(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 13 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

டுப்பில் வைத்திருந்த பால் அழகாக பொங்கி வழிந்தது. ஆனால் அந்த பால் பொங்கிய அளவிற்கு கூட சுடரொளியின் மனதில் சந்தோஷம் பொங்கி வழியவில்லை. பொதுவாக திருமணமானதும் தனிக்குடித்தனம் நடத்துவதையே பல பெண்கள் விரும்புவார்கள். ஆனால் அவளுக்கு ஒன்றும் அது மகிழ்ச்சி தரும் விஷயமாக இல்லை. குடும்பத்தில் உள்ள அனைவரின் சம்மதத்துடன் மகிழ்வேந்தனை மணந்து, அவர்களுக்கு பிடித்தமான மருமகளாக வாழும் வாழ்க்கையை தான் அவள் விரும்பினாள். ஆனால் அதற்கு எதிர்மாறாக நடப்பது மனதிற்கு ஒருவித சங்கடத்தையே கொடுத்தது. அருகில் நின்றிருந்த மகியை திரும்பி பார்த்தாள். அவனோ இன்முகத்துடன் பால் பொங்குவதை பார்த்தப்படி நின்றிருந்தான்.

அவனுக்கும் உள்ளுக்குள் வருத்தம் தான், பெற்றவர்கள் மனதை ஒருபுறம் கஷ்டப்படுத்தி, அருள்மொழிக்கு ஒரு விதத்தில் அநியாயம் செய்து, இப்போதோ இங்கு சந்தோஷமாக புதிதாக தனிக்குடித்தனம் நடத்த பால் காய்ச்சி கொண்டிருப்பது மனதிற்கு கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் சுடரொளிக்காக அனைத்தையும் மறைத்துக் கொண்டான்.

இப்போது இந்த நேரம் சுடருக்காக அவளோடு இருப்பது அவசியம். அருள்மொழிக்கு ஒரு நல்லது நடந்தால் தந்தை மற்றும் அத்தையின் கோபம் காணாமல் போய்விடும். சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவள் அருள், அவள் கோபம் நெடு நாட்கள் நீடிக்காது என்பது தெரியும். அதனால் இப்போது முக்கியமாக தனக்காக சாக கூட துணிந்த சுடருக்காக எப்போதும் அவள் உடன் இருக்க வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தான். இந்த நிலை இப்படியே நீடிக்க போவதில்லை. சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் அவன் மனதில் நிறையவே இருந்தது.

அதனால் தான், நேற்று பொருட்கள் வாங்க போன கடையில் அமுதனை பார்த்த கோபத்தில் வெளி வந்துவிட்டாலும், “இந்த தனிக்குடித்தனமெல்லாம் வேண்டாம் நான் ஹாஸ்ட்லில் தங்கிக்கிறேன்.. நீ வீட்டுக்கு போ..” என்று மீண்டும் ஒருமுறை சுடர் சொன்னதை காதில் வாங்காமல் இன்னொரு கடைக்கு அவளை அழைத்துச் சென்று தேவையான பொருட்களை வாங்கினான்.

மறுபடியும் ஒருமுறை அன்னையிடம் அலைபேசியில் பேசி வீட்டுக்கு அழைத்தான். அவரால் வர முடியாது.. கண்டிப்பாக என்னுடைய ஆசிர்வாதம் உண்டு என்று சொல்லி வைத்துவிட்டார். வீட்டில் உள்ள மற்ற யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. யாருக்கும் தெரிய வேண்டாம் என்ற எண்ணம் இல்லை. இது தற்காலிகம் தானே, எதற்கு அனைவரிடமும் சொல்லிக் கொண்டு என்று விட்டுவிட்டான்.

அன்னைக்கு சொன்னதும் அடுத்து எழிலுக்கும் திரும்ப ஒருமுறை ஞாபகப்படுத்தினான். அவளும் விடியற்காலையிலேயே அங்கு வந்து சேர்ந்தாள். அறிவும் மகியும் முன்னாள் மாலையே வீட்டை சுத்தப்படுத்தி வைத்துவிட்டதால், எழிலும் அந்த வீட்டின் உரிமையாளரான பெண்மணியும் சேர்ந்து பூஜை அறையை தயார் செய்து, சுடரை அருகில் அழைத்து பால் காய்ச்ச சொன்னார்கள். அந்த நிகழ்வும் நல்லப்படியாகவே நடந்தது.

“சுடர் இந்த பாலை சாமிக்கிட்ட வச்சிட்டு பூஜை பண்ணு..” என்று எழில் கூற, அவளும் அப்படியே செய்தாள். அடுத்து அங்கிருந்த அனைவருக்கும் எழில் டம்ளரில் ஊற்றிக் கொடுக்க சுடர் கொண்டு போய் கொடுத்தாள். அடுத்து காலை உணவை மட்டும் எழில் தயார் செய்துவிட்டு  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

வீட்டின் உரிமையாளர் பெண்மணி, அறிவழகன், சுடர், மகி நால்வர் மட்டுமே வீட்டில் இருந்தனர். இங்கே மகியுடன் அடிக்கடி வந்ததால்,  அந்த பெண்மணிக்கு சுடரை நன்றாக தெரியும் என்பதால், “சுடர்.. அப்பவே உனக்கும் மகிக்கும் காதல் இருக்கும்னு மனசுக்கு தோனுச்சு.. ஆனா அறிவு வந்து திடிர்னு மகிக்கும் அவங்க அத்தை பொண்ணுக்கும் நிச்சயதார்த்தம்னு சொன்னதும் நம்பவே முடியல.. எப்படி இதுக்கு மகி ஒத்துக்கிட்டான்னு இருந்துச்சு. மகியை நேர்ல பார்த்து கேக்கணும்னு நினைப்பேன்.. ஆனா அவன் என் கண்ணுலையே மாட்டல..

நேத்து முன்னாள் நைட்டு அறிவு வந்து உங்க விஷயத்தை சொன்னதும், என்னடா மகி இப்படி பண்ணிட்டானேன்னு தோணினாலும், உன்னை நினைச்சு பார்த்தப்ப, மகி பண்ணது சரியா தான் படுது..நேத்து என் பொண்ணு காட்டி தான் உங்க வீடியோ பார்த்தேன்.. அப்போ அடிச்சதுக்கு பதிலா, மகி அவங்க அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டதுமே நல்லா பளார்னு ஒரு அடி கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்.. இப்போ பாரு தேவையில்லாம அந்த பொண்ணு வாழ்க்கையும் சங்கடத்தில் நிக்குது..” என்று சொன்னதும், சுடர் முகம் மாறிவிட்டது. மனதிற்குள் ஏற்கனவே உறுத்திக் கொண்டிருந்த விஷயத்தை இப்போது அவர் சொல்லிக் காட்டியதும் கொஞ்சநஞ்சம் மனதில் இருந்த சந்தோஷம் கூட மறைந்துவிட்டது.

அவள் முக மாற்றத்தை உணர்ந்த அந்த பெண்மணியோ, “அய்யோ நான் வேற, கல்யாணம் ஆகி முதன்முதலா குடித்தனம் நடத்த பால் காய்ச்சியிருக்கீங்க.. தேவையில்லாத பேசிட்டேன் மன்னிச்சிடும்மா..” என்று மன்னிப்பு கேட்டார்.

ஆரம்பத்திலிருந்தே சுடரை மகி கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.. அவள் சந்தோஷமான மனநிலையில் இல்லை என்பதை புரிந்து தான் இருந்தான். அவள் மனநிலையை எப்படி மாற்றப் போகிறோம் என்று அவனே புரியாமல் தவித்துக் கொண்டிருக்க, இவர் இப்போது இந்த விஷயத்தை பேசியிருக்க வேண்டாம் என்று தான் அவனுக்கு தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.