(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 12 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

னி இன்னொரு முறை பார்க்கவே கூடாது என்று நினைத்தவனை விரைவிலேயே சந்திப்போம் என்று அருள்மொழி நினைக்கவே இல்லை. மனதில் அந்த நினைப்போடு அவனையே பார்த்தப்படி நின்றிருக்க, உள்ளே நுழைந்தவனின் பார்வைக்கு அவள் தான் முதலில் பட்டாள்.

அவனை பார்க்கக் கூடாது என்ற அவளின் நினைப்புக்கு எதிராக இன்னொரு முறை அவளை பார்க்க முடியாதா? என்று நினைத்திருந்தவனுக்கு இன்றே அவளை சந்திக்கும் சந்தர்ப்பம் அமையும் என்று அவன் நினைத்து பார்க்கவே இல்லை. உடனே அவள் அருகில் சென்று பேச வேண்டும் என்று மனம் நினைத்தது. அவள் ஏன் மருத்துவமனையில் இருக்கிறாள்? என்ற கேள்வியும் எழுந்தது. அவளோ அவனும் தன்னை பார்த்துவிட்டான் என்பதை அறிந்ததும் தலையை தாழ்த்திக் கொண்டாள்.

அவள் அருகில் செல்ல நினைத்த கால்களை கஷ்டப்பட்டு ரிஸப்ஷன் இருக்கும் இடத்திற்கு திருப்பினான். இன்னும் கூட இவன் தான் உள்ளே இருக்கும் ஆனந்தியோட பையன் அமுதனா? என்ற சந்தேகத்தோடு அவள் நின்றிருக்க, “இங்க பேஷண்ட் ஆனந்தி எங்க அட்மிட் ஆயிருக்காங்க?” என்ற அவன் கேள்வியில் இருந்த கொஞ்சநஞ்ச சந்தேகமும் தீர்ந்தது.

“ஆனந்தியா..”  என்று அந்த ரிஸப்ஷ்னஸ்ட் முதலில் முழித்தவள், “அந்த பேர்ல இங்க யாரும் அட்மிட் ஆகலையே..” என்று கூறினாள்.

“இல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஒரு பேஷண்ட் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கன்னு சொல்லி என் மொபைல்க்கு கால் பண்ணீங்களே.. நான் கூட அவங்க என்னோட அம்மான்னு சொன்னேனே என்று ஞாபகப்படுத்தினான்.

“ஓ அந்த அமுதா நீங்க தானா? உங்க அம்மாக்கு இப்போ ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு.. அவங்களை இவங்க தான் அட்மிட் பண்ணாங்க..” என்று அருள்மொழியை கையை காட்டினாள் ரிஸப்ஷனிஸ்ட்.. அவன் கண்களில் வியப்பு.உடனே அவள் அருகில் சென்றான்.

“அருள் அம்மாக்கு..” அவளிடம் பேச தயக்கம் காட்டியவாறே இழுக்க,

“அவங்க யூனிவர்சிட்டிக்கு வந்திருந்தாங்க.. தமிழ் டிபார்ட்மென்ட் போகணும்னு என்கிட்ட தான் வழி கேட்டாங்க.. நான் தெரியாதுன்னு சொன்னதும் பத்து அடி தான் போயிருந்திருப்பாங்க உடனே மயக்கம் போட்டுட்டாங்க..”

“ஓ இப்போ அம்மாக்கு எப்படி இருக்கு..?”

“தெரியல.. ட்ரீட்மெண்ட் போயிட்டுருக்கு.. அவங்களுக்கு வந்தது சாதாரண மயக்கம் மாதிரி தெரியலன்னு டாக்டர் சொல்லிட்டு இருந்தாங்க..” விவரத்தை அவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அருள்..” என்று அறிவழகனின் குரல் கேட்டது. உள்ளே நுழையும் போதே அவளை பார்த்துவிட்டு கூப்பிட்டப்படி  அருகில் வந்து கொண்டிருந்தவன், முகம் பார்க்காமல் அந்த பக்கம் திரும்பியிருந்த அமுதவாணனை அவன் கவனிக்கவில்லை. யாரோடு பேசிக் கொண்டிருக்கிறாள் என்ற நினைப்போடு வந்தான். அருகில் வந்ததும் தான் அவனுடைய முகம் பார்த்தான்.

அமுதவாணனை பார்த்ததுமே அறிவின் முகம் அதிர்ச்சியானது. “இவனா.. இங்க என்ன பண்றான் இவன்..” என்று மனதிற்குள் நினைத்தப்படியே அருள்மொழியிடம் கேள்வியாக பார்வையை திருப்பினான்.

“அறிவு.. நாம பணம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை.. நான் அட்மிட் பண்ணது Mr. அமுதனோட அம்மா தான்.. ரிஸ்பஷன்ல போன் பண்ணி இவருக்கு தெரியப்படுத்திட்டாங்க..” என்றாள்.

“ஓ அப்படியா.. சரி அப்போ நாம போகலாம்ல, எனக்கு கொஞ்சம் ரெஸ்ட்டாரன்ட்ல வேலை இருக்கு..” என்று கேட்டான். ஆனந்தியைப் பற்றி மருத்துவர் என்ன சொல்கிறார் என்று தெரிந்துக் கொள்ள மனம் எதிர்பார்த்தாலும், இங்கே அமுதனோடு இருக்க மனம் விரும்பவில்லை. வேலை இருப்பதாக சொல்லும் அறிவையும் உடன் இருக்க சொல்லவும் மனதில்லை. அதனால் சரி என்று தலையசைத்தாள்.

அவர்கள் இங்கிருந்து செல்வதாக சொல்லவும், அமுதனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவளோடு ஏதாவது பேச வேண்டும் என்று மனது துடித்தது.  “அம்மாவை ஹாஸ்பிட்டல் கொண்டு வந்து சேர்த்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் அருள்..” என்று மட்டும் கூறினான்.

“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்.. இது எல்லோரும் செய்ற சாதாரண உதவி தான்.. அம்மாவை பார்த்துக்கோங்க..” என்று சொல்லிவிட்டு அறிவழகனோடு கிளம்பினாள். அறிவோ அமுதனிடம் எதுவும் பேசாமலேயே சென்றான்.

“ஆமாம் ஆனந்தி ஆன்ட்டிய பார்த்ததுமே உனக்கு அவங்க தான் அமுதனோட அம்மான்னு தெரியலையா?”

“இல்ல எனக்கு தெரியல.. அவங்களை நான் இதுவரை பார்த்ததில்லையே.. ஆனா அவங்க முகம் யாரோட சாயலையோ எனக்கு ஞாபகப்படுத்துச்சு.. ஆனா இப்போ அமுதன் தான் அவங்க பையன் தான்னு தெரிஞ்சப்ப தான் அவங்க முகமும் அமுதன் முகமும் ஒரே மாதிரி இருப்பது தெரிந்தது.”

“அவன் அவங்க அம்மா போட்டோவை பர்ஸ்லயே வச்சிட்டு சுத்திக்கிட்டு இருப்பான்.. நானும் மகியும் கூட ஒருமுறை பார்த்திருக்கிறோம்.. எங்களுக்கு முன்னாடியே அவனை உனக்கு தெரியும்.. ஆனா நீ பார்த்ததைல்லையா?”

“அறிவு.. அமுதனோட ஜஸ்ட் நான் பேசினதோட சரி, மத்தப்படி எனக்கு அவங்களைப் பத்தி ஒன்னும் தெரியாது..” கொஞ்சம் கோபமாகவே கூறினாள்.அந்த கோபத்தை அவனும் புரிந்துக் கொண்டான்.

“ஹே நான் தப்பா எதுவும் சொல்லல.. அமுதன் அம்மா பத்தி முன்னமே தெரிஞ்சிருந்தா.. இப்போ அமுதனை பார்க்கும் சங்கடமான சிட்டுவேஷன் உனக்கு வந்திருக்காதில்லையா? அதுக்கு தான் சொன்னேன்..”

“அவங்க அமுதனோட அம்மான்னு தெரிஞ்சிருந்தா அவங்க என்ன ஆனாலும் பரவாயில்லன்னு விட்டுட்டு வரச் சொல்றியா? தெரியாதவங்கன்னும் போதே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்து சேர்த்தேன்.. அப்போ மட்டும் எப்படி விட்டிட்டு வந்திருப்பேன்.. அவங்க அமுதன் அம்மா மட்டுமில்ல, கதிர் சித்தப்பாவோட பெஸ்ட் ப்ரண்ட்ங்கிறத ஞாபகம் வச்சிக்கோ..” என்றதும்,

“அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன்.. சாரி சாரி என்று குனிந்து மன்னிப்பு கேட்டான். அதற்கு சிரரித்தப்படியே அவனது முதுகில் அருள் ஒரு தட்டு தட்டினாள். இதையெல்லாம் ரிஸப்ஷன் அருகில் நின்றப்படி அமுதன் பார்த்துக் கொண்டிருந்தான். அதையெல்லாம் கவனிக்காமல் பேசிக் கொண்டே பார்க்கிங் அருகில் சென்றவர்கள், பின் அறிவின் பைக்கில் சென்றுவிட்டனர்.

இருவரும் உறவினர்கள் என்பது அமுதவாணனுக்கு தெரிந்தது தான், இருந்தாலும் அறிவு அருளிடம் கொஞ்சம் அதிகப்படி உரிமை எடுத்துக் கொள்வது போல அவனுக்கு தோன்றியது. இங்கே அவள் இருக்கக் கூடாதென்று வேண்டுமென்றே கூட்டிச் சென்றுவிட்டான் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.