(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 16 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ன்று நாள் முழுதும் சுடர் மகி இருவரும் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தனர்.   அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிய அந்த நிமிடத்திலிருந்து சுடர் எதற்கெடுத்தாலும் மகி மீது எரிந்து விழுந்தாள். இதற்கும் அவன் வேண்டும்.. அவன் காதல் வேண்டும்.. என்று நினைத்தாலும், அவன் அவளை திருமணம் செய்த முறை அவளுக்கு பிடிக்கவில்லை. அதுவே அவளது கோபத்திற்கு காரணமாக இருந்தது.

அது புரிந்ததால் அவளை எப்படியும் மகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு வர மகி முயற்சித்துக் கொண்டிருந்தான். இருவரும் தனிக்குடித்தனம் நடத்தும் இந்நேரத்தில், அவள் கொஞ்சம் நல்ல மனநிலையில் அவனோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.  இன்று ஓரளவிற்கு அவன் எதிர்பார்த்தது நடந்தது. சமையல் கற்றுக் கொள்ளும் ஆசையில் அவனோடு முன் போல் அவள் கொஞ்சம் சகஜமாக பழகினாள்.

ஆனந்தியை பார்த்துவிட்டு வந்த எழில் அன்று மாலை தான் சுடரிடம் அவர் இங்கு வந்ததை பற்றியும், அவரது நோய் குறித்தும் பேசினாள். அந்த நேரம் மகி கொஞ்சம் வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்றான். அவளை தனியே விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல், ஹவுஸ் ஓனரிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்றிருந்தான். சிறிது நேரம் அவளோடு இருந்த அந்த பெண்மணியோ, கொஞ்சம் வேலை இருப்பதாக அவளிடம் சொல்லிவிட்டு சென்றவர், தனியாக இருக்க ஒரு மாதிரி இருந்தால், வீட்டுக்கு வந்து இரு என்று அழைத்தார். ஆனால் தனிமை ஒன்றும் அவளுக்கு புதிதில்லையே, அதனால் இங்கேயே இருந்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தாள்.

அப்போது தான் எழில் சுடரிடம் பேசினார்.  அவர் பேசி முடித்ததும் சுடர் உடனே அமுதவாணணின் அலைபேசிக்கு முயற்சித்தாள். ஆனால் அழைப்பு ஏற்கப்படவில்லை. ஒருவேளை கோபமாக இருக்கிறானோ? என்று யோசித்தாள். ஆனந்தியின் புது எண் அவளுக்கு தெரியவில்லை. சரி அவராவது என்னுடன் பேச முயற்சித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்ற கேள்வி மனதில் இருந்தது. சரி நாளை சென்று அவரை நேரில் பார்த்துவிட முடிவெடுத்தாள்.

இருந்தும் நண்பனது அலைபேசிக்கு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து அழைப்பு ஏற்கப்பட்டது.

“சுடர் நீயா கால் பண்ண.. ஆச்சர்யமா இருக்கு..”

“என்னோட கால்னு தெரிஞ்சு தானே அட்டண்ட் பண்ணல..”

“ஹே இல்லடா.. நான் கொஞ்சம் ஆஃபிஸ்க்கு வந்திருக்கேன்.. போனை சைலண்ட்ல வச்சிருந்தேன்.. அதான் தெரியல..”

“ஆன்ட்டியை தனியா விட்டுட்டா ஆஃபிஸ்க்கு போயிருக்க..”

“அம்மாவை கூட இருந்து பார்த்துக்க ஒரு ஆள் போடணும்.. கொஞ்ச நேரம் தானே அம்மா ரெஸ்ட் எடுத்துக்கிறதா சொன்னாங்க.. அதான் கொஞ்சம் தைரியமா வந்துருக்கேன்..”

“ஆன்ட்டிக்கு இப்படி ஆனதை நீயும் சொல்லல.. அவங்களும் சொல்லல.. அன்னைக்கு கடையில உன்ன நான் பேச விடல சரி..  ஆன்ட்டியாவது எனக்கு சொல்லியிருக்கலாமே..”

“அது அம்மா இங்க வரணும்னு திடிர்னு எடுத்த முடிவு.. இங்க வந்து உங்க எல்லோர்க்கிட்டயும் அம்மா பேசணும்னு சொல்லிட்டு இருந்தாங்க.. நான் தான் இங்க நடந்தது அம்மாக்கு தெரியாததால, எங்க உங்கக் கூட பேசினா தெரிஞ்சிடுமோன்னு அமைதியா இருந்துட்டேன்..  இன்னைக்கு தான் கதிர் அங்கிள், எழில் ஆன்ட்டிக்கும் அம்மா பேசினாங்க..

நீயும் அங்க தான இருக்க அதனால உனக்கு ஆன்ட்டியோ அங்கிளோ சொல்வாங்கன்னு அம்மா நினைச்சிருந்தாங்க.. நீ வரலன்னதும் தான் உன்னைப் பத்தி விசாரிச்சாங்க.. அப்புறம் தான் உன்னைப் பத்தி அம்மாக்கு தெரிய வந்துச்சு.. அன்னைக்கு என்னையும் நீ பேச விடல.. நீயும் நடந்ததை சொல்லல..”

“இப்போ நடந்தது தெரிஞ்சு மட்டும் என்னாகிட போகுது.. எல்லாத்தையும் சரி செஞ்சுடுவியா? எனக்கு என்ன ஆனா என்னன்னு விட்டுட்டு போனவன் தானே நீ.. இங்கப்பாரு எனக்கு உன்மேல இருக்க கோபம் இன்னும் குறையல.. இப்போ நான் ஆன்ட்டிக்காக தான் பேசறேன்.. நீ அட்ரஸ் சொல்லு நான் நாளைக்கு வீட்டுக்கு வறேன்..”

“நான் அட்ரஸ் செண்ட் பண்றேன்.. ஆனா தனியாவா வரப் போற? நீ இருக்க இடம் சொல்லு, நான் வந்து கூட்டிட்டு போறேன்..”

“அதான் தனியா மாட்டுக்கிட்டு முழிக்கட்டும்னு விட்டுட்டு போனியே.. இப்போ மட்டும் என்ன? நான் தனியாவே வருவேன்.. நீ அட்ரஸ் அனுப்பு..”

“சாரி சுடர்.. நான் செஞ்சது தப்பு தான்.. அதுக்கு ஏதாச்சும் பனிஷ்மென்ட் கொடு.. ஆனா இப்படியெல்லாம் பேசாதே.. ரொம்ப கஷ்டமா இருக்குடா..”

“கஷ்டமா இருக்கா இருக்கட்டும்.. எனக்கென்ன வந்தது.. நானும் இப்படித்தான் கஷ்டப்பட்டேன்.. அதெல்லாம் உன்கிட்ட சொல்லி என்னாக போகுது.நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன் வை..” என்று அழைப்பை துண்டித்த போது தான் மகி வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.