(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 04 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

சென்னை விமான நிலையம்

அந்த இரவு நேரம் சுஜனா மிகவும் பதட்டத்தோடு சாத்விக்கிற்காக காத்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பே படப்பிடிப்புக்காக போயிருந்த அனைவரும் திரும்பி வந்திருக்க, சாத்விக் மட்டும் இரண்டு நாள் கழித்து வருவதாக சொன்னவன், இதோ இன்னும் சற்று நேரத்தில் விமானத்திலிருந்து தரையிறங்க போகிறான். அவனை விமான நிலையத்திற்கே சென்று அழைத்து வருமாறு தன் தந்தை கூறியதால், இதோ அவனுக்காக வந்து காத்திருக்கிறாள் அவள்,

“சாத்விக்கை நாளை நேரில் சந்தித்துக் கொள்கிறேன், இப்போது இரவு நேரத்தில் சென்று அவரை எதற்கு அழைத்து வர வேண்டும்.. அதுவும் அவர் நம் வீட்டிற்கு வருவதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சாத்விக் அவர் வீட்டுக்கு தானே செல்ல போகிறார். பிறகு நான் எதற்கு போக வேண்டும்?” என்று அவள் பெற்றொரிடம் கேட்டதற்கு, இருவருமே சிரித்தார்கள்.

“உன்னோட வருங்கால கணவனை பார்க்க போ என்று அனுமதி கொடுத்தால், எதற்கு போக வேண்டும் என்று எங்களிடமே கேட்கிறாயே.. சாத்விக்கிடம் பேச நிறைய இருக்காதா? நாங்களே சொல்லிட்டோமே.. பிறகு  என்ன? போயிட்டு வா..” என்று கூறினர்.

ஆனால் அவளுக்கு தான் அதில் விருப்பமில்லை. இந்த சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் அவர்களுக்கு இதெல்லாம் சகஜமான ஒன்று தான். சாத்விக்கோடு இரவெல்லாம் இருந்தால் கூட ஏனென்று கேட்க மாட்டார்கள். அது தப்பில்லையா? என்று கேட்டால் கூட, சாத்விக்கை நீ கல்யாணம் தனே செய்துக் கொள்ளப் போகிறாய்.. பிறகு என்ன? என்று கேட்பார்கள். திருமணம் ஆன பெண்ணே இன்னொரு ஆடவனுடன் கைகோர்த்து நடனம் ஆடுவதும், கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதையும் வரவேற்கும் சமூகத்துடன் பழகுபவர்கள் ஆயிற்றே, அதனால் இந்த விஷயம் அவர்களுக்கு தவறாக தோன்றாது தான். ஆனால் இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கும் அவர்கள், இதுவரை இப்படி எல்லைமீறும் விஷயங்களை செய்ததில்லை. அதைப்பார்த்து வளர்ந்ததினாலோ என்னவோ கற்பு என்ற சொல்லுக்கான அர்த்தம் புரிந்து வைத்திருந்தாள் அவள்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆனாலும் தனக்கு கிடைத்த சுதந்திரத்தின் எல்லையை தொட்டு பார்த்திடும் ஆசையும் ஆர்வமும் அவளுக்கு இருந்தது. நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்று தெரியாமல் அனைவரோடும் நட்பு என்ற பேரில் உல்லாசமாய் திரிந்தது ஒருகாலம்.. ஆனால் சிலவற்றை பட்டு தான் தெரிந்துக் கொள்ள முடியும் என்ற வகையில் அதில் இருந்த ஆபத்துகளையும் சந்தித்துவிட்டு தான், இப்போது இப்படி இருக்கிறாள். முன்பு போலென்றால், இப்படி ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்த பெற்றோரை அணைத்து நன்றி சொல்லிவிட்டு வந்திருப்பாள். ஆனால் இப்போதோ எதிலும் நாட்டமில்லாத ஒரு நிலையில் இருக்கிறாள். நண்பர்கள் வட்டத்தை வெகுவாக சுருக்கிக் கொண்டாள். ஆடம்பரங்களில் ஆசை இல்லாமல் மனம் எளிமையை விரும்பியது. நானா இப்படி மாறிப் போனது? என்று தன்னையே பலமுறை அவள் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அந்த மாற்றம் ஏற்பட காரணமான நபரை இப்போது நினைத்துப் பர்த்தாள். அவள் அறியாமலேயே அவள் மனதில் ஒரு வகையான இதம் தோன்றியது. இருந்தாலும் அந்த நினைப்பை வலுக்கட்டாயமாக ஒதுக்கியவள், இப்போது சாத்விக்கை நினைத்தாள்.

இப்போது அவனை அழைப்பதற்காக அவள் வந்திருப்பது அவனுக்கு பிடிக்குமா? என்று தெரியவில்லை. அவன் ஒரு நடிகனாக இருந்தாலும், பெண்களிடம் அதிகமாக பேசமாட்டான் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அதுவும் அவனோடு திருமணம் முடிவானதும் தான், அவனை பற்றி அவள் தெரிந்துக் கொள்ள நினைத்ததே, ஏற்கனவே திருமணம் பற்றி தந்தை பேசியதும் அதிர்ந்தவள், சினிமாவில் நடிகும் கதாநாயகன் தான் அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று தெரிந்ததும், இது தனக்கு சரி வருமா என்று முதலில்யோசித்தாள்.

தந்தை சாத்விக் தான் மாப்பிள்ளை என்று ஒரு அறிவிப்பு போல் சொன்னாரே தவிர, அதில் அவளுக்கு விருப்பமா என்று கேட்கவில்லை. சில விஷயங்களில் தேவைக்கு அதிகமான சுதந்திரத்தை கொடுத்தவர்கள், திருமண விஷயத்தில் நீ சாத்விக்கை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறிவிட்டனர். இப்போது திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்பதில் தான் அவளுக்கு குழப்பம் இருந்ததே தவிர, யரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவள் எந்த வித ஆர்வமும் காட்டியதில்லை. அதனால் தந்தை சொன்னதுக்கு அவளும் சம்மதித்திருந்தாள்.

இருந்தாலும் சாத்விக்கை பற்றி தெரிந்துக் கொள்ள நினைத்தாள் அவள், அப்போது அவள் தோழி ரூபினி தான் சாத்விக் பற்றி அவளிடம் கூறினாள். “சாத்விக் பற்றி எந்த ஒரு தவறான செய்தியும் இதுவரை பத்திரிக்கைகளில் வந்ததில்லையென்றாலும், மதுரிமாவோடு மட்டும் அடிக்கடி கிசுகிசு வரும்.. ஆனால் அதெல்லாம் பொய், மதுரிமா வேறு யாருமில்லை.. அவள் என் நாத்தனார் தான், என் கணவரின் ஒன்றுவிட்ட சகோதரி தான் மதுரிமா.. பத்திரிக்கைகளில் வருவது போல் சாத்விக்கிற்கும் மதுரிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இருந்ததில்லை. அவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துக் கொண்ட போது சாத்விக்கை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். அதனால் நீ சாத்விக்கை திருமணம் செய்துக் கொள்வதில் நீ குழம்பிக் கொள்ளவே வேண்டாம்..” என்று தெளிவாக சொல்லியிருந்தாள். அதன்பின் தான் சுஜனாவும் தந்தையிடம் தன் சம்மதத்தை தெரிவித்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.