(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - மிசரக சங்கினி – 01 - தமிழ் தென்றல்

Misaraga Sangini

பாதரசம் - ஒரு வேதித் தனிமம்.  இது ஒரு கனமான உலோகமாகும்.  வெள்ளியைப் போன்ற நிறமுடைய பாதரசம் சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம்.

மூலக்கூற்று குறியீடு Hg

அணு எண் 80

வீதிகளின் இருபுறமும் வரிசையாக நடப்பட்டிருந்த கொம்புகளில் கட்டியிருந்த பல வகை கொடிகளும், வாழைக் குலைகளும், கரும்புகளும் ஓரழகென்றால் கண்களை நிரைத்து நாசிக்கு சுகந்தமளித்து திண்ணையின் தூண்களில் தொங்கிய பல வண்ண மலர் மாலைகளும், முத்து மாலைகளும் மற்றொரு அழகு.  வெளிச்சத்தை பரப்பி எழில் சேர்க்கும் பாவை விளக்குகள், பூரணக்கும்பங்கள் நிறைந்த கோயில் வாயில்கள்.  மக்கள் நடமாட்டத்திற்கு வசதியாக வீதிகளிலும் மண்டபங்களிலும் புதுமணல் பரப்பப்பட்டிருக்க புகார் நகரமும் மக்களும் விழாக் கோலம் பூண்டிருந்தனர். 

சமயக் கணக்கர்கள், சோதிடர்கள், வணிகத்திற்காக வந்திருந்த பல மொழி பேசும் வேற்று நாட்டவர்கள், மனித உருவில் மக்களின் மத்தியில் சுற்றித் திரியும் தேவர்கள், அமைச்சர்கள், புரோகிதர்கள், காவலர்களென பலரும் கூடி மகிழ்ந்து களிக்க பொதுவியல் கூத்தும், யாழ்ப்பண்ணும், சமயக் கருத்துகளை சபதமிட்டு வாதிட பட்டிமண்டபங்களும் என பல்வேறு தரப்பினரும் ஒன்று கூடும் கோலாகல விழாவது.

இருபத்தியெட்டு நாட்கள் இந்திர விழாக் கண்டு பசியும் பிணியும் நீங்கி மழையும் வளமும் சுரக்குமென்பது மக்களின் நம்பிக்கை.

“நிஜத்துல அப்படியொரு ஊரு இருந்ததா பாட்டி?” ஆர்வமாக கேட்டுவிட்டு பாட்டியின் கழுத்தை கட்டிக்கொண்டாள் சிறுமி.

“ஆமாண்டா நிஷிக்குட்டி! புகார் நகருத்துக்கு மூதூர்னு இன்னொரு பேருக் கூட இருந்தது.  மக்கள் இந்திர விழாவை ரொம்ப கோலாகலமா கொண்டாடினாங்க.  எந்திரனா மாறி பணத்தை மட்டுமே குறியா வச்சு ஓடுற இன்றைய மக்களுக்கு அதுக்கெல்லா நேரமில்லாம போச்சு” சலித்த பாட்டிக்கு

“ஐஸ்க்ரீம் வாங்க பணம் வேணுமே பாட்டி” பணத்தின் தேவையை சொல்லிவிட்டதில் கிளுக்கி சிரித்தாள் நிஷ்டா.

சிறியவளின் கூற்றிலிருக்கும் உண்மையும் அவளின் புத்திசாலித்தனமும் கல்யாணியின் முகத்தில் புன்னைகையாய் பிரதிபலித்தது. 

“நீ சொன்ன மாதிரி ஐஸ்க்ரீம் வாங்க காசு வேணும்டா தங்கம்.  தேவைக்கு பணம்னு இருந்த காலம் போயி, பணம் மட்டுமே வாழ்க்கையா மாறி போனதைதா தப்புனு சொல்ற.  இன்னொரு கதைல இதை பற்றி சொல்ற.  இப்போ புகாருக்கு போவமா?” என்றது தான் தாமதம் என்பது போல் கற்பனையுலகில் குதித்திருந்தாள் நிஷ்டா.   

கண்களில் ஆவல் ததும்பிட, “ஹீரோ, ஹீரோயின் பத்தி சொல்லுங்களே பாட்டி”

“இந்த கதைல ஹீரோயின் மட்டும்தா.  அவள் பேரு மணிமேகலை” கதையை தொடர...

சீத்தலை சாத்தனாரின் வர்ணைக்கு மிகையான ஒரு அழகிய மணிமேகலை நிஷ்டாவின் மனதில் உதித்தாள்.  பாட்டியின் கதை மாந்தர்களுக்கு உருவம் கொடுத்து அவர்களின் சாகசங்களை தன்னுடைய கற்பனையுலகில் கண்டு மகிழும் சிறுமி இப்போதும் மணிமேகலையின் சாகசங்களுக்கு தயாராகினாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்றம்?”

“மணிமேகலை, ஒரு பௌத்த துறவி.  அவளோட அம்மா பேரு மாதவி.  மாதவி ஒரு பிரபல நாட்டியக்காரி.  மணிமேகலையோட அப்பா இறந்த பிறகு எதுவுமே மனசுக்கு பிடிக்காம வீட்டை விட்டு தனியா வந்துட்டாங்க.  இத்தனை வருஷம் ஒன்னும் சொல்லாத மணிமேகலையோட பாட்டி, இப்போ பேத்தியும் பெரிய பெண்ணா வளர்ந்திடவும் இவங்களை இந்திர விழால கலந்துக்க சொல்லி வற்புறுத்துனாங்க.  மாதவி டான்சரா இருந்த போது அனுபவிச்ச கஷ்டத்தையெல்லாம் சொல்லி வர முடியாதுனு மறுத்துட்டாங்க”

மாதவி நாட்டியமாடினாள்.  துயரங்களை அனுபவித்தாள்.  கணவனை இழந்து தனித்து நின்றாள் என வரிசையாக கற்பனை காட்சிகள் விரிந்தன.

“சாமிக்கு மாலை கட்டிக்கிட்டே அம்மா பட்ட கஷ்டத்தையெல்லாம் கேட்ட மணிமேகலை அழுதுட்டா.  கண்ணீர் பட்டு பாழாகிட்ட பூவை சாமிக்கு போட கூடாதுனு புது பூ பறிச்சிட்டு வர, ஃப்ரெண்டோட ஒரு வனத்துக்கு போனா.  அந்த வனத்துல பளிக்கறை மண்டபம்னு ஒரு மண்டபம் இருந்தது.  அது கண்ணாடியால செய்யப்பட்ட ஒலிப்புகா மண்டபம்.  அதுக்குள்ள இருக்க மக்களை வெளியிருந்து பார்க்கலாம் ஆனா அவங்க பேசுறது வெளிய கேட்காது.  இன்னைக்கு சௌண்ட் ப்ரூஃப் க்ளாஸ் வால் ரூம்ஸ் இருக்கில்ல அது மாதிரி”

பளிக்கறை மண்டபம் நிஷ்டாவின் கண்களுக்குள் பளபளத்தது.

அடுத்து பாட்டி சொல்வதை கற்பனையில் வடிக்க காத்திருந்தவளை கலைத்தது சட்டென அறையில் பரவிய வெளிச்சம்.                    

“ஐந்து வயசு குழந்தைக்கு சொல்ற கதையாமா மணிமேகலைக் காப்பியம்? ஏதாவது கருத்து கதை சொல்லுங்க இல்லையா கதையே சொல்லாதீங்க” எரிந்து விழுந்தான் ஜெயராமன்.

“போடா! தமிழோட பெருமையை சின்ன வயசுலிருந்தே சொல்லிக் கொடுத்தாதா நிஷிக்கு நம்ம மொழியோட மேன்மை புரியும்.  அவள் வளர்ந்த பிறகு மொழியை அடுத்த தலைமுறைக்கு பழக்கி விடுவா. எல்லோரையும் உன்னை மாதிரியே இருக்கனும்னு நினைச்சியா? என் பையன் தெரிஞ்சுக்காதத என் பேத்தியாவது கத்துக்குறா” சிறுமியின் கன்னத்தை ஆசையாக வருடினார் கல்யாணி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.