(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 05 - தேவி

Kaathalana nesamo

ன்னுடைய பாட்டி அத்தனை பேர் முன்னாடி கேட்ட விதம் மித்ராவிற்கு பிடிக்கவில்லைதான். ஆனால் தன் அப்பா, அம்மாவின் எண்ணம் தான் தனக்கும் என்று முடிவு செய்து கொண்டதாலோ, என்னவோ அதனை பெரிய விஷயமாகவும் எண்ணவில்லை.

இதற்கு பின் பேச்சுவார்த்தை நடைபெற்று, இன்னும் பதினைந்து நாளில் நிச்சயம் எனவும், இரண்டு மாதத்தில் திருமணம் எனவும் நாள் குறித்தனர்.

நிச்சயம், திருமணம் எல்லாம் பேசவும், மாப்பிள்ளையான சரவணனிடம், சபரியின் அப்பா

“சரவணன் நீங்களும், மித்ராவும் வேணும்னா தனியா பேசிட்டு வாங்க.” என்று கூறினார்.

அதற்கு சரவணன் “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார். அவங்களுக்கு விருப்பம்ன்னு அவங்க பாட்டி கேட்டதுக்கு பதில் சொல்லிட்டாங்க. என்னோட விருப்பத்தையும் என் அம்மா மூலம் சொல்லிட்டேன். வேற என்ன தனியா பேச போறோம்? இப்போவே பேசிட்டா அப்புறம் வருங்காலம் முழுக்க என்ன செய்ய போறோம். அதனால் இது எல்லாம் அவசியம் இல்லை” என்று சொன்னான்.

கொஞ்சம் உறுத்தினாலும், சரவணனின் வெளிப்படையான பேச்சை ஒருவாறு ஒத்துக் கொண்டனர்.

மீண்டும் ஜெகநாதன் “சார் எல்லாம் எதுக்கு தம்பி. ? தாத்தான்னே கூப்பிடுங்க” என,

இப்போது அவன் அம்மா “அது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் பெரியவரே. இப்போதைக்கு நாம மத்த விஷயங்களை பேசலாம்” என்று விட, சரி என்று தலையசைத்தார்.

அவர்கள் பெண்ணுக்கு தரும் சீர் செனத்தி பற்றி விரிவாக பேச, மித்ராவிற்குள் ஏதோ ஒரு உடன்படா எண்ணம் தோன்றியது.

அவர்கள் இத்தனை நகை, பணம் வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் நீங்கள் செய்யபோவதை முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். நாங்கள் எங்கள் சொந்தங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னது சற்று இடறியது.

மற்றவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை என்றாலும், கௌசல்யாவிற்கு இந்த விவரங்களை இவர்கள் இப்படி பெண், மாப்பிள்ளையை வைத்துக் கொண்டு பேசுவது பிடிக்கவில்லை. அப்படி கட்டாயம் சொந்தங்களுக்கு சொல்லத்தான் தெரிய வேண்டும் என்றாலும் கூட, அதை நாசூக்காக போனிலோ, இல்லை பெண், பிள்ளை இல்லாத சமயமோ கேட்டிருக்கலாம் என்று தோன்றியது.

ஆனால் மாப்பிள்ளை வீட்டார் எதிர்பார்தததற்கு மேலாகவே சபரி, முரளி இருவரும் மித்ராவிற்கு செய்யும் சீரை சொல்ல, அவர்கள் முகம் மலர்ந்தது. வந்தவர்கள் மகிழ்ச்சியோடு கிளம்ப, வீட்டில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியான மனநிலையே.

எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, தன் அதிகப்படி அலங்காரங்களை கலைத்து விட்டு, எளிமையாக வீட்டில் இருக்கும் உடையுடன் மித்ராவும் வந்து அமர்ந்தாள்.

தன் பாட்டி கௌசல்யாவின் தோளில் சாய்ந்த மித்ராவிடம்,

“மித்துமா. உனக்கு இந்த சம்பந்தத்துலே சந்தோஷம்தானே.” என்று கேட்டார்.

இப்போதும் அவரின் சம்பந்தியான சபரியின் மாமியார்

“அதான் அவகிட்டே கேட்கும்போதே நீங்களும் இருந்தீங்கதானே சம்பந்திம்மா. அப்புறம் என்ன கேள்வி? என்று பதில் கொடுத்தார்.

“அவளுக்கு பிடிச்சுருக்குன்னு சொன்னாதான். இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் தனியா பேசி இருந்தா, இன்னும் கொஞ்சம் சந்தோஷமா சொல்லிருப்பாளோன்னு தோணிச்சு”

“அதான் ஏன் பேச வேண்டாம்ன்னு அந்த தம்பி சொல்லிடுச்சு இல்லை.. சும்மா அவள போட்டுக் குழப்பாதீங்க சம்பந்திம்மா”

“அந்த பையன் சொன்னது புரிஞ்சது. இருந்தாலும் இந்த காலத்தில் அப்படி இருக்கிறது கொஞ்சம் யோசிக்கவும் வைக்குது”

“என்ன அந்தப்பையன், இந்தபயன்னு சொல்லிட்டு இருக்கீங்க.. மாப்பிள்ளைன்னு சொல்லி பழகுங்க. அப்படி சொல்லி பழகினாதான் மித்ரா மனசிலேயும் அது பதியும்” என்று சற்று காட்டமாக கூறவும்.

இதற்கு மேல் அந்த சம்பந்தி அம்மாவிடம் வம்பு வேண்டாம் என்று கௌசல்யா ஒதுங்கி போனார்.

சபரியின் திருமணத்தின் போதும் அவரின் கெடுபிடிகள் சற்று அதிகம்தான் என்றாலும், இருபத்தி ஐந்து வருடங்கள் கழித்தும் அவர் மாறாமல் இருப்பது சற்று எரிச்சலாக இருந்தது.

மித்ராவும் , சைந்தவியும் உள்ளே செல்ல, சைந்தவி எதுவும் கூறமால் இருப்பதை பார்த்து மித்ரா

“என்னடி சந்து.. நீ ஒன்னும் கேட்காம இருக்க?

“நீதான் சொல்லணும் மித்ரா.

“நீ என்ன நினைக்கிற?

“ஹ்ம்ம். சரவணன் பற்றி எந்த குறையும் சொல்றதுக்கு இல்லைன்னு தான் தோணுது. ஆனால் அவர் அம்மாவின் ஆதிக்கம் அவரிடம் அதிகம் இருக்கும். அத உன்னாலே சமாளிக்க முடியுமா தெரியலடி “

“ஆனால் எங்க அப்பாவே என் பாட்டி அதாவது அவங்க அம்மா சொல்றபடி தான் இன்னும் கேட்டுட்டு இருக்கார். என் அம்மாவும் அதை பெரிது படுத்திய மாதிரி இல்லையே. அப்போ அநேகமா அதிகமான ஆண்கள் அப்படிதானே இருக்காங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.