(Reading time: 12 - 23 minutes)

எத்தனை நேரம் கடந்ததோ சட்டென அருகில் அரவம் உணர்ந்து தன்னை மீட்டெடுத்தவள் திரும்பிப் பார்க்க வழக்கமான தன் அமைதிப் புன்னகையோடு திவ்யாந்த் அவளை பார்த்திருந்தான்.

“என்ன டாக்டர் சார் பக்கத்துல வந்து நின்னா ஒரு குரல் கொடுக்க வேண்டாமா?”

“இல்ல ரொம்ப சீரீயஸா ஏதோ யோசிச்சா மாதிரி இருந்தது சரி அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு அமைதியா இருந்துட்டேன்.”

“யோசிக்குறதெல்லாம் எனக்கு பிடிக்காத வேலை திவா..அதோ அந்த தொடுவானத்தை தான் பாத்துட்டு இருந்தேன்.எப்பவுமே பீச் வந்தா என் கண் அங்க மட்டும் தான் இருக்கும். சுத்தி நடக்குறதெல்லாம் மறந்துடும்.இந்த அலைகளோட சத்தமும் அந்த வானமும் ஏதோ எனக்கு சொல்லிட்டே இருக்கும் நானும் ஆசை தீர கேட்டுட்டே இருப்பேன்.”

“கலா ரசிகைனு நிருபிக்குறியே.என்ன அழகா எக்ஸ்ப்ளெயின் பண்ற.எனக்கு அந்தளவு எல்லாம் சொல்ல தெரில ஆனா தொடுவானமும் இந்த அலையும் மனசை நிம்மதியாக்கிடும்.எனக்கு ரொம்ப பிடிச்ச அடிக்கடி வர இடம் இங்க மட்டும் தான்.”

“வாவ் சூப்பர் ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட் இல்ல.ஆமா என்ன சொன்னீங்க கலா ரசிகையா..ஆனா நீங்க ஒரு தமிழ் ரசிகர்னு சொல்லவே இல்லையே..”

இருவரும் பேசியபடியே மணல் பரப்பில் வந்து அமர,”தமிழ் பிடிக்காதவங்க யாரு இருப்பா?இப்போ நீ கூட நம்ம ஊர் பிடிச்சு தான இங்க வந்துருக்க..”

“உண்மைதான் ஆனா பேச்சு நடை வேற எழுத்து நடை வேற தான.அத்தனை தெளிவான உச்சரிப்பு உங்க வாய்ஸ்க்கு ரொம்பவே சூட் ஆச்சு..இன்னமும் எனக்கு கேட்டுட்டே இருக்கு..”

“ம்ம் நிறைய தமிழ் புக்ஸ் படிப்பேன் கவிதைகள் கதை..பாரதியின் எழுத்து பார்த்து வந்த ஆர்வம் அப்படியே கன்ட்டினியூ ஆகுது.என்னைக்காவது ரொம்ப சந்தோஷமாவோ இல்லை ரிலாக்ஸ்டாவோ இருந்தேன்னா கண்ணாடியில் எனக்கு நானே அப்படிதான் குட் நைட் சொல்லிப்பேன்.அன்னைக்கு தான் முதல் தடவையா உன்கிட்ட சொன்னேன்.என்னை அறியாம வந்துட்டுச்சு அதான் உண்மை..”

“தேட்ஸ் சோ நைஸ்..நிஜமா யூ ஆர் சோ இன்ட்ரஸ்டிங்..மே பி பரதம் மேல ஆர்வம் இருக்கும்போதே இதெல்லாம் நா எதிர்பார்த்துக்கனுமோ..”,என்றவள் புன்னகைத்தாள்.

“ஆமா பாரதியார்னு சொன்னவுடனே தான் நியாபகம் வருது அவரு கவிதைல எதாவது ரெண்டு லைன் சொல்லுங்களேன்.உங்க குரல்ல கேக்க ஆர்வமா இருக்கு..”

லேசாய் யோசித்தவன் பின் மெதுவாய் தொண்டையை சரிசெய்தவாறு,

பாயும் ஒளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;

தோயும் மது நீ எனக்குக் தும்பியடி நானுனக்கு;

 

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;

இது எனக்கு ரொம்பவே பிடிச்ச வரிகள் வெண்பா..அதிலும் அந்த வீணையடி அந்த வரி அதைவிட உருக்கமா ரொமான்டிக்கா ஒரு காதலை சொல்லிற முடியுமா..தன்னவளை வீணையாய் அதை மீட்டும் விரலாய் தலைவன் நினைச்சாலே ஒரு ப்ளசெண்ட் பீல் இருக்கு இல்ல..”

“ம்ம் வாவ் திவா செம ரொமான்டிக் பெர்சனா இருப்பீங்க போலயே உங்க வருங்கால மனைவி ரொம்பவே லக்கி தான்”,என்றவள் சிரிப்போடு அவனை ஏறிட அவனுக்கோ ஏனோ மனதில் அவள் முகமே தோன்றியது தன் வருங்கால மனைவியாய்.

இருந்தும்  எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவளோடு இயல்பாகவே பேச்சைத் தொடர்ந்தான்.

சிறிது நேரத்தில் அவள் கிளம்பத் தயாராக அவன் சற்று நேரம் கழித்து கிளம்புவதாய் கூறி அங்கேயே அமர்ந்திருந்தான்.

கடலை வெறித்தவனுக்கு அவளின் முகம் மனதை மேலும் இதமாக்குவதாய் தோன்றியது.இத்தனை வருடங்களில் எந்த பெண்ணிடமும் ஏற்படாத நட்பும் அதை தாண்டிய மனதளவிலான நெருக்கமும் நிச்சயம் புதிது.

ஒரு மருத்துவனாய் பல பேரிடம் பேசும் சூழல் இருக்கும் பார்க்கும் போது பேசுவதும் சிரிப்பதோடு சரி.ஆனால் இவள் ஒருத்தி தான் மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஒரு பெண் அதுவும் எதேர்ச்சியாய் எந்த திட்டமிடலும் இன்றி.இது ஒன்றே இவள் தனக்காக வந்தவள் தானோ என யோசிக்க வைத்திருந்தது திவ்யாந்தை.

இருந்தும் தன் மனதை வெளிப்படுத்த சிறு தயக்கம் இருந்து கொண்டேயிருந்தது.அதற்கு முக்கிய காரணம் அவனின் வேலை.ஏனெனில் மருத்துவமனையில் மிக முக்கியபொறுப்பில் இருப்பவன்.எந்த இரவில் அழைப்பு வந்தாலும் சென்றாக வேண்டும்.அவனுக்கான விடுமுறை எப்போது என்பது அவனுக்கே தெரியாது இப்போது வரை.

விடுமுறை என்றோ அதுதான் ஞாயிற்றுக்கிழமை.எந்த நேரம் உறங்குகிறானோ அதுதான் இரவு.இப்படியான சூழலில் அவளுக்கு காதலனாய் கணவனாய் அவளுக்கு பிடித்த விதத்தில் அவனால் நடந்து கொள்ள முடியுமா என நிச்சயம் தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.