(Reading time: 10 - 19 minutes)

நால்வரும் பேசிக் கொண்டிருந்த போதே, அறிவழகனின் அலைபேசி அடித்தது. அருள் தான் அழைத்திருந்தாள். அவள் தான் என்று சொல்லிக் கொள்ளாமல், “ஒரு முக்கியமான கால்.. பேசிட்டு வந்துட்றேன்..” என்று சொல்லிவிட்டு அறிவு வீட்டிலிருந்து வெளியே வந்து அவளிடம் பேசினான்.

“சொல்லு அருள்..”

“அறிவு இப்போ எங்க இருக்க? ரெஸ்ட்டாரன்ட் கிளம்பிட்டியா?”

“இல்ல அருள்.. ரூம்ல தான் இருக்கேன்.. இங்க என்னோட ரூம் இருக்க வீட்ல இன்னொரு போர்ஷன்ல மகியும் சுடரும் இருக்கப் போறாங்க.. அதுக்கு தான் இன்னிக்கு பால் காய்ச்சினாங்க.. நான் இப்போ அங்க தான் இருக்கேன்.. கொஞ்ச நேரத்துல ரெஸ்ட்டாரன்ட் கிளம்பிடுவேன்..”

அவன் சொன்னதற்கு “ஓ..” என்று மட்டும் கூறினாள். மகி தனி வீடு எடுத்து பால் காய்ச்சுகிறான் என்பதை எப்படி எடுத்துக் கொள்ள என்று தெரியவில்லை. ஒருப்பக்கம் சுடர் முக்கியம் என்பது போல் நடந்துக் கொள்கிறானே என்று கோபம் இருந்தாலும், அவனுக்கும் சுடருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்ற உண்மையையும் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.. மாமா பிடிவாதமாக வீட்டுக்குள் சேர்க்க மாட்டேன் என்று சொன்னால் என்ன தான் செய்வது.. தான் செய்த தவறை திருத்திக் கொள்ள மகி நினைக்கிறான் என்றும் புரிந்தது. ஆனாலும் “நான் கோபமாக இருந்தால் அப்படியே விட்டுவிடுவதா.. என்னை சமாதானம் செய்ய முயற்சி செய்யவில்லையே என்று மனதில் நினைத்து வருத்தப்பட்டாள்.

“அறிவு.. இப்போ நீ என்கூட ஒரு இடத்துக்கு வர முடியுமா?”

“எங்க?”

“அமுதன் வீட்டுக்கு..”

“என்னது அமுதன் வீட்டுக்கா? அவனுக்கு இங்க எங்க வீடு இருக்கு?”

“அமுதன் இப்போதைக்கு இங்க தான் இருக்காங்க” என்றவள், அவனிடம் நேற்று ஆனந்தியிடம் பேசியதை பற்றி கூறினாள்.

“இப்போ அங்க அவசியமா போய் தான் ஆகணுமா அருள்.. இவ்வளவு நடந்தப்பிறகும் அமுதன் வீட்டுக்கு போறது எனக்கு சரியாப்படல..”

“எனக்கு புரியுது அறிவு.. ஆனந்தி ஆன்ட்டி சாதாரணமாக இருந்தா கூட பரவாயில்ல.. ஆனா இப்போ அவங்க வியாதி தெரியுமில்ல.. பார்க்கணும்னு சொல்றவங்கக்கிட்ட என்னால மறுத்து பேச முடியல.. அதுக்கு தான் தனியா போகாம உன்னை கூப்பிட்றேன்.. ரொம்ப நேரம் இல்ல.. கொஞ்சம் நேரம் தான்.. ப்ளீஸ் அறிவு..”

“கலை அத்தை இப்போ இருக்க மனநிலையில் இது வேற தெரிஞ்சா எப்படி ரியாக்ட் செய்வாங்களோ.. சரி இருந்தாலும் நீ கேக்கவே போக ஒத்துக்கிறேன்.. சரி வெய்ட் பண்ணு நான் வீட்டுக்கு வந்திட்றேன்..” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன், “உடனே ஒரு முக்கியமான வேலை இருக்கு பார்த்துக்கோங்க..” என்று மகி, சுடரிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினான்.

அவன் போனதும் அந்த பெண்மணியும் தன் வீட்டுக்கு செல்வதாக கூறியவர், மதியம் சாப்பாடை வீட்டில் தான் சமைக்க வேண்டும்.. சமைத்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். இதுவரை வருத்தத்தோடு இருந்த சுடரின் முகம் இப்போது மிரட்சியை காட்டியது.

சமையலுக்கும் அவளுக்கு ரொம்ப தூரம்.. அவளுக்கு செய்ய தெரிந்ததெல்லாம் ப்ரட் டோஸ்ட், ஆம்லெட், நூடுல்ஸ் இது மட்டும் தான், மற்றப்ப்படி அவளுக்கு தானே சமைத்து சாப்பிட சந்தர்ப்பங்கள் அமைந்ததில்லை. சமைத்து பழக வேண்டும் என்ற ஆசையும் அவளுக்கு தோன்றியதில்லை. என்ன இப்படி சொல்லிவிட்டு செல்கிறார்கள் என்று மகியை பரிதாபமாக பார்த்து வைத்தாள்.

“ஹே என்ன இப்படி பயந்து பார்க்கிற.. மதியம் நம்மளே தானே சமைக்கணும் ஜமாய்ச்சிடலாம்.. நான் இருக்கப்போ உனக்கு எதுக்கு பயம்..”

“உனக்கு சமைக்க தெரியுமா மகிழ்..”

“ம்ம் தெரியும்..”

“நீ இதுவரைக்கும் என்கிட்ட சொன்னதே இல்ல..”

“நீ கேட்டதே இல்லையே.. வீட்ல பெரியவங்கல்லாம் ஏதாவது விஷேஷம்னு ஊருக்கு போயிடுவாங்க.. எங்களுக்கெல்லாம் ஸ்கூல், காலேஜ்க்கு லீவ் போட முடியாதுன்னு நாங்கல்லாம் வீட்லயே இருந்திடுவோம்.. பாட்டி மட்டும் தான் கூட துணையா இருப்பாங்க.. அவங்களை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நாங்களே வேலையெல்லாம் பகிர்ந்து செஞ்சுப்போம்..

அம்மாக்கு பொதுவா வீட்டு பொண்ணுங்க இன்னொரு வீட்டுக்கு போறதால, எப்படியும் அங்க போனா, தானா குடும்பம் குழந்தைங்கன்னு பொறுப்பு ஜாஸ்தியாகிடும்னு வீட்ல ரொம்ப கண்டிப்பா இல்லாம சில சலுகைகள் கொடுப்பாங்க.. அதே சமயம் ஆம்பிள பசங்க எல்லாமே கத்து வச்சிக்கணும்.. அப்போ தான் கல்யாணம் குடும்பம்னு ஆனாலும் மனைவிக்கு உதவியா இருக்க முடியும்னு சொல்வாங்க.. அதான் அப்பவே அம்மாக்கிட்ட இருந்து நானும் கத்துப்பேன்.. நாங்க எல்லோரும் சேர்ந்து சமையல் செஞ்சாலும் மெயினா அங்க என்னோட பங்கு தான் அதிகமா இருக்கும்.. இதுல சொந்தமா ரெஸ்ட்டாரன்ட் வேற, இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டா தானே பொறுப்பா ரெஸ்ட்டாரண்ட்ட கவனிச்சிக்க முடியும்..” என்று சொன்னதை ஆச்சர்ய்த்தோடு கேட்டிருந்தாள்.

“உனக்கு சமைக்க தெரியும்னு விட்டுட்டு நான் அமைதியா இருக்க முடியுமா? எனக்கும் கொஞ்சமாவது சமைக்க தெரியணுமே, இல்லன்னா எல்லோரும் என்னை தப்பு சொல்ல மாட்டாங்களா?”

“இது நம்ம வீடு.. நாம ரெண்டுப்பேர் மட்டும் தான் இருக்கோம்.. அப்புறம் யார் உன்னை என்ன சொல்லிடுவாங்க..?”

“நமக்கு முறைப்படி கல்யாணம் ஆகி உங்க வீட்டுக்கு போறப்போ எனக்கு ஒன்னும் தெரியலன்னா எல்லோரும் அதுக்கும் என்னை திட்டமாட்டாங்களா?” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கொஞ்சலாக கேட்டதும், அப்படியே அணைத்து அவள் இதழை சிறைப்பிடிக்க வேண்டுமென்ற ஆசையை கஷ்டப்பட்டு ஒதுக்கினான்.

“அம்மா பத்தி தெரிஞ்சும் நீ இப்படி சொல்லலாமா? அம்மாவும் நானும் உனக்கு எப்பவும் சப்போர்ட்டா இருப்போம்.. இப்போ என்ன உனக்கு சமையல் கத்துக்கணும் அப்படித்தானே.. வா நான் உனக்கு கத்துக் கொடுக்கிறேன்.. இன்னைக்கு நாம சாம்பாரும் உருளைக் கிழங்கு வறுவலும் செய்யப் போறோம்.. நான் சொல்ல சொல்ல நீ தான் செய்யப் போற..” என்றதும் ஆர்வமாய் தலையை ஆட்டினாள். அதே ஆர்வத்தை அவன் சொல்ல சொல்ல சமையலில் காட்டினாள். கொஞ்ச நேரத்திற்கு முன் இருந்த அவளின் மனநிலை மாறி இப்போது மகிழ்ச்சியோடு இருந்தாள். அதைப் பார்த்து மகிழ்வேந்தன் மனமும் நிம்மதி அடைந்தது.

உறவு வளரும்...

Episode # 12

Episode # 14

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.