(Reading time: 12 - 24 minutes)

அமேலியா - 55 - சிவாஜிதாசன்

Ameliya

தான் கடந்து வந்த பாதை, கனவுகள் என அனைத்தும் சூன்யமாக மாறிவிட்டதாய் எண்ணினான் வசந்த். வாழ்வே பெரும் பாரமாய் அவனுக்கு தோன்றியது. அடுத்து என்ன என்பதைக் கூட சிந்திக்க மறுத்தான்.

காரை மெதுவாக ஓட்டினான். வேகமாய் ஓட்ட விரும்பவில்லை. தூக்கமின்மையால் அவன் கண்கள் சிவந்து காணப்பட்டன. சாலையின் இருமருங்கிலும் பார்வையை ஓட விட்டவன், மனிதர்களின் மேல் தன் பார்வையை மேயவிட்டான்.

ஊன்றுகோலின் துணையோடு செல்லும் முதியவர், தன் இளமையை நீட்டித்துக்கொள்ள மெதுவோட்டம் செல்லும் இளம்பெண், அரக்க பரக்க நடந்து செல்லும் அலுவலகத்தில் பணி புரியும் ஒருவன் என அங்கிருந்த யாரும் வசந்தை கவனிக்கவில்லை. வசந்த் அவர்களை கவனித்தான்.

அந்த முதியவர் இளமையாய் வாழ்ந்த காலத்தில் எப்படி ஆடியிருப்பார், ஓடியிருப்பார். ஆனால், இன்று வயதின் மூப்பு காரணமாக நடக்க முடியாமல் நடந்து செல்கிறார். முட்டி வலிக்கும்போது அவருக்கு பழைய ஓட்டத்தின் நினைவு வரலாம். அது அவருக்கு வேதனையைக் கொடுக்கலாம்.

அந்த பெண் முதுமை வந்துவிடக்கூடாது என ஓடுகிறாள். ஆனாலும், முதுமை அவளை விட்டுவிடவா போகிறது?

மனிதர்களின் விஷயத்தில் இயற்கை சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அந்த கட்டுப்பாடுகள் தான் மனிதனை வழி நடத்துகின்றன. இதில் யாரும் விதிவிலக்கில்லை.

இயற்கை மனிதனுக்கு ஒன்றை கொடுத்து இன்னொன்றை எடுத்துக்கொள்கிறது. பெரும்பாலான மனிதர்களுக்கு அது தெரிவதில்லை. பணத்தை தேடி அலைபவன் நிம்மதியை இழக்கிறான். நிம்மதியை விரும்புபவன் வாய்ப்பை இழக்கிறான். வாய்ப்பைத் தேடி அலைபவன் மன உளைச்சல் அடைகிறான். வாய்ப்பு கிடைத்தவன் இந்த நிலை போதவில்லையே என புலம்புகிறான்.

கடவுள் யாருக்கும் மகிழ்ச்சியை கொடுப்பதில்லை. மகிழ்ச்சியை தேடிக்கொள்ள சொல்கிறான். இது தான் மகிழ்ச்சி என எதையோ தேடி, இறுதியில் அனைத்தும் துன்பமாக காட்சி தருகிறது.

வசந்த் வேதாந்த சித்தாந்த எண்ணங்களில் மூழ்கினான்.

கார் அவன் பழைய விளம்பர கம்பனியை அடைந்தது. காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு கம்பனிக்குள் நுழைந்தான்.

"வசந்த்!" என்று தூரத்தில் ஒரு குரல் கேட்கவே, திரும்பினான்.

சற்று தூரத்தில் அவனுக்கு தெரிந்தவன் ஓடி வந்து வசந்தின் முன் நின்றான்.

"வசந்த் நான் கேள்விப்பட்டது உண்மையா?"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"என்ன?"

விளம்பர படத்தை இயக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சும் அதை தட்டி கழிச்சிட்டியாமே?"

வசந்தின் உள்ளம் கோபத்தில் நிரம்பி வழிந்தது. எதுவும் பேசாமல் நடையைக் கட்டினான்.

."என்ன வசந்த், நான் கேட்டுட்டே இருக்கேன் பதிலை காணும்?" வந்தவன் விடுவதாயில்லை.

"உனக்கு பதில் சொல்லுறத தவிர எனக்கு நிறைய வேலை இருக்கு" என்று வேகமாய் நடந்தான் வசந்த்..

"முட்டாள். கிடைச்ச வேலையை உதறி தள்ளிட்டு இப்போ வேலை இருக்காம்" என, வந்தவன் முணுமுணுத்துக்கொண்டே படியில் ஏறினான்.

'மத்தவங்க பர்சனலுக்குள்ள நுழையுறதுக்கு எத்தனை பேர் காத்துட்டு இருக்காங்க. அறிவு கெட்டவங்க' என நினைத்துக்கொண்டே லிப்டினுள் ஏறி பத்தாவது மாடிக்கு சென்றான்.

லிப்டினுள் இருந்தவர்களும் வசந்தை ஒருமாதிரி பார்த்து தங்களுக்குள் முணுமுணுக்கவே அவன் கோபம் எல்லை மீறியது. லிப்ட்டின் கதவு திறந்ததும் வேகமாய் விஷ்வாவின் அறையை நோக்கி சென்றான்.

டைரக்டர் விஷ்வா தன் அறையில் யாருடனோ விவாதித்துக்கொண்டிருந்தார். அதனால் சில நிமிடங்கள் அவன் வெளியில் காத்திருக்கும் நிலைமை உருவானது. ஒரு பெண் கதவைத் திறந்து வெளியேற வசந்த் உள்ளே சென்றான். விஷ்வா கம்ப்யூட்டரில் தன் கவனத்தை திருப்பியிருந்தார்.

"சார்" கூச்சதோடு அழைத்தான் வசந்த்.

விஷ்வாவின் கண்கள் சில நொடிகள் மட்டும் வசந்தை பார்த்துவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரின் பக்கம் திரும்பின.

"சொல்லு வசந்த், என்ன இந்த பக்கம்?"

"திரும்ப வேலையில சேரணும் சார்"

"எப்போ நீ வேலையை விட்டு நின்ன இப்போ சேருறததுக்கு?"

வசந்த் அமைதியாக நின்றான். என்ன பதில் கூறுவது என்று அவனுக்கு தெரியவில்லை.

"சாரி சார்"

கம்ப்யூட்டரின் திரையில் மூழ்கியிருந்த விஷ்வாவின் கவனம் வசந்தின் மேல் திரும்பியது.

"எதுக்கு வசந்த் சாரி?"

"நீங்க கொடுத்த வாய்ப்பை வீணடிச்சதுக்கு சார்"

"அது உன் விருப்பம் வசந்த். இதுல நான் மன்னிக்குறதுக்கு என்ன இருக்கு?"

வசந்திடம் மீண்டும் அமைதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.