(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 02 - மது

Senthamizh thenmozhiyaal

ந்து மகா சமுத்திரத்தில் ஆப்ரிக்காவை ஒட்டிய செஷெல்ஸ் குடியரசு சுமார் நூற்றுப் பதினைந்து தீவுக்கூட்டங்களை உள்ளடிக்கியது.

அதில் இரண்டவாது பெரியத் தீவான ப்ராஸ்ளின் தீவின் பே- சான்ட்- ஆன் (Baie Sainte Anne) துறைமுகத்தில் நங்கூரமிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் சமுத்திர முத்து.

விடியலில் பயணிகள் அனைவரும் ப்ராஸ்ளின் மற்றும் அதன் கிழக்கே அமைந்துள்ள ல தீக் (La digue) தீவின் பீச்சுகள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனக் கேப்டன் செல்வா தெரிவித்தார்.

பயணிகள்  கப்பலில் இரவு உணவை முடித்துக் கொண்டு அரட்டையிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

“நாளை நாம் ப்ராஸ்ளின் பீச்சில் ஷூட் வைத்துக் கொள்ளலாம்” தனது குழுவினரோடு கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார் இயக்குனர்.

வினியின் ஸ்டைலிஸ்ட் அவள் உடை பற்றி விவாதிக்க முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் அந்த அழகி.

“இன்னும் அதை நினைத்து நீ வருந்திக் கொண்டிருக்கிறாயா” ஒளிப்பதிவாளர் கேட்க அவரைப் பார்த்து முறைத்தாள்.

“நான் மூன்று வருடம் காத்திருந்து அவரிடம் அப்பாய்ன்ட்மன்ட் பெற்றேன் தெரியுமா. அவர் புகழ் பெற்ற வடிவமைப்பாளர் என்பதால்  மட்டுமல்ல. அவரோட டிசைன்ஸ், கலர்ஸ் அது அப்படியே இயற்கையோடு ஒன்றியதாக இருக்கும். எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த டிசைனர்” அவள் கூற்றிலே உண்மையான வருத்தம் இருந்தது.

“அவர் இப்போது ஆடைகள் வடிவமைப்பதையே நிறுத்தி விட்டார். அதனால் தான் நான் மிகவும் கோபம் அடைந்தேன்” பிரஞ்சு மொழியில் அவள் கூறியது ஆதியின் செவிகளில் தெளிவாக விழுந்தது.

அதே சமயம் சிபி சாலமன் கேப்டன் செல்வாவை தேடிச் சென்றான்.

“வாருங்கள் மிஸ்டர் சாலமன். நான் தங்களுக்கு எவ்வகையில் உதவ முடியும்” என சிபியிடம் பிரஞ்சு மொழியில் கேட்டார் கேப்டன் செல்வா.

“சிபி என்றே என்னைக் கூப்பிடலாம் கேப்டன்” தூயத் தமிழில் சிபி கூறவும் கேப்டன் செல்வா வியப்படைந்தார்.

“நீங்கள் எப்படி இவ்வளவு நன்றாக தமிழ் பேசுகிறீர்கள்”

“என் அம்மா பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் கேப்டன். அவ்வகையில் எனது தாய் மொழி தமிழ் தான். ஆனால் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பாரீஸில் தான்”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டிருந்த போதும் பாண்டிசேரி பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்தது. 1954ல்  பிரஞ்சு காலனிகள் புதுவை யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட அதிகாரபூர்வமாக எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே இந்தியாவுடன் இணைந்தது.

இன்றளவும் பாண்டிச்சேரிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் ஓர் நெருங்கிய தொடர்பு நிலவியே வருகின்றது.

சிபியின் தந்தை வழி முன்னோர்களில் சிலர்  பிரஞ்சு நாட்டின் அதிகார வர்க்கத்தில் இருந்தவர்கள். ஆதலால் பிரஞ்சு ஆதிக்க நாடுகளில் எல்லாம் சிபியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் செல்வாக்கு இருந்தது.

சிபியின் தாத்தா பல்வேறு நாடுகளோடு வணிகத் தொடர்பு ஏற்படுத்தி மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவ சிபியின் தந்தை அந்நிறுவனத்தைத் திறம்பட நடத்தி வந்தார்.

சிபியும் தந்தையைப் பின்பற்றி தொழில் நிர்வாகத்தில் பங்கேற்றதோடு தானாகப் புதிய முயற்சிகளை மேற்கொண்டான்.

அதில் ஒன்று தான் OCEAN PEARL  என்ற உல்லாசக்கப்பல் நிறுவனம்.

மிகப் பிரபலமான க்ரூஸ் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கேப்டன் செல்வாவை சிபியின் நெருங்கிய நண்பர் பரிந்துரை செய்ய அவரையே இந்த க்ரூஸின் கேப்டனாக தேர்வு செய்தான்.

கேப்டன் செல்வாவும் தனது சொந்த நாடான மொரியஸுக்கு பயணிக்கும் வகையில் அமைந்ததால் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.

சிபியும் கேப்டனும் தமிழிலேயே அவர்களின் குடும்பம், பின்புலம் பற்றி சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

பின் மெல்ல சிபி அன்று மாலை நடந்த நிகழ்வை நோக்கிப் பேச்சைத் திருப்பினான்.

“கேப்டன், தேர்ச்சிப் பெற்ற டைவரே ஆனாலும் கப்பலில் இருந்து கடலில் குதித்து விட்டால் உயிர் ஆபத்து என்பது உண்டு தானே. அதிலும் அந்தப் பெண் மகாசமுத்திரத்தில் ஒரு குளிர்பான டின்னை எப்படி எடுத்து வந்தாள். எனக்கு இன்னும் ஆச்சரியம் விலகவில்லை” சிபி தனது சந்தேகத்தை முன்வைத்தான்.

“அவளும் ஆதியும் இந்து மகாசமுத்திரத்தின் இந்தக் கடல் தடத்தில் நிறைய முறை பயணித்த அனுபவம் உள்ளவர்கள். ஆதலால் தான் நான் பதட்டம் அடையவில்லை” என்பதோடு வேறு விவரங்கள் ஏதும் கூறாமல் பேச்சை வேறு புறம் திருப்பி விட்டிருந்தார்.

அவர் வேண்டுமென்றே இந்த விவாதத்தைத் தவிர்க்கிறார் என்று சிபி அறிந்து கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.