(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - தாரிகை - 06 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2002..

இடம் : தூங்கா நகரம் மதுரை.. 

வெற்றியின் வெற்றிடத்தை அனுபவித்துக்கொண்டிருந்தான் தரண்யன்..

எப்பொழுதும் தன்னை அதட்டிக்கொண்டும் மிரட்டிக்கொண்டுமிருக்கும் வெற்றி இல்லாதது தரணுக்கு ஒருவித சுதந்திரத்தை அளித்திருந்தது..

ஒவ்வொருநொடியும் அதனை அனுபவித்துக்கொண்டிருந்தான் தரண்யன்..

அதற்கு எதிர்மாறாய் காணப்பட்டனர் கீதாஞ்சலியும் பரத்வாஜும்..

வெற்றியின் வெற்றிகள் அனைத்தும் இருவருக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுத்திருந்தாலும் அவன் வீட்டில் இல்லாதது இருவருக்கும் சோர்வாய்..

இருவரையும் சுற்றிச்சுற்றி வருபவன் இன்று அருகில் இல்லாததால் எதையோ இழந்துவிட்ட உணர்வு இருவருக்குள்ளும்..

வெற்றி மதுரையைவிட்டுச் சென்று மாதம் இரண்டைக் கடந்திருக்க அது பல யுகங்கள் கடந்ததுபோல் தோன்றியது இருவருக்கும்..

வெற்றியின் நினைப்பிலே உழன்றுகொண்டு தரண்யனின் மாற்றங்களை கவனிக்க மறந்திருந்தனர்..

அதை நினைவுப்படுத்துவது போல் தரணின் பள்ளியிலிருந்து அழைப்பு..

உங்கள் மகனுக்கும் வேறு ஒரு மாணவனுக்கும் தகராறு ஏற்பட்டு இருவருக்கும் மண்டையுடைந்துவிட்டதென..

பதற்றத்துடனும் கோபத்துடனும் பள்ளிக்குப் பறந்தனர் பெற்றோர்கள்..

கண்ணுக்கடியில் சிறு வீக்கத்துடனும் தலையில் சிறியதொரு கட்டுடனும் பிரின்ஸிப்பல் ஆபீஸின் முன்பு நின்றிருந்த தரணைக்கண்டு பாவம் தோன்றாமல் கோபமே எழுந்தது பரத்வாஜிற்கு..

என்ன நடந்ததென கேட்காமல் இரண்டு அடி இலவசமாக அவர் கொடுக்க, கீதாஞ்சலி தடுப்பதற்குமுன் அதனை வாங்கியிருந்தான் தரண்யன்..

தந்தையின் அடியை எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்ட தரண்யன், “என்ன நடந்ததென்று கேட்காமல் அடிக்கவேண்டாமேன்று சொல்லுங்கள் அப்பாவிடம்..”, அழுத்தத்துடன் அன்னையிடம் மொழிந்தவனின் பார்வை முழுக்க முழுக்க தந்தையின்மேல் தீர்க்கமாக..

“அப்பாவை எதிர்த்து பேசற அளவுக்கு ஆயாச்சா..??”, கோபம் கொள்வது கீதாஞ்சலியின் முறையானது..

அதற்குள் தன் தவறு உணர்ந்து தன்னைத்தானே நிலைப்படுதிக்கொண்டார் பரத்வாஜன்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“கீதா.. தப்பு என்மேலதான்.. என்னன்னு கேட்காம அவனை அடிச்சிருக்கக்கூடாது..”, வருத்தமாக கீதாவிடம் சொன்னவர், “என்ன நடந்துச்சு தரண்யா..??”, என்று கேள்வி எழுப்பினார் தரண்யனிடம்..

என்னவென்று நான் சொல்லமாட்டேன்.. ஆனால் நான் செய்தது நூறு சதவிகிதம் சரியென்பதாய் தந்தையைப் பார்த்திருந்தான்..

“அப்பா என்னன்னு கேட்கறாங்க இல்லை..?? எதுக்கு அந்த பையன் கூட சண்டைபோட்ட சொல்லு..”, தோளில் கைவைத்தவண்ணம் உரைத்தார் கீதாஞ்சலி..

மீண்டும் அதே பார்வை தரணிடமிருந்து..

பொறுமை பறக்கத்துவங்கியது கீதாஞ்சலிக்கு..

அதற்குள் தரணுடன் சண்டையிட்ட பையன் தன் பெற்றோர்களுடன் வர ஒரு சங்கடமான நிலை இருவரின் பெற்றோர்களுக்குள்..

தரண்யன் அந்தப் பையனை முறைத்தபடி இருக்க மற்றவன் பயந்துபோய் காணப்பட்டான்..

“சின்னப்பசங்க சண்டை.. பெருசு படுத்தவேண்டாம்..”, முதலில் ஆரம்பித்தது பரத்வாஜே..

“தப்பு என் பையன் நிதின் மேலதான்.. மன்னிச்சிருங்க..”, என்றார் நிதினின் தந்தை சுப்பிரமணி ஒருவித தலைக்குனிவுடனும் இதுபோன்ற மகனை பெற்றுவிட்டோம் என்ற விரக்த்தியுடனும்..

அவரின் கூற்றில் பிரச்சனைப் பெரியதென்று புரிந்தது தரண்யனின் பெற்றோருக்கு..

தரண்யனை ஒரு பார்வை பார்த்த பரத்வாஜ் நிதினின் தந்தையிடம், “பரவாயில்லை சார்.. சின்ன பசங்க சண்டை.. இன்னைக்கு அடிச்சுக்குவாங்க நாளைக்கு சேர்ந்துக்குவாங்க..”, என்றார் சமாதானமாக..

இடம் வலமாக தலையை அசைத்த நிதினின் தந்தை, “இனி சண்டை சமாதானம்னு எதுவும் இருக்காது சார்.. இவனை வேறு ஸ்கூலுக்கு மாற்றப்போறோம்..”, தீர்மானத்துடன் ஒலித்தது சுப்ரமணியின் குரல்..

பதறிவிட்டது தரணின் பெற்றோருக்கு..

“சின்ன சண்டை.. இதற்குப்போய் ஸ்கூல்லை மாற்றப்போகிறோம் என்கிறீர்கள்.. அதுவும் பையன் அடுத்த வருஷம் டென்த் வேற.. இவனுக்குத்தான் கஷ்டம்..”, பிரச்சனை என்னவென்று தெரியாமல் நிதினுக்குப் பரிந்து பேசினார் கீதாஞ்சலி..

கீதாஞ்சலியின் வார்த்தைகள் மேலும் குன்றவைத்தது நிதினின் பெற்றோர்களை..

“போனா போயிட்டுப்போகுதுங்க.. ஒருவருஷம்தானே.. அடுத்த வருஷம் முதலில் இருந்து படிக்கட்டும்.. அப்போத்தான் இவனுக்கு புத்திவரும்..”, என்றார் அதுவரை அமைதியாக இருந்த நிதினின் அம்மா சங்கீதா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.