(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 24 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

சுடரொளி தனியாக நின்ற போதே மகிக்கு உறுத்தல் தான், அருள்மொழி சில ரைடில் ஏற பயப்படுவாள் என்பதால் தான் மகி முதலில் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு அருளை தன் அருகில் அமர்த்திக் கொண்டான். அறிவு சுடரோடு அமருவான் என்று அவன் நினைத்திருக்க, அருளோ அறிவை தன் அருகில் அமர வைத்தாள். அப்போது சுடர் தவிப்போடு நின்றிருப்பதை பார்த்து மகிக்கு சங்கடமாகிவிட்டது.

தீம் பார்க் உள்ளே நுழைந்ததிலிருந்து இவர்கள் மூவரும் சிரித்து பேசியப்படி வந்துக் கொண்டிருக்க, அவள் மட்டும் ஒருவித தயக்கத்தோடு இவர்களோடு வந்துக் கொண்டிருந்தாள். அதிதி தேவோ பவ என்று சொல்லுவார்கள். வீட்டில் அவளை இன்முகத்தோடு அவன் அன்னையும் தந்தையும் வரவேற்று உபசரித்ததால் தனக்கு அவள் வருகை விருப்பமில்லை என்பதை அங்கே அவன் உணர்த்தியிருந்தான். ஆனால் இப்போது அவளை அவன் பொறுப்பில் அல்லவா அழைத்து வந்திருக்கிறான். இங்கு வந்தும் அவளை ஒதுக்கினால் அது தவறல்லவா? அத்தைக்கு மட்டும் அது தெரிந்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? அதனால் இந்த ரைடில் சுற்றிவிட்டு வந்து ஏதாவது சாப்பிடுவதற்கு அனைவரையும் அழைத்துச் சென்று, அங்கே அவளிடம் ஒரு ஹாய் சொல்லி பேசி விடலாம் என்று தான் நினைத்திருந்தான். அதற்குள்  இப்படி ஒரு சம்பவம்.. ஆனால் அதை கண்டும் காணாமல் அவன் விட்டுவிடவும் தயாரில்லை.

“டேய் அறிவு.. நீயும் எதுக்கு இங்க வந்து உக்கார்ந்துட்ட.. போய் அந்த பொண்ணு கூட உக்காருடா..” என்று அவர்களுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான். அச்சமயம் சுடர் தனியாக உட்கார்ந்து கொள்ளலாமா? இல்லை இறங்கிக் கொள்ளலாமா என்ற யோசனையில் சுற்றி சுற்றி பார்ர்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹே நான் உட்காரல.. வேணும்னா நீ போய் உட்காரு..” என்று அறிவும் பதிலுக்கு சொல்ல..

“நான் எழுந்து வர்றதுக்கு, ஓரத்துல உட்கார்ந்திருக்க நீயே எழுந்து போலாமில்ல..” என்று  கேட்டான்.

“ஹே நமக்கு விருப்பம் இல்லன்னு தெரிஞ்சும் அவ நம்மக் கூட வந்தா இல்ல.. அவ தனியா உட்கார்ந்துக்கிட்டும் விடு..” என்று அருள் கூற,

“அருள் இதெல்லாம் தப்பு… நாம அவளை கூட்டிட்டு வந்திருக்கோம்.. அவளுக்கு ஏதாச்சும்னா நாம தான் எல்லோருக்கும் பதில் சொல்லணும்..” என்று அவன் அருளிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே.. சுடர் ஒரு இருக்கையை தேடி அமர,

“அவளே போய் உட்கார்ந்திட்டா. அப்புறம் உனக்கு என்ன பிரச்சனை..” என்று அருள் கேட்டாள்.

ஆனால் அதற்கும் அவனது மனம் சமாதானமாகவில்லை.  “அறிவு நாம கூட வந்தும் அவ தனியா உட்காருவதா? போடா போய் அந்த பொண்ணு கூட உட்கார்..” என்று கட்டளையாக கூற, அறிவும் எழுந்து போகலாம் என்று நினைக்கும் போது தான், அந்த ரைடை இயக்குபவர், தனித்து நின்ற வேறொரு ஆடவனை சுடருடன் உடகார வைத்தார். அதைப்பார்த்த அருள்,

“அவ தனியா உட்கார்ந்திருக்கான்னு வருத்தப்பட்டல்ல.. அங்கப்பாரு கூட யாரையோ உட்கார வச்சிருக்காங்க போதுமா..?” என்று திரும்பிப் பார்த்து காட்டினாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இதே இடத்தில் அருள்மொழி இருந்தால் இப்படி யாரோடாவது அமரட்டும் என்று அவன் விட்டுவிடுவானா? ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு இவளே இப்படி சொல்கிறாளே..” என்று நினைத்து அவன் அருளை முறைத்து பார்த்தான்.

அனைவரும் இருக்கையை தேடி அமர்ந்துக் கொண்டதால், அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளின் பாதுகாப்பை அந்த ரைடை இயக்குபவர் சரிபார்த்துக் கொண்டு வர,

“இங்கப்பாரு ஸ்டார்ட் பண்ண போறாங்க அமைதியா இரு மகி..” என்று அருள் அவனை அடக்க, அதற்கு மேல் ஒன்று செய்ய முடியாமல் அவனும் அமைதியாகிவிட்டான். ரைட் சுற்றிக் கொண்டிருக்கும் போது வேறு சுடரை பார்க்கலாம் என்றால் அவன் இருக்கைக்கு பின்னால் இரண்டு இருக்கை தள்ளி  அவள் அமர்ந்திருக்க, அவளை அவனால் பார்க்கவும் முடியவில்லை.

ரைட் சுற்றி நின்ற பின் மகி இருக்கையிலிருந்து எழுந்ததுமே சுடரை தான் முதலில் பார்த்தான். அவள் அந்த ஆடவனை முறைத்தப்படியே இறங்கியதை பார்த்து அவள் அருகில் சென்று என்ன ஆனது? என்று கேட்கலாமென்று பார்த்தால், அடுத்த ரைட் அருள்மொழிக்கு மிகவும் பிடித்தது என்பதால், மகியை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு ஓடினாள். அதனால் அவனால் சுடரொளியிடம் பேச முடியாமல் போய்விட்டது.

சரி அடுத்த ரைடில் சுற்றிவிட்டு வந்ததும் கண்டிப்பாக அவளிடம் பேசிவிட நினைத்தான். ஆனால் அவள் அந்த ரைடில் ஏறாததே அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட, அறிவழகன் கூட அவளிடம் கொஞ்சம் அதிகப்படியாக ஒதுக்கம் காட்டிவிட்டோமோ என்று நினைத்தான்.

அந்த ரைடில் சுற்றிக் கொண்டிருந்தாலும் மகியின் பார்வை முழுக்க கீழே நின்றிருந்த சுடரின் மீதே தான் இருந்தது. இதில் அவள் பேனா எடுத்து எதையோ எழுவதை கவனித்தவன், அடுத்த சுற்று சுற்றும் போது அங்கே சுடர் இல்லாததை கவனித்தான். மனதிற்குள் பதட்டமாகிவிட, சுற்றிக் கொண்டிருக்கும் ரைடில் இருந்து உடனே இறங்க முடியாததால், அது நிற்கும் வரை காத்திருந்தவன், ரைட் சுற்றி நின்றதுமே அருள், அறிவை கூட கவனிக்காமல் பதட்டத்தோடு கீழே இறங்கி வந்தவன், அந்த பெண்ணிடம் சுடர் பற்றி கேட்க, அவள் சுடர் எழுதிய காகிதத்தை கொடுத்ததும், அதிலிருந்த சாரி என்ற வார்த்தையை பார்த்து அவன் மனதிற்கு அத்தனை கஷ்டமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.