(Reading time: 13 - 25 minutes)

“உலகத்தோட நன்மைக்காக தேவிகள் மண்ணில் தோன்றுவாங்களாம். சீதா தேவி, பார்வதி தேவி, தேவி கார்த்தியாயனி, தேவி மீனாட்சி எல்லோரும் அவங்க பெற்றோருக்கு பிறக்கவில்லை. வரமாக கிடைத்தாங்க. நீயும் இந்த உலகத்தின் நன்மைக்காக உன் அம்மா அப்பாவிற்கு மகளாக வரமாக கிடைச்சிருக்க. நீ சாதாரண பொண்ணு இல்ல ஹனி. நீ தேவி”

இப்போது அவனை மிகவும் ஆச்சரியமாக பார்த்தாள். அவன் பேச்சில் இருந்த தெளிவின் காரணமாக வந்த ஆச்சரியம் அல்ல. அவன் தன்னை இவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறானா. அதை அவள் இது வரை நினைத்தும் பார்த்ததில்லை. முதல்முறை இன்று தான் அறிந்து கொள்கிறாள்.

“என்ன இப்படி பார்க்குற. நான் உண்மையை தான் சொல்றேன்” அவன் உணர்ந்து சொல்கிறான் என்று அவளுக்குப் புரிந்து தான் இருந்தது. இருந்தாலும் ஆச்சரியம் கொள்வதை அவளால் நிறுத்த முடியவில்லை.

வானமும் ஆச்சரியம் கொண்டதோ!!! சடசடவென பெரிய நீர் துளிகள் மண்ணில் வந்து முத்துக்களாய் விழுந்தன. பல நாட்களுக்குப் பிறகு மண்ணை வானம் குளிரச் செய்தது. அவன் அவள் மனதைக் குளிரச் செய்தது போல.

மண் அந்தக் குளிர்ச்சியில் சிலிர்த்து வாசம் பரப்பியது. அவள் ஆழமாக மூச்சிழுத்து அந்த வாசத்தை தன் சுவாசத்தில் நிரப்பிக் கொண்டாள்.

“எனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும், அதுவும் மண்வாசம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்” சற்றே குதூகலமாய் அவனிடம் சொன்னாள்.

அவள் அவனுக்கு எத்தனையோ முறை யாருமே செய்யத் துணியாத உதவிகள் செய்திருக்கிறாள் தான். ஆனால் ஹர்ஷாவின் இடத்தில் இன்னொருவர் இருந்திருந்தாலும் அதைச் செய்திருப்பாள்.

ஆனால் ‘மழைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என அவளுக்கும் மழைக்கும் மட்டுமான அந்த நெருக்கத்தை அவனிடம் பகிர்ந்து கொண்டாள். இதுவரை அப்படி யாரிடமும் தன் மனதை, அதில் பொதிந்திருக்கும் எண்ணங்களை, ஆசைகளை அவள் பகிர்ந்து கொண்டதில்லை. இனியும் பகிர்ந்து கொள்வாளா தெரியவில்லை.   

ஹ்ம்ம் அப்புறம் என்ன பிடிக்கும்” அவன் கேட்டான்.

“என்ன பிடிக்கும்னா புரியலை” அவனைக் கேள்வியாய் பார்த்தாள்.

“மழை பிடிக்கும்ன்னு சொன்னியே. வேற என்னவெல்லாம் பிடிக்கும்ன்னு கேட்டேன்”

“தெரியலையே, எனக்கு வேற என்ன பிடிக்கும்” அவள் யோசித்தாள். தனக்கு என்ன பிடிக்கும் என்று கூடவா யாரேனும் யோசிப்பார்கள். ஆனால் உண்மையிலேயே அவள் யோசித்தாள்.

அந்த நொடியில் அவள், அவன் கண்களுக்கு இருபத்தி இரண்டு வயது யுவதியாக தெரியவில்லை. ஈரிரண்டு வயது மழலையாகத் தான் தெரிந்தாள்.

அவனுக்கே அந்த உணர்வு புதிதாக இருந்தது. இந்த ஹரிணி புதிதாக இருந்தாள். எத்தனையோ முறை அவளிடம் தன் அன்னையின் இயல்புகளை கண்டிருக்கிறான். தைரியம் உறுதி திடம் என்பதைத் தாண்டி ஒரு பாதுகாப்பு உணர்வை அவள் அவனுக்கு தந்திருந்தாள். இப்போதோ குஞ்சுகளை தன் சிறகினுள் பாதுகாக்கும் தாய்ப்பறவையாகிப் போனது அவன் மனம். சின்ன சின்ன ஆசைகள் நிறைந்த சந்தோஷ வானில் பறக்க அவளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என விரும்பியது அவனுள்ளம்.

சரியாக அப்போது அவனது மொபைல் சிணுங்கியது. திரையில் விடுதி மெஸ்ஸின் போன் நம்பர் தெரிய எடுத்துப் பேசினான்.

மெஸ்ஸில் வேலை பார்க்கும் சிறுவன் சீனு தான் போன் செய்திருந்தான். நேரம் ஆகிவிட்டதால் உணவு எடுத்து வைக்க வேண்டுமா என்று ஹர்ஷாவைக் கேட்டான்.

ஹர்ஷா சீனுவை கல்லூரி அரங்கத்திற்கு ஓர் பெரிய குடையை எடுத்து வருமாறு பணித்தான்.

“மழை இன்னும் விடல. நாளைக்கு எட்டு மணிக்கு வேலைக்குப் போகணுமே. சீனுவை குடை எடுத்து வர சொன்னேன்” ஹரிணியிடம் சொல்ல அவளும் சரி என்பதாய் தலையாட்டினாள்.

ஹரிணியிடம் ஒரு குடையை கொடுத்து விட்டு மற்றொரு குடையில் சீனுவின் தோளில் கை போட்டபடி அவனிடம் பேசிக் கொண்டே முன்னால் சென்று கொண்டிருந்த ஹர்ஷவர்தன் மேலும் அவளை ஆச்சரியப்படுத்தினான்.

அவனோ ராஜகுமாரன். சீனு மெஸ்ஸில் வேலை செய்யும் சாதாரண சிறுவன். எவ்வளவு சுவாதீனமாக அவன் தோள் மீது கை போட்டு அவனை குடைக்குள் அணைத்து பிடித்துக் கொண்டு செல்கிறான்.

இது வரை அவள் அவனை ஹரியாக மட்டும் பார்த்தாள். இன்று தான் அவள் கண்களுக்கு அவனே ஹரியாக தெரிந்தான்.

விடுதியை அடைந்ததும் சீனு அவளுக்கும் சேர்த்து உணவை எடுத்து வந்து கொடுக்க நன்றி தெரிவித்து விட்டு தனதறைக்கு வந்தாள்.

ரஞ்சனி மெல்லிய குரலில் மொபைலில் போன் பேசிக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.