(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 14 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ம்மா ஒரு ப்ரண்டை பார்க்க போகணும்.. அவ வீடு தூரம், அதனால நான் அறிவை துணைக்கு கூட்டிட்டுப் போறேன்..” என்று அன்னையிடம் பொய் சொல்லிவிட்டு தான் அருள்மொழி கிளம்பினாள்.

ஏற்கனவே ஒருமுறை அமுதன் விஷயத்தில் பொய் சொல்லிவிட்டு சென்றது தான் பிரச்சனைகளை கொண்டு வந்தது. திரும்ப அதையே செய்கிறாளே என்று அறிவழகன் நினைத்தாலும், இப்போது அத்தையிடம் உண்மையை சொல்ல முடியாது என்பதாலும், அவளுக்கு துணையாக தான் செல்வதாலும் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இருவரும் அமுதன் வீட்டு முகவரியை விசாரித்து வீட்டை அடைய மணி பதினொன்றை எட்டியது. அழைப்பு மணி அடிக்க கதவை திறந்தது அமுதவாணன் தான்.. அவனைப் பார்த்து அறிவு ஒரு பிடிக்காத பார்வை பார்த்தான். அருள்மொழிக்கோ அவனை மறுபடி மறுபடி பார்ப்பது மனதிற்கு ஒருமாதிரி பிடித்தமில்லாமல் தான் இருந்தது. இருந்தும் ஆனந்தி ஆன்டிக்காக என்று பொறுத்துக் கொண்டாள்.

“வாங்க வாங்க..” என்று அமுதன் இருவரையும் வரவேற்றான். அவள் தனியாக வரமாட்டாள் என்பது தெரியும்.. ஆனால் அறிவழகனோடு வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. நேற்றும் அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்து போக அவன் தான் வந்தான். மகியும் அறிவும் அவளுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்று தெரிந்தது தான், இருந்தாலும் மகியோடு சேர்ந்து பார்த்த அளவிற்கு அருள்மொழியை அறிவழகனோடு பார்த்ததில்லை. இருவரையும் சேர்த்து பார்க்கும்போது ஏதோ மனதில் பொறாமை எண்ணம் குடி கொண்டது.

“ரொம்ப தேங்க்ஸ் அருள்.. கேட்டதும் அம்மாக்காக வர ஒத்துக்கிட்டதுக்கு..”

“இருக்கட்டும் ஆன்ட்டி எங்க?”

“அம்மா ரூம்ல இருக்காங்க.. வாங்க” என்று அறைக்கு அழைத்துச் சென்றான்.

கட்டில் அமர்ந்தப்படி புத்தகத்தில்  ஆழ்ந்திருந்த ஆனந்தி கதவு திறக்கும் சத்தம் கேட்டு  நிமிர்ந்து பார்க்க அமுதன் முதலில் வர பின்னாலேயே அருள்மொழியும் அறிவழகனும் வந்தார்கள். அருள்மொழியை பார்த்ததும் முகத்தில் சந்தோஷத்தை காட்டியப்படி புத்தகத்தை கீழே வைத்தவர், “அட அருள் வாம்மா..” என்று வரவேற்றார்.

“ஹாய் ஆன்ட்டி எப்படி இருக்கீங்க? உடம்பு இப்போ பரவாயில்லையா?” என்று கட்டிலிலேயே அருகில் அமர்ந்தாள்.

“ம்ம் நல்லா தான்ம்மா இருக்கேன்.. ஆனா எந்த வேலையும் செய்ய விடாம அமுதா எப்பவும் என்னை ரெஸ்ட்லேயே வச்சருக்கிறதால எப்பவுமே உடம்பு சரியில்லாத மாதிரி ஃபீல்ம்மா..”

“அய்யோ ஆன்ட்டி.. அன்னைக்கு நல்லா தானே இருந்தீங்க.. ஆனா திடிர்னு மயக்கமாகலையா? இந்த நேரத்துல நல்லா ரெஸ்ட் எடுக்கணும் ஆன்ட்டி.. “

“போம்மா நீயும் இப்படி சொல்லிக்கிட்டு எனக்கு ரொம்ப போர் அடிக்குதும்மா..”

“சரி ஆன்ட்டி அடுத்தமுறை டாக்டர்க்கிட்ட  போகும்போது வேலை செய்யலாமான்னு கேட்டுக்கலாம் அதுவரைக்கும் ரெஸ்ட் எடுங்க..” என்றதற்கு அவரும் சரியென்று தலையாட்டினார். என்னவோ இருவரும் பேசிக் கொள்வதை பார்த்தால் நீண்ட நாள் பழக்கம் போல இருந்தது. ஆனால் அவர்கள் பார்த்துக் கொள்வது இது இரண்டாவது முறை. முதல்முறை வழிக் கேட்டவரைக்கும் தான் பேச்சு. அதனால் அமுதனும் சரி, அறிவழகனும் சரி இவர்கள் இருவரையும் ஆச்சர்யத்தோடு பார்த்த்பபடி நின்றிருந்தனர்.

அன்று எல்லாம் சரியாக நடந்திருந்தால் இருவரின் உறவு இன்று  மாமியார் மருமகள் என்று அறிவழகன் நினைத்தான். அதேநேரம் அமுதனுக்கும் அதுதான் தோன்றியது. அப்படி தோன்றியதை நினைத்து அவனுக்கே அது ஆச்சர்யமாகவும் இருந்தது.

அறைக்குள் வரும்போதே ஆனந்தி அறிவையும் பார்த்தாலும், இப்போது தான் ஊன்றி அவனை கவனித்தார். “ஆன்ட்டி இது அறிவு, என்னோட மாமா பையன்..” என்று அவர் பார்வையை உணர்ந்து அருள்மொழி அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

அவருக்கு வணக்கம் வைத்தவன், “எப்படி இருக்கீங்க ஆன்ட்டி..” என்று விசாரித்தான்.. “சாரி நேத்து நீங்க கண் முழிக்கறதுக்குள்ள நான் அருளை கூட்டிட்டு போயிட்டேன்.. ஒரு அர்ஜண்ட் வேலை அதான்..” என்று கூறினான்.

“பரவாயில்லப்பா அதனால தானே இப்போ அருள் வீட்டுக்கு வந்திருக்கா.. அதுல எனக்கு சந்தோஷம் தான்” என்றார், பின் அமுதனை பார்த்து,

“அமுதா ரெண்டுப்பேரும் வந்து எவ்வளவு நேரம் ஆகுது அவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுடா” என்று கட்டளையிட்டார்.

“அய்யோ இருக்கட்டும் ஆன்ட்டி.. அதெல்லாம் வேண்டாம்.. நாங்க வீட்ல இருந்து அப்போ தான் சாப்பிட்டு கிளம்பினோம்..”

“இருக்கட்டும்மா அமுதா சூப்பரா காஃபி போடுவான்.. ஆனா காஃபி சூப்பரா போடுவானேன்னு சமையல் நல்லா செய்வான்னு எதிர்பார்க்க முடியாது.. காலையில ஒரு தோசை சுட்டு கொடுத்தான் பாரு.. எனக்கென்னமோ பிட்டு சாப்பிட முடியாதுன்னு பிச்சு போட்டு எடுத்துக்கிட்டு வந்தான். கூட ஒரு சட்னி, அது சட்னியான்னே டவுட் ஆகிடுச்சும்மா..” என்று சொல்லி சிரித்தார்.

“அம்மா எனக்கு இந்த தோசை சரியா வரல அதுக்கு என்ன செய்ய சொல்றீங்க.. நானும் உங்களை பார்த்துக்கவும் சமையல் வேலைக்கும் ஒரு ஆள் பார்த்துட்டு இருக்கேன்.. செட் ஆகல என்ன செய்ய? சீக்கிரம் கிடைச்சிடுவாங்கம்மா..”

“ம்ம் சீக்கிரம் கல்யாணம் பண்ணி மருமகளை கூட்டிட்டு வாடான்னா வேலைக்கு ஆள் கூட்டிட்டு வரானாம்.. போடா..” என்றதும், அமுதனின் விழிகள் அருள்மொழியை பார்த்தது. அவளும் அதே நேரம் அவனை தான் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.