(Reading time: 12 - 24 minutes)

தமிழ் தமிழென்று சதா புலம்பும் தாயின் மீது வெறுப்பாக இருந்த போதும் மகள் முன்னிலையில் ஏதும் பேச விரும்பாதவனாக, “என்னமோ பண்ணி தொலைங்க! பத்து மணியானது கூட தெரியாம என்ன கதை வேண்டிகிடக்கோ” சத்தமாக முணுமுணுத்தபடி அகன்றார்.

நிஷ்டாவை பிரசவித்ததும் பூமியை விட்டு பிரிந்துவிட்டாள் ஜெயராமனின் பத்தினி லட்சுமி.  மறுமணத்தை விரும்பாதவனுக்கு மனைவியில்லாமல் தனியொருவனாக மகளை வளர்த்திட முடியுமா என்ற பெருங்கேள்வி அவன் உறுதியான மனதை உலுக்கியது.  பெரிய தொழிலதிபர்! பல தடைகளை தாண்டி க்ரானைட் விற்பனையில் முன்னணி வகிக்கும் ஜெயராமன் தான், தன் சரிபாதியின்றி தங்களின் பிஞ்சுக் குழந்தையை கண்டு கலங்கி நின்றான்.  தன்னை பெற்று வளர்த்த தாயிடம் மகளை ஒப்படைக்கலாம்.  ஆனால் அவருடைய தமிழ் பித்தை நினைக்கும் போதே நடுங்கியது.  தன்னையே தமிழ் தமிழென்று படுத்தி எடுத்தவர், தன்னுடைய அன்பு செல்வத்தை என்ன பாடுபடுத்துவாரோ என்ற கவலை.  தொழில் சம்மந்தமாக அலைந்து திரியும் அவனால் மகளுடன் முழுநாளையும் செலவிட முடியாத நிலை.  குழந்தை வளர்ப்புக்கென யாரையாவது வேலைக்கு அமர்த்தினாலும் அது பாட்டியின் அன்பையும் அரவணைப்பையும் கொடுக்காதே.  தமிழை தவிர்த்து அவரும் தன் மீது பாசத்தை பொழியும் தாய் தானே.  பலவாறாக யோசித்து வேறு வழியேயின்றி மகளை கல்யாணியின் பொறுப்பில் விட்டிருந்தான். 

காலை எட்டு மணிக்கு கிளம்பினால் ஜெயராமன் வீடு திரும்ப இரவு பத்து மணியாகிவிடும்.  நேரம் கழிந்து வந்தாலும் தூங்கும் மகளை பார்ப்பது தான் முதல் வேலையாக இருக்கும்.  பிறகு தான் இரவு உணவு கூட.  வழக்கம் போல் மகளை பார்க்க வந்தவனுக்கு கேட்டது பூ பறிக்க சென்ற மணிமேகலையும், அங்கிருந்த பளிங்கு மண்டபமும்.  மகளை தூங்க வைக்காமல் இன்னமும் கதை சொல்லிக் கொண்டிருந்தது ஒரு புறமென்றால் அதை ஏனென்று கேட்டவனுக்கு கல்யாணிடமிருந்த வந்த குத்தலான பதிலும், அவரை என்ன செய்தால் தகும்? என்று உள்ளுக்குள் கோபம் மூண்டது.  அதே சம்யம் இது எங்கு போய் முடியுமோ என்று அவன் சற்று பயந்ததும் உண்மையே.  அவன் பயந்தது சரிதான் என்பது போல் அமைந்தது ஒரு வாரத்தில் நிஷ்டா அவனை கேட்ட கேள்வி. 

னித தலைகள் மட்டுமே காணக்கூடியதாக நிறைந்து வழிந்த மக்கள் வெள்ளத்தைக் கண்டு வியந்து துள்ளியது மெரினாவின் அலைகள்.

சற்று முன் கடலுக்குள் மறைந்திருந்த கதிரவன் திரும்பிவிட்டானோ என்று சந்தேகம் கொள்ள வைத்தது விளக்குகளால் பளிச்சிட்ட பிரம்மாண்டமான மேடையொன்று.  அதை சுற்றியும் மக்கள் சூழ்ந்திருக்க, ஆங்காங்கே வாசகங்கள் எழுதியிருந்த அட்டைகளை கையில் பிடித்தபடி ஆவலோடு நகரத்தின் நாயகனை எதிர்பார்த்து நின்றிருந்தனர்.  எல்லோருக்கும் அவனை பிடிக்குமென்றாலும் இளம் பெண்களும், குழந்தைகளும் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர்.  கன்னியர் வீரனிடத்தில் காதல் கொள்வதும், குழந்தைகள் தாங்கள் வளர்ந்ததும் அவ்வீரனாக மாறிடுவோம் என்று நம்புவதும் புதிதில்லையே!

இதற்கிடையில் தங்கள் வியாபாரத்தை குறிவைத்த பஜ்ஜி கடைகளும், பானி பூரிகளும், ஐஸ்க்ரீம்களும், சுண்டல் மற்றும் தண்ணீர் விற்பவர்களும் மக்களை கவரந்துகொண்டிருந்தனர்.  என்னதான் வியாபாரம் முக்கியமாக இருந்தாலும் நாயகனை பார்க்கும் ஆவல் அவர்களிடத்திலும் இருந்ததை கடைகளில் தொங்க விடப்பட்டிருந்த அவன் படங்களை பார்த்தபோது புரிந்தது.

இதுவரையில் யாரோ சிலருக்கு மட்டுமே கிடைத்திருந்த அவனை நேரில் காணும் வாய்ப்பு இன்று பலருக்கு கிடைக்க போகும் அந்த அற்புத தருணத்திற்காக ஆவலே உருவாக மக்கள் திரள் காத்திருக்க, திருவிழாவாக களைக்கட்டியிருந்த சென்னை மெரினாவில் செய்தியாளர்களும் குவிந்திருந்தனர். 

ஒன்றா? இரண்டா? மக்களுக்காக அவன் செய்த எண்ணற்ற சாகசங்களும் அற்புதங்களும் அனைவரையும் அவன் வரவை எதிர் நோக்க வைத்திருந்தது!  

ரையில் தான் உருண்டு வந்ததா என்ற சந்தேகத்தை விதைத்தது கறுப்பு நிற ஹார்லி டேவிட்சன் (Matte black Harley Davidson).  அது வந்த வேகத்தை பார்க்கையில் ஓட்டி வந்தவன் மாயாவியோ என்ற எண்ணம் எழுந்தது. முகம் பார்க்கும் கண்ணாடியாக பளபளத்த காலணியும் (shoes), கறுப்பு நிறக் கால் சட்டையும், கவ்வியிருந்த நீல நிற மேல் சட்டை உடலின் வஜ்ர தன்மையை அம்பலபடுத்த, கண்களை மறைத்திருந்த குளிர்க் கண்ணாடியும், காற்றில் அழகாக அசைந்த தலைமுடியுமாக இருந்தவனின் கம்பீரமும் அழகும் விண்ணுலகத்து கந்தர்வனை ஒத்திருந்தது. 

அந்த கம்பீர முகத்தை இன்னும் சற்று நேரம் காண ஆவலெழுந்த வேளையில் எங்கிருந்தோ திடீரென பறந்து வந்த காகிதம் ஒன்று அவ்வெண்ணத்தை அழித்தது.

“மன்னிச்சிடுங்க! காற்று பலமா அடிக்கவும் உங்கட்ட வந்துடுச்சு”

ஆள் அரவற்ற தெருவில் கேட்ட மழலைக் குரலில் சட்டென அக்காகித்தை கையில் பிடித்து இழுக்கவும் தன் முன் நின்றிருந்த சிறுமியை கண்டு மென்முறுவல் உதித்தது.

“அங்கிள், நீங்க ரொம்ப ஹாண்ட்சம்!”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.