(Reading time: 15 - 30 minutes)

“எப்படிமா இருக்க..”

“எனக்கு என்ன ராணி மாதிரி சந்தோஷமா இருக்கேன்.ஆனா நீதான் இப்படி எலிப் பொந்து மாதிரி ஒரு வீட்ல உக்காந்துட்டு ஓகாட்..இந்த அப்பார்மெண்டை கண்டுபிடிக்குறதுக்குள்ள.

யோசிச்சு பாரு நம்ம வீடு இந்த மொத்த அப்பார்ட்மெண்டை விட பெரிசு..என்னவோ போ..”,எனும்போதே திவா கை கழுவிவிட்டு அங்கு வர பேச்சை அப்படியே நிறுத்தியவர் வந்தவனை அளவெடுக்க ஆரம்பித்திருந்தார்.

“வாங்க அத்தை.ட்ரிப் எல்லாம் எப்படி இருந்தது?இது என் அம்மா சிந்தாமணி..”

“வாங்க சம்மந்திம்மா..எப்படியிருக்கீங்க..”

“தலையெழுத்து இவளுக்கெல்லாம் நா சம்மந்தியா..எல்லாம் நா பெத்ததை சொல்லணும்.ஊருல வேற ஆளேயில்லனு இப்படி ஒரு கூட்டத்துல வந்து மாட்டிருக்கா பாரு.கடவுளே..”

“ம்ம் ஹாய் ஐ அம் சுலோச்சனா..நீங்க தான் திவ்யாந்தா?”

வெண்பாவிற்கே சற்று எரிச்சல் வந்துவிட்டிருந்தது.மருமகன் என்ற மரியாதையின்றி என்ன பேச்சு இது.வந்த பத்து நிமிஷத்துக்கே மூச்சு மண்டியது வெண்பாவிற்கு.

சிந்தாம்மாவிற்கோ ஏனோ அவரை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது.இருந்தும் இயற்கையாகவே யாரையும் குறைகூறி அறிந்திராதவர் அதை தனக்குள்ளேயே அப்படியே வைத்துக் கொண்டார்.

திவ்யாந்திற்கோ நிச்சயமாய் அவர் சாதாரணமாக மகளை காண வரவில்லையோ என்றே தோன்றியது.அதிலும் ஒரு மருத்துவனாய் அவர் உடல்நலனில் எந்தபிணக்கும் இல்லையோ என்றுதான் தோன்றியது.இருந்தும் அவனும் தன் வெண்பாவின் தாய் என்ற ஒரே காரணத்திற்காக அமைதி காத்தான்.

இப்படியாய் மூவரும் அவரவர் மனநிலையில் இருக்க அதற்குள் சுலோச்சனா சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தார்.

“வாம்மா சாப்ட்டுடே பேசலாமே..உனக்கு பிடிச்ச பொங்கல் கொத்சு செஞ்சுருக்கேன்”

“ஹா..நா வரும்போதே ஹோட்டல சாப்ட்டு தான் வந்தேன்.ஆமா நீங்க மூணு பேர் மட்டும் தானா?வேலைக்கு மெய்ட் எல்லாம் இல்லையா?நீயா சமைக்குற உனக்கு அதெல்லாம் செட் ஆகாதே?”

“ம்மா இது இன்னைக்கு பண்றது இல்ல.நாம வீட்டை  விட்டு வந்ததிலிருந்து பண்றது.இங்கயாவது எனக்கு சிந்தாம்மா ஹெல்ப் பண்ணுவாங்க கல்யாணத்துக்கு முன்னாடி வரை நானே தான எல்லாம் பாத்துக்கணும்..”

“என்ன இது மாமியாரை இப்படி பேர் சொல்லி கூப்பிடுற அத்தைனு சொல்ல மாட்டியா?”

தலை சுற்றியது வெண்பாவிற்கு வந்ததிலிருந்து அவரின் அளவிடும் பார்வையே பாதி கோபத்தை கிளப்பியிருக்க இப்படி தொட்டதிற்கெல்லாம் தேவையற்ற ஆராய்ச்சி கேள்வி அதைவிட படுத்தி எடுத்தது.அதைவிடவும் கொடுமை திவ்யாந்தையோ சிந்தாம்மாவையோ பார்த்து ஒரு வார்த்தை பேசியிருக்காதது.

அந்த நேரம் திவ்யாந்திற்கு அலைப்பேசி அழைப்பு வர அவன் தங்கள் அறைக்குள் நுழைந்து கொள்ள சிந்தாமணி அம்மாவும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.

“ஏன்மா ஏன் மா இப்படியிருக்க உடம்பு சரியில்லனா கூட உன் குணம் கொஞ்சமும் மாறவேயில்லையே..அவங்க முன்னாடி இப்படியா நடந்துப்ப..மருமகனாச்சேனு கொஞ்சமாவது மனசுல நினைப்பு இருக்கா?”

“ஹே வெண்பா எப்போ இருந்து நீ இப்படி ஆன..கடஞ்செடுத்த பட்டிக்காடு மாதிரி பேசிட்டு இருக்க..இந்திய வாழ்க்கை உன்னை ரொம்வே மாத்திருச்சு போல..ஹம்ம்ம் சரி லீவ் இட் அப்பா உன்னோட பேசணும்னு சொன்னாங்க..வீடியோ கால் போட்றேன் பேசு..”

அழைப்பு ஏற்கப்பட்டு திரையில் தன் தந்தையை கண்டவளுக்கு கண்களில் நீர்கோர்க்க குரல் உடைந்து பேச எத்தனித்த நேரம் அவரருகில் இருந்து புதியவன் ஒருவன் ஹாய் என்றான்.

சட்டென தன்னை தேற்றியவள் வரவழைக்கப்பட்ட புன்னகையை அவனுக்கு பதிலளித்துவிட்டு தந்தை புறம் திரும்பி,

“எப்படிப்பா இருக்கீங்க..”

“நா நல்லாயிருக்கேன் வெண்பா..நீ எப்படி இருக்க?இவரு நம்ம பிஸினஸ் பார்ட்னர் கிஷோர்.நம்ம வீட்டுக்கு வந்தா எப்பவும் உன்னைப் பத்தி தான் விசாரிப்பார்..”

“ஓ..ஹாய்..ஹவ் ஆர் யூ..”

“டூயிங் குட்..ஹவ் ஆர் யூ மிஸ் வெண்பா..யூ ஆர் கார்ஜியஸ்..”

“நாட்..”

“ஓ..சரிங்க நா அப்பறமா கால் பண்றேன் பொறுமையா பேசலாம்.நானே இப்போ தான் வந்துருக்கேன்..வச்சுட்றேன்..”

வெண்பா வாய் திறப்பதற்குள் அவரே அழைப்பை துண்டித்திருந்தார்.

“என்னம்மா என்ன தான் ஆச்சு உனக்கு..ஏன் ஏதோ பரபரப்பாவே இருக்க..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல..ட்ராவல் டயர்ட்னு நினைக்குறேன்..சரி சொல்லு எப்படியிருக்க சந்தோஷமா இருக்கியா?கல்யாணம் ஆகி வருஷம் ஆச்சு இல்ல..எதுவும் நல்ல செய்தி இருக்கா..இல்ல இப்போதைக்கு வேண்டாம்னு தள்ளி வச்சுருக்கீங்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.