(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

கௌஷிக்… கண்ணா… என்னப்பா இது?... வந்து கொஞ்ச நேரம் கூட ஆகலை… இப்படி அதுக்குள்ள வேலைன்னு கிளம்பினா எப்படிப்பா?...”

“அம்மா… வந்ததே அதுக்குத்தானம்மா…” என்றவன் சோபாவில் அமர்ந்தபடி தனது டையினை மாட்டிக்கொண்டிருந்தான் அவசர அவசரமாய்…

“எல்லாம் சரிதான்ப்பா… ஆனா இப்படி சாப்பிடாமா கூட கிளம்பணுமா?...”

“பரவாயில்லம்மா… ஏற்கனவே லேட் ஆகிடுச்சு… அதான்…”

“சரி இரு….” என்றவர், அவசர அவசரமாய் சமையலறைக்குள் நுழைந்தார்…

“அம்மா… எனக்கு எதுவும் வேண்டாம்…” என அவன் சொல்ல சொல்ல கேட்காமல், வேகமாக வந்தார் கைகளில் ஒரு தட்டினை ஏந்திக்கொண்டு…

“அம்மா… நான் தான் சொன்னேன்ல…” என அவன் சொல்லிமுடிக்கும் முன், அவன் வாயில் ஒரு வாய் சாதத்தை வைத்தார் கல்யாணி…

“நீ சொன்ன வரை போதும்… பேசாம சாப்பிடு…” என்றவர் மேற்கொண்டு அவனை பேசவே விடாது கையில் வைத்திருந்த தயிர் சாதத்தை அவனுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டே இருந்தார்…

அவனும் தன்னை சுற்றி இருந்த நாலைந்து ஃபைல்களை எடுத்து சரிபார்த்தபடி, கல்யாணி கொடுத்த சாப்பாடையும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, எதேச்சையாக, தனது அறையை விட்டு வெளியே வந்த சாரு, இந்த காட்சியைப் பார்த்துவிட்டு இமைக்காமல் நின்றுவிட்டாள் அப்படியே….

அவன் சாப்பிடும் அழகையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவள், இதழ்களில் தோன்றிய புன்னகையுடன் அவனையே ரசித்துக்கொண்டிருக்க,

“போதும்மா….” என சொல்லியவனுக்கு எதுவோ மனதினுள் உறுத்துவது போல் இருந்திட, சட்டென நிமிர்ந்தவனின் பார்வை, அவளது பார்வையினை இனம் கண்டு கொள்ள, அவனது இதழ்களிலும் குறுநகை எழுந்திட்டது உடனேயே…

“என்ன போதும்… மீட்டிங்க் அட்டெண்ட் பண்ண போகணும்… நிறைய அங்க பேச வேண்டி இருக்கும்… கொஞ்சம் சாப்பிட்டா எப்படி கண்ணா?...”

முதலில் ஆதங்கமும் பிறகு கொஞ்சலுமாய் கல்யாணி கேட்டிட, அவனோ சிரித்தான்…

மகன் சிரிப்பதை அருகிலிருந்து பார்த்தவர், அவனையே பார்த்திருக்க, அவனோ இன்னமும் சிரித்தான்…

“நீ இப்படி சிரிச்சு ரொம்ப நாளாச்சு கௌஷிக்… கண்ணா… இப்பதான் மனசுக்கு கொஞ்சம் நிறைவா இருக்கு….”

மகிழ்ந்தவராய் அவர் கூறிட, “உங்களுக்கு இதுதான் சந்தோஷம்ன்னா, இனி இப்படி இருக்கவே முயற்சி பண்ணுறேன்ம்மா…” என தாயின் கண்கள் பார்த்து அவன் கூற, அவரின் முகத்திலும் நிறைவான புன்னகை….

மகனை முழுவதும் சாப்பிட வைத்தவர், தன் புடவை முந்தானைக்கொண்டு அவனது வாய் துடைத்துவிட,

“அம்மா…” என சிணுங்கினான் அவன்…

மகனின் அந்த சிணுங்கல் அவரின் முகத்தில் திருப்தியை வரவழைத்திட,

“என்ன கண்ணா….” என்றார் அவர் பரிவாக….

“நான் என்ன சின்னக்குழந்தையா?...” அவன் தன் முகத்தில் தோன்றிய முறுவலையும் மீறி கேட்டிட,

“எனக்கு நீ எப்பவும் குழந்தை தான்…” என்றார் அவர்…

“சரிம்மா… நான் போயிட்டு வரேன்….”

“சரிப்பா… பார்த்து போயிட்டு வா….”

அவரும் மகனை வழியனுப்பி வைக்கும் வண்ணம் வாசல் வரை அவன் செல்வதையே பார்த்திருந்தவர், அவன் வாசல் தாண்டும் போது, அவன் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் செல்ல,

வாசலையும் தாண்டி சென்றவன், கால்களை மேற்கொண்டு நகர முயற்சித்த வேளை, சட்டென எதுவோ நினைவு வந்தவனாக நின்றிட்டான்…

அவசரமே படாது, அவன் நிதானமாக திரும்பி மேலே பார்க்க, சாரு அவனை அதுவரை பார்த்திருந்த இடத்திலிருந்து சட்டென அங்கிருந்த தூணின் பின் மறைந்து கொள்ள, அவளின் துப்பட்டா அவள் அங்கே இருப்பதை அவனுக்கு உறுதி செய்து கொடுத்தது சத்தமே இல்லாது…

அதரங்களில் உதித்திட்ட குறுநகை பெரிதாக, கைகளால் தலையை கோதிய வண்ணம் அவன் அங்கிருந்து கிளம்பிட, தூணின் பின் நின்றிட்டவளுக்கோ இதயம் தாறுமாறாய் குதித்திட்டது…

நிஜமாய் இது கனவா?... இல்லை நனவா?... தன்னைத் தானே கிள்ளி கேட்டுக்கொண்டாள் சாரு…

அவனின் நடவடிக்கை அவளுக்கு முற்றிலும் வேறுபட்டதாய் தெரிந்தது, இதுவரை அவள் பார்த்த கௌஷிக்கிலிருந்து…

சிறுபிள்ளையாய் அவன் தாய் அவனை நடத்திய விதம், அதற்கும் மேல் தாயின் மனம் கோணாது குழந்தையாகவே நடந்து கொண்ட அவனது அந்த பாசம், எல்லாவற்றிற்கும் மேல், அவனை, அவள் கவனிப்பதை உணர்ந்தும் அவன் புன்னகை புரிந்திட்ட விதம், எல்லாமே அவளுக்கு சந்தோஷச்சாரலை அள்ளித்தெளித்திட்டது உள்ளமெங்கும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.