(Reading time: 11 - 22 minutes)

“கேப்டன் எதையோ மறைக்கிறார். அது என்ன என்பதை நானே கண்டுப்பிடிக்கிறேன்” என்று மனதில் நினைத்துக் கொண்டவன் சிறிது நேரம் நீந்திவிட்டு உறங்கச் செல்லலாம் என்று கப்பலின் மேல்தளத்தில் அமைந்த நீச்சல் குளம் நோக்கிச் சென்றான்.

எவ்வளவு நேரம் நீந்தினானோ! கார்வண்ண ஆடையில் வெள்ளைப் பூக்கள் தூவிக் கிடக்க பிறை நிலவு மேலிருந்து அவனைப் பார்த்து சிரித்த வேளை அவன் குளத்தில் இருந்து வெளியேறி அங்கிருந்த ஷவரில் ஒரு குளியல் போட்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பும் போது தான் அவளைக் கண்டான்.

நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

கீழ்த்தளத்தில் நின்று கொண்டு கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் முதுகுப் புறம் தெரிய அவனும் சிறிது நேரம் அவளையே நோக்கினான்.

அவள் முன்பு அணிந்திருந்த டைவ் சூட் உடையை மாற்றி இப்போது சாதாரண பேன்ட் ஷர்ட் அணிந்திருந்தாள்.

அவளது நீண்ட கூந்தல் அலட்சியப் பின்னலில் கட்டுண்டு கிடந்தது.

அவளிடம்  நேரடியாகப் பேசி விடலாம் என்று அவன் தீர்மானித்து அவன் அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு கீழ்த்தளம் வந்து சேர்ந்திருந்த போது அவள் அங்கு இல்லை.

அறைக்குத் திரும்பியவனின் சிந்தனை முழுவதையும் தேன்மொழி தான் ஆக்கிரமித்திருந்தாள்.

ரவின் போர்வையைக் கிழித்துக் கொண்டு கதிரவனின் பொன் கதிர்கள் கடலை ஆலிங்கனம் செய்ய தகதகவென மின்னினாள் கடல்மங்கை.

ஆயிரம் வருடப் பழமை வாய்ந்த நூறு அடி பனை மரங்கள் கம்பீரமாக நிற்கும் ப்ராஸ்லின் கடற்கரையில் கால் பதித்த பயணிகள் அனைவர் முகத்திலும் உற்சாகம் நிறைந்திருந்தது.

கரிய வண்ணக் கிளிகள், நீலவண்ணப் புறாக்கள் எனப் பல அறிய பறவையினங்களின் இருப்பிடமான நேஷனல் பார்க்கையும், அங்கிருந்த அழகிய கடற்கரைகளையும், ல தீக் தீவு வரையிலான படகுப் பயணத்தையும் வெகுவாக ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

காலைப்பொழுதில் பயணிகளோடு அனைத்து இடங்களையும் கண்டு களித்த விளம்பரப் படக் குழு மதிய உணவிற்குப் பின் படப்பிடிப்பிற்கான ஆயதங்களை மேற்கொண்டனர்.

“வினி ஒரு கடல் தேவதைப் போல அலைகளில் இருந்து நடந்து கரையை நோக்கி வந்து இந்தப் பனை மரத்தின் மேல் சாய்ந்து நிற்க வேண்டும்” இயக்குனர் ஷாட்டை விளக்க வெரோனிக்காவும் புரிந்தது என்று தலையாட்டினாள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஷாட் எடுத்து அலுத்துப் போனார்கள் படக்குழுவினர்.

எடுத்தக் காட்சிகளில் ஒருவருக்கும் திருப்தி ஏற்படவில்லை.

“இதை விட சிறந்த ஆங்கிள், லைட்டிங் எல்லாம் இருக்க முடியாது. ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது” இயக்குனர் சொல்ல சிபியும் ஒத்துக் கொண்டான்.

பல டேக்குகள் வாங்கியதால் வினியும் சோர்வடைந்து போயிருந்தாள். ஷூட்டிங் நடந்ததால் அவள் ல தீக் பெர்ரி பயணம் போகவில்லை. அந்த நிராசையும் அவள் முகத்தில் நன்றாகவே பிரதிபலித்தது.

“இன்றைக்கு விட்டால் இன்னும் மூன்று நாட்களுக்குக் கரையைப் பார்க்க முடியாது. மேலும் இந்த இடத்தின் எழிலையும் படம் பிடித்தால் தான் நமது விளம்பரம் நிறைவடையும்” சிபியும் சொல்லவே இன்னொரு ஷாட் எடுக்கலாம் என இயக்குனர் குழுவினருக்கு ஆணையிட்டார்.

ஒளிப்பதிவாளர் கேமராவை தயார் செய்த வேளை லென்ஸின் வழியே தெரிந்தக் காட்சியில் மெய்மறந்து வாவ் என்று சொல்ல கேமராவின் திசை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியது.

முன்னதாக ஆதி பயணிகளுடனே கரைக்குச் சென்று விட தேன்மொழி கப்பலிலேயே தங்கி விட்டிருந்தாள்.

“தேன், கப்பல் ஓனர் உன்னைப் பற்றி விசாரித்தார். நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை” என்று கேப்டன் செல்வா கூற எந்த வித சலனமும்  இன்றி புருவத்தை மட்டும் உயர்த்தி அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டாள்.

“அவர் வலியுறுத்திக் கேட்டால் நான் என்ன சொல்வது” ஒரு வித தர்மசங்கடமான நிலையில் இருந்தார் அவர்.

அந்நேரம் கையில் ஒரு பெரியப் பார்சலோடு ஆதி அங்கே பிரவேசித்தான்.

அவன் கையில் இருந்த பார்சலைப் பெற்றுக் கொண்டு தேன்மொழி அவளது அறைக்குச் சென்று விட கேப்டன் ஆதியிடம் “அது என்ன பார்சல்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆதி கூறிய பதிலில் மேலும் கலக்கம் அடைந்த கேப்டன் அதை அவனிடம் தெரிவிக்க, “உங்களுக்கு எந்த சங்கடமும் வேண்டாம் கேப்டன். எதுவானாலும் என்னைக் கைகாட்டி விட்டுவிடுங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.

“நானும் அக்காவும் கரைக்குச் சென்று உடனே திரும்பி வருகிறோம் கேப்டன்’’ அனுமதி பெற்று படகுடன் தேன்மொழிக்காக காத்திருந்தான்.

“அக்கா அங்கு தான் ஷூட்டிங் நடக்கிறது” என்று படகில் இருந்தவாறே கைகாட்டிய ஆதி தான் படகிலேயே காத்திருப்பதாகக் கூற தேன்மொழி படகில் இருந்து முழங்கால் அளவு கடல் நீரில் குதித்து கரையை நோக்கி நடந்து வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.