(Reading time: 12 - 24 minutes)

"சரி வசந்த், நீ உன் வேலையை பாரு. நான் கொஞ்சம் பிசியா இருக்கேன்".

"ஓகே சார்" என வெளியே வந்த வசந்த், தன் இடத்துக்கு சென்று நாற்காலியில் அமர்ந்து. கண்களை இறுக மூடி நீண்ட பெருமூச்சினை நாசி துவாரத்தில் வெளியேற்றினான்.

இன்னும் என்ன என்ன அவமானங்களை சந்திக்கப்போகிறோமோ என வேதனையடைந்தான் வசந்த்.

அவன் நினைவுகள் மூன்று நாட்கள் முன் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தன.

ஜெஸிகாவும் டைரக்டர் விஷ்வாவும் வற்புறுத்தியதாலும் விளம்பரக் கம்பனி முதலாளி அழைத்திருந்ததாலும் வேறு வழியில்லாமல் அவரைப் பார்க்கப் போனது வசந்தின் தன்மானத்தை வெகுவாக சீண்டிப் பார்த்துவிட்டது.

இறுதி வரை அந்த முதலாளி தன்னைப் பார்க்க அனுமதிக்கவேயில்லை. போனில் தொடர்பு கொண்டாலும் நேரில் சென்று பார்த்தாலும் சரியான பதில் இல்லை. தன்னைக் காண விரும்பாதவர் எதற்காக தன்னை அழைக்கவேண்டும்? அவமானப்படுத்தவேண்டும்?

வென்றவர்கள் என்றுமே எழ முயற்சி செய்பவர்களை ஏளனமாகவே பார்த்து பழக்கப்பட்டுவிட்டனர். இதே வசந்த் பெரிய டைரக்டராக இருந்து அழைக்கப்பட்டிருந்தால் அவனுக்கு கிடைத்திருக்கவேண்டிய மரியாதையே வேறு.

சந்திற்கு அமர்ந்திருக்க பிடிக்கவில்லை, எழுந்தான். கேண்டினை நோக்கி நடந்தான். கேண்டினில் அவ்வளவாக கூட்டமில்லை. அது தான் அவனுக்கு தேவையும் பட்டது. காலியான இருக்கையில் சென்று அமைதியாக அம்ர்ந்தான்.

சாப்பிட எதுவும் ஆர்டர் செய்யவில்லை. சாப்பிடவும் பிடிக்கவில்லை. வீட்டிலும் தன்னால் பிரச்சனை. அதனால், வீட்டிற்கு செல்லவும் விரும்பவில்லை. அவன் தலை வெடித்துவிடும் அளவிற்கு வலித்தது.

"சார்"

வசந்த் கண்களை திறந்தான். வெயிட்டர் நின்றுகொண்டிருந்தான்.

"உங்க ஆர்டர் சொல்லுங்க"

என்ன ஆர்டர் சொல்வது? வழக்கம் போல காபியை ஆர்டர் செய்தான்.

அந்நேரத்தில் ஜெஸிகா அங்கே வர அவள் கண்களில் வசந்த் பட நேராக அவனை நோக்கி வந்தாள்.

"உட்காரலாமா?" ஜெஸிகா நக்கலாக கேட்டாள்.

வசந்த் ஜெஸிகாவை பார்த்தான். "என்ன ஆச்சு உனக்கு?"

"உங்களுக்கு பிடிக்காததை செய்யமாட்டிங்களே. ஒருவேளை, உங்க முன்னாடி நான் உட்கார்ந்தா பிடிக்குமோ என்னவோனு ஒரு பயத்துல கேட்டேன்"

ஜெஸிகாவின் பேச்சை விரும்பாத வசந்த் நீண்ட மூச்சை வெளியேற்றினான். காபி வந்தது. வசந்த் ஜெஸிகாவை பார்க்காமல் காபியை உறிஞ்சினான்.

"அப்புறம்" என்றான் வசந்த்.

"என்ன அப்புறம்? நீங்க தான் சொல்லணும்"

"என்ன சொல்லணும்?"

"தேடி வந்த வாய்ப்பை தெருவுல விட்டுட்டிங்க"

"அப்படியா?"

"நாங்க சொன்ன அட்வைசும் கேக்கல. அந்த கம்பனி ஓனரையும் பாக்கல"

"அவர் தான் என்னை பாக்கல"

ஜெஸிகாவின் புருவம் சுருங்கி விரிந்தது. "நீ அவரை பாக்க போனியா?"

"ஆமா"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"அதான் சொன்னனே அவர் பாக்கலன்னு"

"ஏன்?"

"அவர்கிட்ட தான் கேக்கணும்"

"நான் வேணும்னா பேசி பாக்கட்டுமா?"

"எதுக்கு? நான் திரும்ப அவமானப்படணுமா?"

"அவருக்கு ஏதாவது கோவமா இருக்கும் வசந்த்"

"அப்போ என்னை கூப்பிட்டு திட்டவேண்டியது தான? எதுக்கு பாக்காம அவாயிட் பண்ணணும்?"

அந்த கேள்விக்கு ஜெஸிகாவிடம் பதிலில்லை.

"எனக்கொரு உதவி செய்றியா ஜெஸிகா?"

"சொல்லு வசந்த்"

"தயவு செய்து எனக்கு எந்த உதவியும் செய்ய முயற்சிக்காதே" என அங்கிருந்து எழுந்து சென்ற வசந்த்தை ஜெஸிகா வேதனையோடு பார்த்தாள்.

நாராயணன் சிலையென அமர்ந்திருந்தார். என்றும் அணியாத, அவருக்கு பிடிக்கவே பிடிக்காத மேற்கத்திய கலாச்சாரம் என அவர் வெறுத்த கோட் சூட்டை அவர் அணிந்திருந்தார்.

அவர் உடலில் எந்த அசைவும் இல்லை. இமை கூட மூடவில்லை. நாசி துவாரத்தில் மட்டும் மூச்சுக்காற்று வெளியேறிக்கொண்டிருந்தது. இதுநாள் வரையில் அவர் வாழ்நாளில் இதுபோன்று அமர்ந்ததில்லை. அவர் பொறுமை இழந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.