(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 23 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ன்று புதன்கிழமை அருள்மொழிக்கு கல்லூரியில் விடுமுறை தினமாக இருந்தது. அதற்கு முன்பு கடந்து போயிருந்த ஞாயிறன்று அனைவரும் தீம் பார்க் செல்லலாம் என்று முடிவு செய்து கடைசியில் போக முடியாமல் போய்விட்டது. மணிமொழிக்கும் மலர்க்கொடிக்கும் வர முடியாதப்படி அவர்கள் வீட்டில் சில வேலைகள், இதில் இலக்கியா ஊரிலிருந்து வருவதாக சொல்லியிருந்தாள். கடைசியில் அவளாலும் வர முடியாமல் போய்விட்டது. அறிவு வேறு இலக்கியா வராததால், அவன் ஊருக்குச் சென்று அவர்களையெல்லாம் பார்த்துவிட்டு வருவதாக கூறிக் கொண்டிருந்தான். அறிவு சென்றுவிட்டால் மகிழ்வேந்தனுக்கு ரெஸ்ட்டாரன்டில் அதிக வேலை இருக்கும்.. இது இல்லாமல் தமிழ், புவிக்கு கூட அன்று  பள்ளியில் விளையாட்டு பயிற்சிக்காக வர சொல்லியிருந்தனர்.  அதனால் அனைவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருந்ததால் தீம் பார்க் செல்ல இருந்த திட்டம் தடைப்பட்டது. அதற்கு அடுத்த வாரமும் மணிமொழிக்கும் மலர்க்கொடிக்கும் வர முடியாது என்ற காரணத்தால், இன்னொரு முறை செல்லலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அருள்மொழிக்கு திடிரென்று இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மகி மற்றும் அறிவழகனிடம் அவளை மட்டும் தீம் பார்க் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள். “எல்லோரும் ஒன்னா போக தான் ப்ளான் போட்ருக்கோமே  அப்புறம் என்ன? நாம அப்போ போய் கொள்ளலாம்” என்று மகியும் அறிவும் சொல்லியும்,

“இன்னைக்கு நம்ம மட்டும் போகலாம்.. அப்போ எல்லோரோடவும் போகலாம்..” என்று அவள் அடம்பிடித்துக் கொண்டிருந்ததால், வேறு வழியில்லாமல் இவர்கள் மூவர் மட்டும் செல்லலாம் என்று முடிவெடுத்தனர். ரெஸ்ட்டாரண்ட்டை அங்கே வேலை செய்பவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு இருவரும் அருள்மொழியை கூட்டிக் கொண்டு தீம் பார்க் செல்ல தயாராயிருந்தனர்.

அந்த நேரம் பார்த்து தமிழும் புவியும் பள்ளிக்குச் சென்றிருக்க சுடரை மட்டும் கூட்டிக் கொண்டு எழில் வீட்டுக்கு வந்திருந்தாள். எழில் எப்போதும் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வார விடுமுறை நாட்களில் தான் வருவாள். மணி மற்றும் மலர் வீட்டுக்கு கொடுத்தனுப்ப ஏதோ பலகாரம் செய்ய வேண்டும் என்று உதவிக்காக பூங்கொடி அழைத்ததால், இப்போது வந்திருந்தாள். அப்போது பார்த்து மூவரும் கிளம்பவே, அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை அறிந்தவள், சுடரையும் கூட்டிச் செல்ல சொல்லி அவர்களிடம் சொல்ல, மூவரும் விழித்தனர்.

சுடரை அவர்களோடு கூட்டிச் செல்ல விருப்பமுமில்லை. அதே நேரம் எழில் பேச்சை மறுக்கவும் முடியவில்லை. அதனால் என்ன பதில் சொல்ல என்று மூவரும் தயங்க, அவர்களுக்கு தன்னை உடன் அழைத்துச் செல்வதில் சுத்தமாக விருப்பமில்லை என்பது சுடருக்கும் புரிந்ததால், போக விருப்பமில்லை என்று எழிலிடம் சொன்னாள்.

ஆனால் அனைவரும் சுடரை ஒதுக்குவது எழிலுக்கு புரிந்ததால், “நீயும் இங்க வந்ததுல இருந்து எங்கேயும் போகல இல்ல.. கூட போயிட்டு வா..” என்று கட்டாயப்படுத்தினாள்.

அனைவரும் செல்லும்போது சுடரை கூட்டி செல்வதில் யாருக்கும் பிரச்சனையில்லை. ஆனால் இப்போது மூன்று பேர் மட்டும் செல்லும்போது சுடரை கூட்டிக் கொண்டு போக தான் யோசித்தனர். அதனால், “நீங்க வேணும்னா கூட வாங்க அத்தை..” என்று மகி கூப்பிட்டான்.

“நான் அவளை வரச் சொன்னதே பலகாரம் செய்ய உதவியா இருக்கத்தான்.. அவ எப்படிடா வருவா.. நீங்கல்லாம் போயிட்டீங்கன்னா சுடர் பாவம் வெட்டு வெட்டுன்னு உக்கார்ந்திருப்பா அதனால கூட கூட்டிட்டு போங்கன்னு..” பூங்கொடியும் எழிலுக்கு ஒத்து ஊதினார்.

அதற்கு மேல மறுக்க முடியாததால் சுடரை தங்களுடன் அழைத்துச் செல்ல மகியும் ஒத்துக் கொண்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மகி, அறிவு இரண்டுப்பேருமே அவர்களது பைக்கில் ஒருவர் சுடரையும் மற்றொருவர் அருளையும் அவர்கள் பைக்கில் ஏற்றி செல்ல வேண்டும்.. “நமக்கு அவளை கூட்டிட்டு போக இஷ்டமில்லன்னு தெரிஞ்சும் எதுக்குடா வரா.. அத்தைக்கிட்ட வர முடியலன்னு ஏதாச்சும் ரீஸன் சொல்லலாமில்ல.. நான் அருளை பைக்ல ஏத்திக்கிறேன்.. நீ சுடரை ஏத்திக்கோ..” என்று அறிவு மகியிடம் சொல்லியப்படியே அவர்கள் வாசலில் வண்டி நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வர, பின்னாலேயே வந்த சுடரின் காதிலும் அது விழுந்தது.

என்னத்தான் எழில் நன்றாக பேசினாலும், சுடர் இன்னும் கூட எழிலிடமோ மற்ற யாரிடமோ இயல்பாக பேசும் அளவிற்கு வரவில்லை. அதனால் எழிலுடன் ஒரு அளவுக்குள் மேல் தன் விருப்பத்தை சொல்ல முடியாமல்  தான், இவர்களோடு கிளம்ப அவள் தயாரானாள். இதில் அறிவு இப்படி பேசியது மனதிற்கு சுணக்கமாக இருந்தாலும், வேறு வழியில்லாமல் அவர்களோடு கிளமபினாள். மகி வண்டியில் ஏறி அவளுக்காக காத்திருக்க, இரண்டு பக்கமும் கால் போட்டு அவன் பின்னால் அவள் ஏறிக் கொண்டாள். கூடவே அவனது தோளையும் பிடித்துக் கொண்டாள்.

“என்ன இது இவ உக்கார்ந்திருக்கிறதை பார்த்தா டெய்லி என் கூட தான் இவ இப்படி பைக்ல வரான்னு எல்லோரும் நினைக்கிற மாதிரி இப்படி ஒட்டி உக்கார்ந்திருக்கா.. இதுவரை ரெண்டு பேரும் பேசினது கூட இல்லை. பர்ஸ்ட் டைம் உக்காருகிறோமேன்னு சைடா உக்கார்ந்தா தான் என்ன?” என்று யோசித்தப்படி இருந்தான்.

வண்டியில் ஏறி உட்கார்ந்தும் அவன் இன்னும் வண்டியை கிளப்பாமல் இருப்பதை பார்த்து, “நான் உக்கார்ந்துட்டேன்.. கிளம்பலாம்..” என்றாள் அவள். அதற்கு முன்னமே அறிவு அருள்மொழியைக் கூட்டிக் கொண்டு கிளம்பியிருந்தான். அதை அறிந்தவன் உடனே வண்டியை கிளப்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.