(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 08 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

து தான் என் முடிவு, இதில் எந்த மாற்றமும் இல்லை என்ற தோற்றத்தில் புகழேந்தி நிற்க, அவர் எடுத்த முடிவு சரிதானே, மகி அதை ஒத்துக் கொண்டால் என்ன? என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவசரமாக ஒரு காரியத்தை செய்தாயிற்று, இதில் தான் மட்டும் எந்த முடிவும் எடுக்க முடியாது. சுடரொளியை கலந்துக் கொள்ளாமல், தானாகவே ஏதும் முடிவு எடுத்து அது சுடருக்கு பிடிக்காமல் போனால், திரும்ப தன்னை விட்டு விலக முடிவெடுப்பாள் என்று சுடருக்காக அந்த நேரம் யோசித்த மகிழ்வேந்தனும் மனதில் ஒரு முடிவெடுத்துக் கொண்டான்.

“சரிப்பா.. அருளோட வாழ்க்கைல எனக்கும் அக்கறை இருக்கு.. ஆனா அதுக்குன்னு சுடரை விட்டுடவும் முடியாது.. அவளுக்கு இப்போ அத்தை கூட போக பிடிக்கலைங்கிறப்போ அவளை எனக்கு அங்க அனுப்ப விருப்பமில்ல.. அதே சமயம் நாங்க இங்கேயும் இருக்க முடியாது.. அதனால நாங்க தனியா போய்ட்றோம்” என்று தைரியமாகவே கூறினான்.

“மகி என்னடா பேசற?” என்று பூங்கொடி தான் பதறினார்.

“என்னங்க.. நீங்க கூப்பிட்டா சுடர் நம்மக் கூட வருவாங்க.. கூப்பிடுங்க” என்று எழில் தன் கணவனிடம் கோரிக்கை வைத்தாள்.

“இங்கப்பாரு நீ கூப்பிட்டா என்ன? நான் கூப்பிட்டா என்ன? எல்லாம் ஒன்னுத்தான், அதான் ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைப்பதா புகழ் சாரே சொல்றாரே அப்புறம் என்ன? அவளை வீட்டுக்கு வரச் சொல்லு..” என்று அனைவருக்கும் கேட்கும்படி உரக்க பேசியும் சுடர் மனம் மாறுவதாக இல்லை. அது தெரிந்ததில் மகியும் வெளியில் செல்வதில் பிடிவாதமாக இருந்தான்.

“அம்மா.. நான் ஒன்னும் உங்களை விட்டு ஒரேடியா போகலம்மா.. அருள் கல்யாணம் முடிஞ்சதும் வரத்தான் போறேன்.. சுடர் கழுத்துல அவசரமா தாலிக் கட்டினாலும், நீங்க எல்லோரும் சேர்ந்து கல்யாணத்தை நடத்தினதா தான் நாங்க எங்க வாழ்க்கையை ஆரம்பிப்போம்.. இப்போ நான் போறது தற்காலிக பிரிவு தான்ம்மா.. நீங்க கவலைப்படாம இருங்க..” என்றவன்,

“வா சுடர்..” என்று அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். அவன் செல்வதில் அங்கு யாருக்கும் விருப்பம் இல்லையென்றாலும், புகழேந்தியை மீறி எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தனர். அப்படியே மகிக்கு ஆதரவாக பேசினால், கலை அதை எப்படி எடுத்துக் கொள்வாரோ? என்ற பயம் அங்கே அனைவருக்கும் இருந்தது. ஏனென்றால் மகி வீட்டை விட்டுப் போகிறேன் என்ற போதும் கலை அமைதியாக தான் இருந்தார்.

தான் தங்கியிருக்கும் அறை சாவியை மகியிடம் கொடுக்கலாம் என்று அறிவு யோசித்தாலும் இப்போது தன் தந்தை இங்கேயே இருப்பதால் அவர் என்ன சொல்வாரோ? என்ற தயக்கத்தில் நிற்க,

“அறிவு என்னடா அமைதியா இருக்க.. இந்த நேரம் மகி எங்கப் போவான்.. உன்னோட ரூம் சாவியை அவன்கிட்ட கொடு..” என்று மாணிக்கமே அவர் வாயால் சொல்லவும், அதை நம்ப முடியாதவனாய் ஒரு பார்வை பார்த்தாலும், “இதோப்பா என்று வேகமாக வெளியே ஓடினான். மாணிக்கம் கொஞ்சம் சத்தமாகவே அனைவரின் முன்னிலையிலும் இந்த விஷயத்தை சொல்லவும், அனைவருக்கும் மகி இந்த இரவில் எங்கே இருப்பானோ? என்ற கவலை கொஞ்சம் மட்டுப்பட்டது.

எங்கே செல்வது என்ற அதே கேள்வியோடு வீட்டு வாசலை தாண்டி வந்து மகி தெருவில் நின்றான்.

“மகிழ் நீ எனக்காக பார்த்து உன்னோட வீட்டை விட்டு வர வேண்டாம்.. எனக்கு யாரும் தேவையில்லை, நீயும் தான்.  நான் தனியா மேனேஜ் பண்ணிப்பேன்.”

“நீ கொஞ்சம் சும்மா இருக்கியா? தனியா இருந்திப்பியா? எப்படி கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஏர்ப்போர்ட்ல நின்னியே அப்படியா? வீட்டுக்கும் போக மாட்டேன்னு சொல்ற.. அப்போ இந்த நைட் டைம்ல எங்க போய் என்ன பண்ணுவ?” என்றவனுக்கு இப்போது அவளை எங்கே அழைத்து செல்வது? என்ற கேள்வி பெரிதாக தெரிந்தது. அவன் மட்டும் தனியாக என்றால் எப்படியாவது அனுசரித்து கொள்வான்.  என்ன செய்யலாம்? என்று சிந்திக்கும் போதே, அறிவு அவனை அழைத்தப்படியே வெளியே வந்தான்.

“மகி இந்தா ரூம் சாவி இன்னைக்கு நைட் அங்க இருந்துக்கோங்க.. நாளைக்கு என்ன செய்றதுன்னு யோசிப்போம்..”

“சித்தப்பா ஏதாவது சொல்லப் போறார்டா..”

“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாரு.. உன்கிட்ட ரூம் சாவி எப்படி கொடுக்கறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்பவே, அவர் தான் இதை உன்கிட்ட கொடுக்க சொன்னாரு.. அதுவும் எல்லார் முன்னாடியும், அதனால இந்த இதை வாங்கிக்க.. ஆ அப்புறம், நானே ஹவுஸ் ஓனருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்றேன்.. நீ எதுவும் அவங்கக்கிட்ட பேசிக்க வேணாம் சரியா?”

“சரிடா.. அப்புறம் அருள் எங்கடா இருக்கா.. எல்லோரும் இருந்தாங்க அவளை மட்டும் காணோம்..”

“அவ ரூம்ல இருக்கான்னு நினைக்கிறேன்..”

“அவ ரொம்ப கோபமா இருக்கான்னு நினைக்கிறேன்.. அவக்கிட்ட பேசனும் போல  இருக்கு.. என்னோட போன்ல வேற சார்ஜ் இல்ல.. உன்னோட மொபைலில் இருந்து கால் பண்ணி கொடுடா..”

“அவ இப்போ எந்தளவு கோபத்துல இருக்கான்னு தெரியலையே டா.. நீ முதலில் சுடரை கூட்டிட்டுப் போ.. நானும் இலக்கியாவும்  அவக்கிட்ட பேசிட்டு, அப்புறம் உன்கிட்ட பேச சொல்றோம்..” என்றவன் இருவரையும் ஒரு வண்டி பிடித்து அனுப்பிவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.