(Reading time: 13 - 25 minutes)

ஹவுஸ் சர்ஜன் பயிற்சி போது பெருமளவு மருத்துவமனையில் தான் இருக்க நேரும் என்ற போதும் சில துறைகளில் பயிற்சியின் போது நிறைய ஓய்வு நேரமும் கிடைக்கும்.

அப்படி கிடைத்தாலும் ஹரிணி ரஞ்சனி இருவருக்கும் ஒன்றாக அமையும் என்று சொல்ல முடியாது. அப்படி அமையும் சில நேரங்களிலும் ரஞ்சனி சிறிது நாட்களாகவே போன் பேசிக் கொண்டே இருப்பதும் எங்கேனும் சென்று விட்டு நேரம் சென்று வருவதுமாய் இருந்தாள்.

“சாப்பிட்டாயா” ரஞ்சனியிடம் சைகையால் கேட்டாள் ஹரிணி.

சாப்பிட்டு விட்டதாக பதிலுக்கு சைகை செய்தவள் போனும் கையுமாக அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.

அவள் வெளியே செல்லவும் சங்கீதா உள்ளே வந்தாள்.

“ரஞ்சனி வெளியே தான் இருக்கா” சங்கீதாவைப் பார்த்ததும் ஹரிணி சொல்லிவிட்டு சாப்பிடத் தொடங்கினாள்.

“அப்படியா” என்றவள் ரஞ்சனியின் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“ரஞ்சனி அழுதுகிட்டு இருக்காளோன்னு பார்க்க வந்தேன்” ராகம் இழுத்தாள் சங்கீதா.

ஹரிணி ஏன் என்பதாக புருவங்களை மட்டும் உயர்த்தினாள்.

“ஹும்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று மனதில் நினைத்தாலும் ஹரிணியிடமா சொல்லிவிட முடியும்.

“இன்னிக்கு டாக்டர் துரைகிட்ட செம டோஸ் வாங்கினா. அவளை கெட் அவுட்ன்னு சொல்லிட்டாரே, உன்கிட்ட அவ சொல்லலையா”

“நான் இப்போ தான் வந்தேன். அவள் போன் பேசிக் கொண்டு இருந்தா”

“சர்ஜரில ஆகாஷ் சார் இருக்கார்ல” சங்கீதா அவளாவே தொடர்ந்தாள்.

“எனக்கு தெரியாது” ஹரிணி உரையாடலை கத்தரித்து விடவே விரும்பினாள் என்றாலும் வம்பு பேசுவதில் ஆர்வம் கொண்ட சங்கீதா விடுவாளா என்ன.

“பர்ஸ்ட் இயர் பிஜி (முதல் வருட முதுகலை மாணவர்), உனக்கு தெரிந்திருக்க சான்ஸ் இல்ல. நீ முடித்த பிறகு தான் அவர் ஜாயின் செய்தார். பார்க்க ஆளு செம ஸ்மார்ட்டா தான் இருக்கார்”

“சரி சங்கீதா. எனக்கு நாளைக்கு லேபர் வார்ட் எட்டு மணிக்கு போகணும். ரஞ்சனி வந்தா சொல்றேன்” வெளிப்படையாக வெளியேற சொல்லியும் கேட்காமல் அங்கேயே அமர்ந்து கொண்டாள். 

“நீ படுத்துக்கோ, நான் இங்கேயே வெயிட் செய்றேன்” என்றவளை ஹரிணியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அது ரஞ்சனியின் அறையும் தானே. ஹரிணி அடுத்த நாள் தேவனையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

“நம்ம ரஞ்சனிக்கும் அவருக்கும் லவ்ஸ்” ரகசியம் சொல்வது போல சங்கீதா சொல்லவும் ஹரிணி எந்த வித பிரதிபலிப்பையும் காட்டவில்லை.

“இன்னிக்கு ஆபரேஷன் தியேட்டர்ல எமர்ஜன்சியா ஒரு பேஷன்ட்க்கு ப்ளட் தேவைபட்டது போல. இவளை தான் ஆரேஞ் செய்து எடுத்துட்டு வர சொல்லியிருக்காங்க. இவ வழியில் ஆகாஷ் சாரைப் பார்த்து அவர் கூட பேசிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியல போல. அவ திரும்ப தியேட்டர்குள்ள போனதும் கெட் அவுட் ன்னு கத்திட்டாராம் துரை சார்”

“பேஷன்ட்க்கு என்னாச்சு. ப்ளட் கிடைச்சுதா இல்லையா” ஹரிணி பதற்றத்தோடு வினவினாள்.

“பேஷன்ட் நல்லா தான் இருக்கார். மீனா மேடம் தான் அனஸ்தடிஸ்ட். டிலே ஆகவும் அவங்களே ப்ளட் பாங்க்கு போன் செய்து அவங்க ஜூனியரை அனுப்பி வாங்கிட்டு வர சொல்லி மேனேஜ் செய்துட்டாங்க. துரை சாரை ப்ளட் வர வரைக்கும் ஓபன் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாங்க போல. இன்னிக்கு நிறைய எமர்ஜன்சி வேறா. அதான் சார் சும்மாவே டெரர் இன்னிக்கு எரிமலை ஆகிட்டார்ன்னு கேள்வி பட்டேன்” சங்கீதா சொல்லவும் பெருமூச்சு விட்டாள் ஹரிணி.

பேஷன்ட் நல்லபடியாக இருக்கிறார் என்றதுமே நிம்மதி அடைந்தாள். அதிலும் மீனா மேடம் பெயரைக் கேட்டதுமே அவளுக்குள் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

அடுத்த மாதம் ப்ரீ டைம் நிறைய கிடைக்கும். அப்போது ஹரியுடன் சென்று சாரையும் மேடமையும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

“சரி டைம் ஆச்சு. அப்புறம் வரேன்” தான் வந்த காரியம் முடிந்து விட்டதால் விடை பெற்றுக் கொண்டாள் சங்கீதா.

சங்கீதாவிற்கு இப்படி ஏதேனும் விஷயம் தெரிய வந்தால் அதை நாலு பேரிடமாவது சொல்லவில்லை என்றால் தலை வெடித்து விடும். ஆனாலும் அவள் ஒரு போதும் பொய்யாக இட்டுக் கட்டி எல்லாம் கதை பரப்ப மாட்டாள். எப்படியேனும் உண்மையை முழுமையாக சென்று தெரிந்து வந்து விடுவாள்.

ஹரிணிக்கு யார் என்ன சொன்னாலும் அதை எல்லாம் சட்டை செய்யும் பழக்கம் இல்லை தான். ஆனாலும் இன்று ரஞ்சனி செய்த செயலை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்த போதிலும் வேறு ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவள் கடமையை செய்ய தாமதம் ஏற்பட்டு இருக்கும் என்றே நினைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.