"முடிஞ்சிதா?" என அதிக சப்தமில்லாமல் கத்தினார்.
"தாத்தா அசையாத, அப்புறம் அசிங்கமா மாறிடுவ" என்றாள் நிலா.
"அய்யோ! வயசான காலத்துல ஏன் என்னை கொடுமைப்படுத்துறிங்க?" என்று நொந்துகொண்டார் நாராயணன்.
"இன்னும் கொஞ்ச நேரம் தான்ப்பா பொறுத்துக்கோங்க" என்றாள் மேகலா.
அமேலியாவின் விழிகள் நாராயணன் மேல் நிலைத்திருந்தன. அவ்வப்போது அவள் இதழில் புன்னகை. அவள் வலது கை தூரிகையால் நாராயணனின் ஓவியத்தை தீட்டிக்கொண்டிருந்தது.
அமேலியாவிடம் நிலா ஓவியம் கற்றுத் தருமாறு அடம்பிடிக்க, அமேலியாவும் வேறு வழியில்லாமல் சம்மதிக்க, முதலில் ஆப்பிள், ஆரஞ்சு என ஓவியம் தொடங்கி குரங்கு, யானை என சென்றுகொண்டிருந்த நேரத்தில் நாராயணன் அங்கு வர, நிலா தாத்தாவை ஓவியமாக வரைய ஆசைப்பட, மேகலாவும் விருப்பப்பட, நாராயணன் தர்மசங்கடத்தில் சிக்கிக்கொண்டார்.
"இன்னும் எவ்வளவு நேரம்? எனக்கு கழுத்தெல்லாம் வலிக்குது" என நாராயணன் பொறுமையிழந்து மீண்டும் கத்தினார்.
"கிட்டதட்ட முடிஞ்சிடுச்சு. அமைதியா இருங்க" என அமேலியா அரபியில் கூறினாள்.
"அவ என்ன சொல்லுறா?" என்றார் நாராயணன்.
"சும்மா சும்மா பேசிட்டு இருந்தா அக்கா உன்னை கழுதையா மாத்திடுவாங்களாம்" என்றாள் நிலா.
நாராயணன் நிலாவை முறைத்தார்.
"ஏய் சும்மா இருடி" என நிலாவை தடுத்தாள் மேகலா.
மேலும் ஐந்து நிமிடங்கள் நாராயணன் அசைய முடியாத நிலை. இறுதியாக ஓவியம் முடிக்கப்பட்டது.
"தாத்தா! முடிஞ்சிடுச்சு" என்று நிலா கத்த, நாராயணன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி இருக்கையில் இருந்து எழுந்தார்.
"இப்போ தான் நிம்மதியா இருக்கு. என் முகத்தை இந்த பொண்ணு என்ன அலங்கோலம் செஞ்சு வச்சிருக்காளோ?" என்றபடி ஆவலோடு சென்று ஓவியத்தை பார்த்தார்.
அவர் விழிகள் மீண்டும் இமைக்க மறந்தன. ஓவியத்தில் இருப்பது தான் தானா என அவர் உள்ளம் நம்ப மறுத்தது. முகம் அவர் சாயலில் இருந்தாலும் வயோதிக தோற்றம் இல்லாமல் இளமையோடு காட்சி தருகிறதே என அவர் எண்ணினார்.
"என்னை வரையுறேன்னு வேற யாரையோ வரைஞ்சு வச்சிருக்கா. இதுக்கு தான் அவ்வளவு நேரம் என்னை உட்கார வச்சு வேடிக்கை பாத்துட்டு இருந்திங்களா?" என ஆவேசமடைந்தார்.
"அது நீங்க தான்ப்பா" என்றாள் மேகலா புன்னகையோடு.
"நானா?" என்றபடி மீண்டும் ஓவியத்தில் கவனத்தை செலுத்தினார் நாராயணன். அவருக்கு ஆமாம் போலவும் இருந்தது இல்லை எனவும் தோன்றியது.
"இது நான் இல்லை"
"நீங்க இளமையா இருந்தா எப்படியிருக்கும்னு அமேலியா கற்பனை செஞ்சு வரைஞ்சிருக்கா"
நாராயணன் அமேலியாவை ஆச்சர்யத்தோடு பார்த்தார். அமேலியாவின் இதழில் புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது.
தன் இளமைத் தோற்றத்தை நாராயணன் பார்த்தபடியே நின்றார். "சின்ன வயசுல நான் எவ்வளவு அழகா இருக்கேன்" என சிரித்தபடியே ஓவியத்தை பார்த்தபடி சொன்னார்.
அந்த நேரத்தில் வசந்த் வீட்டினுள் நுழைந்தான். எல்லோர் விழிகளும் வசந்தின் மேல் திரும்பின. வசந்தின் பார்வை முதலில் அமேலியாவின் மீதும் பின் மற்றவர்கள் மீதும் திரும்பியது.
"மாமா, வா வா உங்கிட்ட ஒண்ணு காட்டணும்" என்றாள் நிலா துள்ளலோடு.
"என்னது?"
"இங்க வா. இது யாருன்னு சொல்லு பாக்கலாம்?"
வசந்த் இருந்த மனநிலையில் வேண்டா வெறுப்பாக அமேலியா வரைந்த ஓவியத்தை பார்த்தான். அமேலியா வரைந்த ஓவியம் என அவனுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், ஓவியத்தில் இருப்பது யார் என அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிரான பார்வையை அமேலியாவின் மேல் வீசினான் வசந்த். அவன் தடுமாறுவதைக் கண்டு அமேலியா சிரித்தாள். வசந்திற்கு கோபம் வந்தது.
"யாரு இது?"
"கண்டுபிடிடா" என்றாள் மேகலா.
"யாரையோ புதுசா வரஞ்சு யாரு யாருன்னு கேட்டா என்ன சொல்லுறது. எதோ பழைய காலத்து ஹீரோ போல இருக்கு"
வசந்த் கூறியதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். வசந்திற்கு எரிச்சலாக இருந்தது.
"எதுக்கு சிரிக்கிறிங்க?"
"இது நம்ம அப்பாடா" என்றாள் மேகலா.
வசந்தின் கண்கள் அகல விரிந்தன. அப்பாவையும் ஓவியத்தையும் மாறி மாறிப் பார்த்தான். நாராயணனுக்கே வெட்கம் எட்டிப் பார்த்தது.
"யாரு இந்த ஐடியா கொடுத்தது?"