(Reading time: 13 - 25 minutes)

பரத் சொன்னபோதும் அது ஏற்றுக்கொள்ளாமல் போனைக் கைகளில் வைத்திருந்தார் கீதா..

“அம்மா இவங்க போகட்டும்.. அப்பா சொன்ன மாதிரி இவங்க போனதுக்கு அப்புறமா நாம் நித்தி வீட்டுக்குப் போகலாம்..”, இது தரண்யன்..

தந்தை மகனின் பேச்சில் தங்கையிடம் பேச நினைத்ததைக் கைவிட்டார் கீதா..

தாய் தந்தை மகன் மூவரும் ரூமைவிட்டு வெளியே வருவதைப் பார்த்த சுப்பிரமணி நித்யாவைப் பற்றி எதுவோ கேட்கவருவதை உணர்ந்த பரத்வாஜ், “நித்யாக்கிட்ட உங்க பையன் இனி எதுவும் பேச வேண்டாம்.. சாரி கூட கேட்க வேண்டாம்.. பயத்தில் இருப்பவளுக்கு அது இன்னும் பயத்தைத் தான் கொடுக்கும்.. நீங்களும் அவளைப் பார்த்து எதுவும் கேட்க வேண்டாம்..”, என்றார் தீர்மானாக..

புரிந்துவிட்டது சங்கீதாவிற்கும் சுப்ரமணிக்கும்..

நித்யாவை இவர்கள் பார்ப்பதில் இவர்கள் மூவருக்கும் உடன்பாடில்லை என்று..

அமைதியாகவே தங்களுக்குப் புரிந்தது என்று தலையசைப்பு மட்டும்..

“தப்பா நெனச்சுக்காதீங்க சுப்பிரமணி.. நித்யா கண்டிப்பா இந்த விஷயத்தை வீட்டில் சொல்லிருக்கமாட்டா.. நம்ம அவளைப் போய் பார்ப்பதோ அவளை நாம் இங்கு அழைத்துவந்து இதைப்பற்றி விவாதிப்பதோ சரியாக இருக்காது..”

“புரியுதுங்க.. இவன் பண்ண தப்புக்கு மன்னிப்புக் கேட்கனும்னு மட்டும்தான் நினைச்சேன்.. நித்யாவின் நிலைப்பற்றி யோசிக்கவில்லை..”, சிறு குற்றவுணர்வுடன் சொல்லியவர், “எல்லாம் இவனால்தான்..”, என்று நிதினை ஒரு அடிவைத்தார் ஆற்றாமையுடன்..

“என்ன பண்றீங்க மணி..”, சற்றே சத்தமாகச் சொன்ன பரத் அவர் மேலும் நிதினை அடிப்பதற்கு முன் அவரைத் தடுத்திருந்தார்..

“அண்ணா அவரை விடுங்க.. இன்னும் இரண்டு அடி போடட்டும்.. அப்போவாவது இவனுக்கு புத்தி வருதான்னு பார்ப்போம்..”, என்றார் சங்கீதா..

ஐயோ என்னடா இது என்பது போல் ஆனது கீதாவிற்கும் பரத்திற்கும்..

“அடித்தால் எல்லாம் சரியாகிவிடுமா..??”, இது கீதா..

“வேற என்னக்கா பண்ண முடியும் நம்மால..?? அடிக்கத்தான் முடியும்..”, என்றார் சங்கீதா ஆற்றாமையாக..

“நான் சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க.. இந்த வயசுல வர லவ் எல்லாம் வெறும் ஒரு ஈர்ப்பு.. சிலர் அதைப் புரிந்துகொண்டு கடந்து விடுவார்கள்.. சிலர் அதைக் கடக்கத் தெரியாமல் அதை உண்மைக்காதல் என்று நினைத்துக்கொண்டு அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சொல்ல முயல்வார்கள்.. உங்கள் பையன் அதைத் தான் செய்திருக்கிறான்.. அதற்காக உங்கள் பையன் செய்தது தவறில்லை என்று சொல்லவில்லை நான்.. தவறு தான்.. அது நிச்சயம்.. ஆனால் அதற்காக நீங்கள் இவனை அடித்தால் சரியாகிவிடுமா..?? பேசிய புரியவைக்க முயற்சி செய்யுங்கள்.. புரிந்துகொள்வான்..”, என்றார் பரத் பொறுமையுடன்..

“நீங்க சொல்றதெல்லாம் புரியாமல் இல்லை பரத்.. ஆனால் இவன் செய்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. எங்கே எங்கள் வளர்ப்பு தப்பானது என்ற கேள்வியும்..”, என்றார் மணி..

“அப்படி நினைக்காதீர்கள் மணி.. அது அப்படியல்ல.. இது புரிதல் சரியாக இல்லாததால் நிதின் செய்த தவறு.. அவ்வளவே.. எடுத்துச் சொல்லி புரியவையுங்கள்.. கண்டிப்பாக புரிந்துகொள்வான்..”

“புரிந்துகொண்டால் சரிதான்..”, என்ற மணி குடும்பத்தினருடன் கிளம்பினார் கொஞ்சம் தளர்வார்கவே தெளிவில்லாமல்..

முழுவதும் தெளியவில்லை அவருக்கு..

தெளிவுபடுத்த முயலவில்லை தரணின் பெற்றோரும்..

அவரது குடும்ப விஷயம் அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு..

அதில் தாங்கள் தலையிடக்கூடாது என்ற நினைப்பும்..

இவர்களின் இச்செயலால் பாதிக்கப்படப்போவது அவர்கள் மகன் என்று அப்பொழுது தெரியவில்லை பரத்திற்கும் கீதாவிற்கும்..

நிகழப்போவதை முன்பே அறிந்திருந்தால் மணியின் வீட்டினரை தெளிவுபடுத்தியிருப்பார்கள் இருவரும்..

அப்படி என்ன நிகழப்போகிறது தரணின் வாழ்க்கையில்..??

இடம் : கோவை..

கோவை.. மான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா..

சிறுவாணியின் சுவையும் கொங்குத்தமிழ் மொழியும் அவ்வூரின் பெருமையைச் சொல்லும்..

அவ்வூரை மிகவும் பிடித்திருந்தது சமுத்திராவிற்கும் அவள் தாய்க்கும்..

மதுரையை விட்டுக் கிளம்பும் முன் எங்கே போவது என்ற குழப்பம் இருந்தது இருவருக்கும்..

சமுத்திரா ஒரு திருநங்கை என்பதால் தங்க இடம் கிடைக்குமா என்ற கேள்வியும் மனதில் ரீங்கரமாக..

ஆனால் கோவையை வந்தடைந்தபின் அந்தக்கவலை பறந்திருந்திருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.