தாள்.

“ஹனி எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு” என்றான்.

அவள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

அமைதியாக தெளிவாக இருந்தது அவன் வதனம். அவளுக்குள் ஓர் அமைதி ஊடுருவியதை உணர்ந்தாள்.

“உன்னுடைய பையலாஜிகல் பேரண்ட்ஸ் யார் அப்படின்ற தேடல் உன் மனசுக்குள் இருக்கா. அது தான் உன்னை டிஸ்டர்ப் செய்கிறதா”

அவன் இந்தக் கேள்வியைக் கேட்கும் இந்த நொடி வரை தன்னை பெற்றவர்கள் யார் என்ற தேடலோ நினைப்போ கூட அவள் மனதில் இல்லை.

மாறாக தான் பாரதியின் கருவறையில் குடியிருக்கவில்லை, ஜெயராஜனின் உயிரணுவில் ஜனிக்கவில்லை என்பது தான் அவள் மனதை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

அதை அவனிடம் அப்படியே சொன்னாள்.

அவள் இதை தான் சொல்வாள் என்று ஓரளவு கணித்தே வைத்திருந்தான்.

“எங்க ஊர்ல தசராவின் போது ராம காவியம் நாடகம் நடக்கும். எங்க ஹவேலில நாடக கலைஞர்கள் பத்து நாளைக்கும் அரங்கேற்றுவாங்க”

அவன் சொல்லவும் இப்போது இந்தக் கதையை எதற்கு சொல்கிறான் என்று நினத்த போதும் எதுவும் பேசாமலே இருந்தாள்.  

ஜனகனுக்கும் சுனைனாவிற்கும் சீதாதேவி மகளாக பிறக்கவில்லை. ஆனால் இன்று வரையில் ஜனகன் மகளென்றால் அவள் ஜானகி. விதேக மன்னன் புத்திரி என்றால் அவள் வைதேகி” இதை அவன் சொன்னதும் ஹரிணி சற்றே ஆடிப் போனாள்.

“நானும் வைதேகி தானே. பாரதி ஜெயராஜன் மகள் வைதேகி. ஹரிணி வைதேகி” அவள் மனதிற்குள் ஓர் ஒளிச்சிதறல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.