(Reading time: 11 - 21 minutes)

டைசி வரியை மட்டும் கேட்டவன், “யார் வீட்டுக்கு போகப் போற சுடர்.. யார்க்கிட்ட பேசிட்டிருக்க” என்று கேட்டப்படியே  வீட்டுக்குள் நுழைந்தான். அவள் வீட்டிற்கு கூட செல்ல மாட்டேன் என்று சொன்னவள், இப்போது எங்கே செல்வதாக கூறுகிறாள் என்று மனதில் நினைத்தப்படியே தான் கேட்டான்.

அவளோ “சார்லி வீட்டுக்கு..” என்று சொன்னவள், மேற்கொண்டு பேசுவதற்குள்,

“என்னது அந்த அமுதன் வீட்டுக்கா? நீ அங்கல்லாம் போகக் கூடாது.. ஏதோ அன்னைக்கு கடைல பார்த்து பேசின பரவாயில்லை.. ஆனா அவனோட நீ தொடர்ந்து பேசறது எனக்கு பிடிக்கல” என்று கட்டளையிடுவது போல் கூறினான்.

அமுதன் மீது அளவுக்கடந்த கோபம் இருந்தாலும், அவன் செய்தது தவறாக இருந்தாலும், நண்பனை மகியிடம் விட்டுக் கொடுக்க முடியவில்லை அவளால், இதில் முழுதாக என்ன விஷயம் என்று கேட்காமலேயே அவன் அப்படி பேசவும்..

“என்னோட ப்ரண்டை பார்க்க போக வேணாம்னு நீ எப்படி சொல்லலாம்.. என்ன ஹஸ்பண்ட்னு உரிமை எடுத்துக்கிறியா? சும்மா ஒரு மஞ்சள் கயிறு கட்டிட்டா போதுமா? அதுதான் இப்படி அதிகாரம் செய்ய வைக்குதா? நீ போக வேண்டாம்னு சொன்னா நான் போகாம இருக்கணுமா? நான் சார்லியை பார்க்கப் போவேன்..” என்று கத்தினாள். அதில் கோபம் வந்தவனாக,

“இப்போ உனக்கு என்னத்தான் பிரச்சனை சுடர்.. ஊரறிய உன்னை தாலிக்கட்டி பொண்டாட்டியா ஏத்துக்கிட்டா மட்டும் நான் உன்னை அதிகாரம் செய்ய உரிமை இருக்கா.. எப்பப் பார்த்தாலும் இந்த தாலியை உன் கழுத்தில் கட்டினத பத்தியே சொல்லிக்கிட்டு இருக்க..

அன்னைக்கு ஊருக்கு போகணும்னு நினைச்சல்ல.. சைலண்டா போக வேண்டியது தானே.. எதுக்கு போறதுக்கு முன்ன என்கிட்ட பேசின.. லெட்டர் கொடுத்த..  உன்னை எப்படியும் போக விடக் கூடாதுன்னு தடுக்க வழித் தெரியாம செஞ்சது தான்.. ஆனா அது கல்யாணம் இல்லன்னு ஆகிடாது.. ஊரறிய கல்யாணம் செஞ்சா தான் அது கல்யாணம்னு இல்ல.. ரெண்டு மனசு ஒத்துப் போனா மட்டும் போதும்.. என்னைப் பொறுத்த வரைக்கும் நான் அந்த கயிறை உன் கழுத்தில் கட்டினதுல இருந்தே நான் உன்னோட புருஷன் தான்.. சும்மா இப்படி பேசி மனுஷனை வெறுப்பேத்தாத.. நீ எங்க வேணா போ.. இனி கேட்டேன்னா அப்போ எதை வச்சாவது என்னை அடி..” என்று அவளிடம் கோபமாக பேசியவன், நேராக மாடியில் இருந்த அறிவழகன் அறைக்குச் சென்றான்.

அறிவழகனும் அப்போது தான் வீட்டிற்கு வந்திருந்தான். அந்த நேரம் மகி வரவும், அதுவும் அவன் முகமே ஏதோ சரியில்லாது இருக்கவும், “என்னடா.. என்னாச்சு?” என்று கேட்டான். அதற்கு மகியோ, “ம்ம்ச்..” என்று சலிப்பாக முனகினான்.

“என்னடா.. தனிக்குடித்தனம் ஆரம்பிச்சு முழுசா ஒருநாள் முடியல.. அதுக்குள்ள சலிச்சிக்கிற..”

“இந்த சலிப்பு வேற விஷயத்துக்காக அறிவு..”

“என்ன?”

“எல்லாம் அந்த அமுதனால் வந்தது டா.. அவன் திரும்ப ஊருக்கு வந்திருக்கான்.. அன்னைக்கு கடைல வச்சு அவனை பார்த்தோம்.. சுடர் அவன்கிட்ட பேசறா டா.. அவன் செஞ்சதெல்லாம் இவளுக்கு மறந்துப் போச்சா.. இவளுக்காக தான் செஞ்சான்.. இல்லன்னு சொல்லல.. ஆனா அப்புறம் இவ சொல்றதை கூட கேக்காம போனான் இல்ல.. அவன்கிட்ட பேசலாமாடா.. எதைச்சேயா பார்த்து பேசினா சரி.. இன்னைக்கு அவனோட போன்ல பேசறா.. அதுவும் அவனை பார்க்க போறாளாம்..

“ஹே இதுக்கு தான் மூட்அவுட்டா.. இங்கப்பாரு சுடர் அமுதன் வீட்டுக்கு போறேன்னு சொன்னது அமுதனை பார்க்கவா இருக்காது.. அவனோட அம்மாவை பார்க்கவா இருக்கும்..”

“என்னடா சொல்ற?”

“ஆமாம் ஆனந்தி ஆன்ட்டி இங்க வந்துருக்காங்க.. அதுவும் ட்ரீட்மென்ட்க்காக..” என்று அவரின் வியாதி குறித்து கூறினான்.

“உனக்கு எப்படிடா தெரியும்..”

“ம்ம் அதுவா..” என்றுக் கேட்டவன், அருள் ஆனந்தியை பல்கலை கழகத்தில் பார்த்ததிலிருந்து இன்று காலை இருவரும் வீட்டுக்கு போய் அவரை பார்த்துவிட்டு வந்த வரைக்கும் விளக்கமாக கூறினான்.

“மகி அமுதனால பாதிக்கப்பட்டது அருள்.. அவளே நடந்ததை மனசுல வச்சுக்காம அவனோட அம்மாக்காக பார்த்துட்டு வர போயிருக்கா.. அப்புறம் சுடர் போனா என்னடா தப்பு..”

“இல்லடா சுடர் இதைப்பத்தி என்கிட்ட சொல்லல.. சொல்லியிருந்தா வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்டேன்.. சரி அதை விடு.. அருள் கொஞ்சம் கூடவா அமுதன் மேல கோபப்படல..”

“ஆமாம் மகி.. அவனை பார்த்ததும் எனக்கு கூட கோபம் வந்துச்சு.. ஆனா அருள் அமைதியா தான் இருந்தா.. ஒருவேளை அருள் மனசுல அமுதன் இருப்பானோ..”

“ச்சே அப்படில்லாம் இருக்காது.. நடந்ததை மறக்கணும்னு நினைச்சிருப்பா.. அவன் செஞ்சது தன்னை பாதிக்கலன்னு அவன் முன்னாடி காமிச்சிக்க நினைச்சிருப்பா..”

“ம்ம் அப்படியும் இருக்கலாம்.. ஆனாலும் முன்ன நடக்காம போனது இப்போ நடந்தா நல்லா இருக்குமில்ல.. ஆனந்தி ஆன்ட்டிக்கும் அருளை ரொம்ப பிடிக்குது.. எல்லாம் நல்லப்படியா நடந்தா.. உங்களுக்கும் சீக்கிரம் கல்யாணம் நடக்குமில்ல..”

“ஹே எங்களுக்காக அருள் திரும்ப அமுதனை கல்யாணம் பண்ணிக்கிட்டா ஓகேன்னு என்னை சுயநலமா யோசிக்க சொல்றியா.. அதுல அவளுக்கு முழு சம்மதம் இருக்கணும்.. இல்லன்னாலும் பரவாயில்ல.. அவளுக்கு நல்ல வரனா அமையனும்டா.. அவளுக்கு மனசுக்கு பிடிச்சிருக்கணும்.. அதுக்கு எவ்வளவு நாளானுலும் பரவாயில்ல.. அதுவரைக்கும் நானும் சுடரும் காத்திருப்போம்… சரி சுடர் தனியா இருப்பா நான் போறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.