(Reading time: 15 - 30 minutes)

வீட்டிற்கு வந்த பின்பும் கூட அருள்மொழியின் நினைவுகள் மருத்துவமனையையே சுற்றி வந்துக் கொண்டிருந்தது. ஆனந்திக்கு என்ன பிரச்சனை என்று கேட்காமல் வந்தது அவளுக்கு உறுத்தியது. “அவர்களுக்கு வந்தது சாதாரண மயக்கம் இல்லையென்றால், வேறு என்னவாக இருக்கும்” என்று யோசித்த போது அவளுக்கு கவலையாக இருந்தது. ஆனந்தி அமுதனின் அம்மா என்று தெரிந்தும் கூட அவர்களை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அமுதனின் அலைபேசிக்கு மருத்துவனையில் வைத்து முயற்சி செய்ததில் இப்போது அவளிடம் அவனது அலைபேசி எண் உள்ளது. பேசாமல் அவனது எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆனந்தியை பற்றி விசாரிக்கலாமா? என்று நினைத்தவள், அதற்காக அமுதனிடம் பேச வேண்டியிருக்குமே என்று யோசித்து அமைதியாகிவிட்டாள். பின் வலைத்தளத்தில் அந்த மருத்துவமனையின் பெயரை போட்டு தேடி, அதில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆனந்தியை பற்றி விசாரித்தாள். அவர்களும் ஆனந்திக்கு என்ன பிரச்சனை என்று கூறினார்கள். அதில் அவருக்கு ப்ரெய்ன் ட்யூமர் என்ற விஷயத்தை கேட்டு அவள் மனதிற்குள் வருத்தப்பட்டாள்.

மருத்துவர்கள் வந்து ஆனந்தியை முழுக்க சோதித்து பார்த்து அவர்களது ட்யூமர் கட்டியை அகற்ற அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். சீக்கிரமாகவே அறுவை சிகிச்சை செய்வது நல்லது என்று கூறியவர்கள், அதுவரை வீட்டில் இருந்தப்படியே சிகிச்சைக்கு வந்து போகலாம் என்று தெரிவித்தனர். இப்போதைய மயக்கம் கூட விமானத்தில் பயணம் செய்தது.. வெயிலில் அலைச்சல் இதனால் ஆனது தான் அதனால் உடனே வீட்டிற்குச் செல்லலாம் என்று  சொல்லிவிட்டனர்.

வீட்டுக்கு அழைத்து போகலாம் என்று சொன்னதால் இன்றைய சிகிச்சைக்கான பணத்தை கட்டலாம் என்று அமுதன் சென்ற போது தான் அருள்மொழி தொலைபேசி மூலமாக விசாரித்திருந்தாள்.  உடனே அமுதன் அங்கு சென்றதால் அதைப்பற்றி அவனிடம் வரவேற்பறையில் இருந்த பெண் கூறினாள். அந்த பெண்ணிடம் “அருள் எனக்கு தெரிந்த பெண் தான்.. என்னோட அம்மா அவக்கிட்ட பேசணும்னு சொல்றாங்க.. அதனால இப்போ அவங்க நம்பர் கொடுங்க.. அம்மா தேங்க்ஸ் சொல்லணுமாம்..” என்று அவளது எண்ணை கேட்டு வாங்கினான்.

அடுத்து உடனே தன் அன்னையை தேடிச் சென்றவன், “அம்மா அருள்மொழி இங்க ஹாஸ்பிட்டல்க்கு போன் பண்ணி உங்களை விசாரிச்சாளாம்.. நான் நம்பர் கேட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்.. போட்டு தரேன் பேசுங்க..” என்று சொன்னவன் முகம் மலர்ந்திருந்தது. அருளைப் பற்றி தன் அன்னையிடம் பன்மையில் பேச நினைத்ததும் மறந்து போனது.

மகனின் மகிழ்ச்சியை பார்த்து ஆனந்திக்கு வியப்பாக இருந்தது. “அருள்மொழியிடம் நான் பேசுவதற்கு இவன் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகிறான்” என்று மனதில் நினைத்தப்படியே அருள்மொழியை அலைபேசியில் அழைக்க சம்மதம் தெரிவித்தார்.

அமுதனிடம் இருந்து அழைப்பு வந்ததை பார்த்து எடுக்கலாமா? வேண்டாமா? என்று சிந்தித்தவள், ஒருவேளை ஆனந்தி ஆன்ட்டிக்கு ஏதும் பிரச்சனையா? என்று நினைத்தாள். அவரை இப்போது தான் முதல்முறையாக பார்க்கிறாள். ஆனால் அதற்குள் அவரிடம் ஏன் இத்தனை அன்பும் அக்கறையும் என்று புரியவில்லை. ஒருவேளை அமுதனின் அம்மா என்பதால் தான் இந்த அன்பும் அக்கறையுமா? என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள். ஆனால் அதற்கும் விடை இல்லை. அவன் மேல்  உள்ள கோபம் அவளுக்கு குறையாமல் தான் இருக்கிறது. அமுதனிடம் பேச தேவையில்லை என்று மனம் நினைத்தாலும், ஆனந்திக்காக அழைப்பை ஏற்றிருந்தாள்.

அலைபேசியில் அந்த பக்கம் மணி அடித்ததுமே அமுதன் தன் அன்னையிடம் அலைபேசியை கொடுத்திருந்தான். அருள் அழைப்பை ஏற்றதுமே “ம்ம் சொல்லுங்க..” என்று தெரிந்தவள் போல் பேசினாள்.

அது ஆனந்திக்கு உறுத்தலாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் பேசினார்.  “அருள்.. நான் ஆனந்தி பேசறேன்ம்மா..” என்றதில் கட்டிலில் படுத்தப்படியே பேசிக் கொண்டிருந்தவள் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.