மைதிலியின் வார்த்தைகளைக் கேட்டதும், அத்தை, மாமாக்காகத தான் அத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டாரா? என்னை பிடிச்சு இந்தக் கல்யாணம் நடக்கலையா? என்ற எண்ணம் ஓடியது. அது கோபமாக இல்லாமல், ஆதங்கமாக இருக்கவே, சற்று நேரத்தில் அதை அவள் பெரிது படுத்தவில்லை. எனவே அது அப்படியே அவளின் அடி மனதிற்குள் சென்று விட்டது.
அதற்குள் ராம் வந்து விடவே, அதற்கு மேல் அந்த அம்மாள் எதுவும் பேசாமல் காபி குடித்து விட்டுக் கிளம்பி விட்டார்.
அவர் கேட் வெளியே செல்லவும், சொல்லி வைத்தார் போல் எல்லோரும் ஹாலில் கூட, மைதிலி எல்லோரையும் முறைத்தாள்.
எல்லோரும் அசடு வழிய, சுமித்ரா “மா, ரம்பம் போயாச்சா?” என்று கேட்க,
“அடிங்க. எல்லோரும் எஸ்கேப் ஆயிட்டு, இப்போ வந்து ஹாயா கேட்கறீங்களா?
“ஹி..ஹி.. உங்களால தான் அவங்கள சமாளிக்க முடியும். அதான் நாங்க எஸ்கேப்” என்றாள் சுமி.
ஷ்யாமா “அம்மா, அந்த ரம்பத்துக்கேத்த ப்ளேட் நீங்கதான்னு சொல்றா சுமி” என, சுமியும், ஷ்யாமும் ஹைபை கொடுத்துக் கொண்டனர். அதைப் பார்த்த மைதிலி அவர்களை அடிக்க வர, இருவரும் அவர் கன்னத்தில் முத்தம் வைத்தனர்.
அப்போது சந்தோஷ் “ஷ்யாம், அங்கே பாரு உங்க அப்பாவிற்கு ஸ்டமக் பர்ன் ஆகுது . “ என, எல்லோரும் அங்கே திரும்பி பார்க்க, ராம் நிஜமாகவே ஷ்யாமை முறைத்துக் கொண்டு இருந்தான்.
அதற்குள் சந்தோஷ் மீண்டும் “டேய் ஷ்யாம், இனிமேல் இந்த வேலை எல்லாம் மித்ரா கிட்டே வச்சுக்கோ. பாவம் உங்க அப்பா” என்று கூற, இப்போ எல்லோரும் ஷ்யாமைப் பார்த்து சிரிக்க, மித்ராவிற்கோ வெட்கம் வந்தது.
அதற்குப் பின் கேலி, கிண்டல் எல்லாம் அவர்கள் பக்கம் திரும்ப, இரவு உணவும் முடித்துக் கொண்டு, சபரி, முரளி , மித்ராவின் பாட்டி எல்லோரும் கிளம்பினர்.
இதுவரை யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் கிளம்பும் போது லேசாக கண் கலங்க ஆரம்பித்தது மித்ராவிற்கு. சபரியோ தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். அதைக் கண்ட எல்லோரும் சபரியை சமாதானப் படுத்த,
ஷ்யாமோ தன் அத்தையைக் கட்டிக் கொண்டவனாக “அத்தை, நீங்க அழுததில் கண்ணில் உள்ள காஜல் எல்லாம் கரைஞ்சு போச்சு. அப்புறம் வீட்டிற்கு போனப்புறம் மாமா என் டார்லிங் சபரி எங்கே அப்படின்னு அழப் போறார். பார்த்துக்கோங்க” என
“போடா போக்கிரி” என்று சிரித்தபடி கண்ணைத் துடைத்து கொண்டாள் சபரி.
“மிதுமா, சந்தோஷமா இருடா” என்று மட்டும் கூறிவிட்டு எல்லோரும் கிளம்பினர்.
மித்ரா ஷ்யாமின் ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவனின் அக்கறை, பாசம் எல்லாமே மித்ராவிற்கு நேரடியாகத் தெரியும் என்றாலும், அவள் வீட்டிற்கு மாப்பிள்ளை என்று ஆன போதும், அவனின் செயல்களில் எந்த மாறுதலும் இல்லை.
சந்தோஷ் குடும்பமும் கிளம்ப, சைந்தவியும் அவர்களோடு கிளம்பினாள். கிட்டத்தட்ட நான்கு நாட்களாகவே அவள் இவர்களோடு இருந்ததால், அன்று அவள் கிளம்பி விட்டாள்.
அவர்கள் கிளம்பவும், மித்ராவை அணைத்தவாறு மைதிலி வீட்டினுள் வர,
சுமித்ரா “சுமி குட்டிக்கு தூக்கம் வந்துடுச்சு. எல்லோருக்கும் குட் நைட்.” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.
கௌசல்யாவும், அவள் கணவரும் தங்கள் அறைக்கு சென்று விட, ராம்
“குட் நைட் ஷ்யாம். குட் நைட் மித்ரா” என்று விட்டுத் தன் அறைக்கு சென்று விட்டான்.
மைதிலி “மிதும்மா, ஷ்யாமின் ரூமில் உன் பாக் எல்லாம் வச்சாச்சு. இப்போ அவனோடு போய் படுத்துக்கோ. அப்புறம் நாளைக்கு ப்ரீயா எல்லாம அடுக்கிக்கலாம் சரியா” என ,
“சரி அத்தை “ என்றாள்.
“ஷ்யாம், அவளை அழைச்சுட்டு போடா” என, ஷ்யாமும் அவளை தலையசைத்து வா என அழைத்தான்.
தங்கள் அறைக்குள் நுழைந்தவுடன் ஷ்யாம் தலையை இடை வரைக் குனிந்து
“வெல்கம் மை ரூம் டார்லிங். இதுக்கு முன்னாடி இந்த ரூமிற்கு என் அத்தை மகளா வந்துருக்க. இன்னிலேர்ந்து என்னோட ரூம் மட்டுமில்லாமல், என்னோட சந்தோஷம், துக்கம் எல்லாமே உன் கூட மட்டுமே ஷேர் பண்ணப் போறேன். வா “ என்று கூறினான்.
அவனின் வார்த்தைகளில் ஆச்சரியமாக அவனைப் பார்த்தவள், பின் ரூமை சுற்றிப் பார்க்க, முன்னாடி பார்த்ததற்கும் , இப்போ பார்ப்பதற்கும் சில வித்தியாசங்கள் இருந்தது.
முதலாவதாக அவர்களின் திருமணப் படம் ஒன்று அங்கே அழகாக பிரேம் செய்து மாட்டப் பட்டு இருந்தது. அதில் இருவரின் முகமும் பார்க்க அழகாகவும், இயற்கையாகவும் இருந்தது.
அதன் அருகில் சென்று பார்த்து விட்டு மீண்டும் அந்த அறையைப் பார்க்க, அவளின் பாக் எல்லாம் ஒருபுறம் அடுக்கப்பட்டு இருந்தது. அவனுக்குப் பதில் சொல்லாமல், தன் பையில் இருந்து நைட் டிரஸ் ஒன்று எடுத்துக் கொண்டவள், எங்கே மாற்ற என்று சுற்றி சுற்றிப் பார்த்தாள்.
அவளைப் புரிந்து கொண்டவனாக “அதோ இருக்கு டிரெஸ்ஸிங் ரூம். அங்கே போய் மாற்றி விட்டு வா” என்று அனுப்பி வைத்தான்.