(Reading time: 13 - 25 minutes)

கீதாஞ்சலியும் பரத்வாஜும் ஒருவரை ஒருவர் என்ன சொல்வதென்று தெரியாமல் பார்த்துக்கொள்ள தரண்யன், “அங்கிள்.. நிதின் இங்கேயே படிக்கட்டும்.. என்ன நடந்துச்சுன்னு இங்க யாருக்கும் தெரியாது.. நான் நடந்ததை யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன்..”, என்றான் உறுதியாக..

கண்கள் கலங்கியது சங்கீதாவிற்கு..

நிதினின் தந்தை நெகிழ்ச்சியுடன் பரத்வாஜின் கைகளைப் பிடித்துக்கொள்ள சாரி என்றிருந்தான் நிதின்..

நிதினின் தலையைக் கோதிவிட்ட கீதா, “சாரி எல்லாம் வேணாம் கண்ணா.. நீ செஞ்ச தப்பை நீ புரிந்துகொண்டாய் அல்லவா..?? அதுவே போதும்..”, என்றார் மென்மையாக..

பிரச்சனையை பெற்றோர்களே பேசித் தீர்த்திருந்தாலும் பள்ளி வளாகத்தில் சண்டை நடந்ததால் மூன்று நாட்களுக்கு இருவரையும் சஸ்பென்ட் செய்ததது பள்ளி நிர்வாகம்..

ரணை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்தனர் கீதாவும் பரத்வாஜும்..

அரை மணி நேரப்பயணத்தில் மூவருக்குள்ளும் மௌனமே நிலவியது..

அதைக்கலைக்க யாருக்கும் மனம் வரவில்லை.. எப்பொழுதும் லொடலொடவென பேசிக்கொண்டிருக்கும் தரண்யன் உட்பட..

அமைதியாகவே கழிந்தது அன்றைய மதிய வேலை நிதினின் வீட்டினர் அவர்களது வீட்டிற்கு வரும்வரை..

பள்ளியில் சந்தித்துவிட்டு வந்தவர்களை வீட்டில் எதிர்பார்க்கவில்லை மூவரும்..

கீதாவும் பரத்வாஜும் வந்தவர்களை வரவேற்க தரண்யன் நிதினின் பெற்றோர்களிடம் வாங்க அங்கிள் ஆண்ட்டி என்றுவிட்டு நிதினை அழைப்பதா? வேண்டாம்மா? என்ற குழப்பத்தில் நின்றிருந்தான்..

தன்னை தரண்யன் அழைக்காததால் வாசலிலேயே நின்றிருந்த நிதினைக் கண்ட கீதா நிதினைக் கூப்பிடு என்பதுபோல் தரண்யனுக்கு சைகை காட்டினார்..

அவரது சொல்லை மற்றவர்கள் முன் தட்டக்கூடாது என்பதற்காக வா நிதின் உள்ளே என்றிருந்தான் தரண்யன்..

தயக்கமாகத்தான் தரணின் வீட்டிற்கு வந்தனர் மூவரும்..

இப்பொழுதும் அதே தயக்கமாக, “எங்களுக்கு உங்க தங்கச்சி பெண் நித்யாவைப் பார்த்து மன்னிப்புக் கேட்கனும்..”, என்றார் சங்கீதா கீதாவிடம் குற்றவுணர்வுடன்..

நித்யாவை இவர்கள் எதற்குப் பார்க்கவேண்டும் என்ற கேள்வி எழுந்தது கீதாவிற்கு..

அதை கேட்க வாய்திறந்த நேரம், “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ஆண்ட்டி..”, என்றிருந்தான் தரண்யன்..

“பெரியவங்க பேசும்போது குறுக்கப் பேசாதே..”, என்ற பரத்வாஜ், “நித்யாவை நீங்க எதுக்கு பார்க்கணும்..??”, கீதா நினைத்ததை கேட்டிருந்தார் அவர்..

“நிதின் பண்ண தப்புக்கு மன்னிப்பு கேட்க..??”

நிதினுக்கும் தரண்யனுக்கும் இடையில் அல்லவா சண்டை.. இதில் நித்யா எங்கு வந்தாள்..?? புரியவில்லை கீதாவிற்கும் பரத்வாஜிற்கும்..

நித்யாவின் பெயர் இடையில் இடைபட இனி பள்ளியில் நடந்தது தெரிந்தே ஆகவேண்டுமென முடிவுசெய்திருந்தார்கள் கீதாவும் பரத்வாஜும்..

அடுத்த நிமிடம் அருகிலிருந்த ரூமில் இருந்தான் தரண்யன் பெற்றோர்களின் முன்பு..

“என்னாச்சு தரண்யா..??”, இது பரத்வாஜ்..

“அது வந்துப்பா..”, என்று தொடங்கியவனுக்கு இருவரிடம் நடந்தது பற்றி சொல்வதில் தயக்கம்..

“எதுவாக இருந்தாலும் சொல்லு தரண்.. நீ சொன்னால் எங்களுக்கு என்னன்னு தெரியும்.. நீ மறைப்பதைப் பார்த்தால் பயமா இருக்கு..”, என்றார் கீதாஞ்சலி..

“அதும்மா.. இவன் நம்ம நித்யாவை ப்ரொபோஸ் பண்ணிட்டான்..”, மிகவும் தயக்கமாகவே ஒலித்தது தரணின் குரல்..

“என்னடா சொல்ற..??”, அதிர்ந்து கேட்டார் கீதா..

“ஆமாம் அம்மா.. ஸ்கூலுக்கு வரப்போ போறப்போ இவன் அவ பின்னாடியே சுத்தியிருக்கான்.. நித்தி சித்திக்கிட்டையும் சித்தப்பாட்டையும் பயந்துட்டு என்கிட்டே சொன்னா.. நான் இவனை போன வாரம் அவ பின்னாடி இனி சுத்தக்கூடாதுன்னு திட்டிவிட்டேன்.. நான் திட்டுனதுக்கு அப்புறம் மூன்று நாள் நித்தி பின்னாடி இவன் வரல.. ஆனா இரண்டு நாளைக்கு முன்னாடி அவகிட்ட ஏதோ சாக்லேட் எல்லாம் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணிருக்கான்.. இவ பயந்துபோய் அழுதுட்டே இருந்திருக்கா போல.. நான் கேட்டேன்.. என்னாச்சுன்னு.. ஒன்னும் சொல்லல அவ.. இன்னைக்கு காலைல திரும்பி இவன் வந்து பேசவும்.. ரொம்ப பயந்துபோய் என்கிட்ட வந்து சொன்னா.. அழுதுட்டே.. எனக்கு கோபம் வந்து அவனை அடிச்சுட்டேன்..”

இது டீனேஜிற்கு உரிய ஈர்ப்பென்று புரிந்தது பெற்றோர்களுக்கு..

தன் தங்கைக்கு அழைக்க கீதா போன் எடுக்க அதைத் தடுத்திருந்தார் பரத்வாஜ்..

“ஏங்க..??”

“வேண்டாம் கீதா.. இவ்விஷயத்தை போனில் பேசவேண்டாம்.. இவங்க வீட்டுக்கு போகட்டும்.. அப்புறமா நித்யா வீட்டுக்கு போகலாம்.. நித்து இன்னும் பயத்தில் தான் இருப்பா.. அது புரியுது.. ஆனால் இப்போ போன் பண்ணி உன் தங்கச்சியை டென்ஷன் படுத்த வேண்டாம்.. எதுவாக இருந்தாலும் நேரடியாகப் பார்த்துக்கொள்ளலாம்..”, என்றார் பரத்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.