(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 35 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

முன்பு பார்த்ததற்கு கலகலப்பாக தெரிந்த சுடரொளி இன்று பார்க்கும்போது களை இழந்து தெரிந்தாள். அமுதன் அவளை பார்க்க நேராக ஓவிய பள்ளிக்கே வந்திருந்தான். அவன் இந்தியா வரப்போவதை அவளிடம் தான் தெரிவிக்க முடியவில்லையே, இருந்தாலும் விமானத்தில் இருந்து இறங்கியதும் மகிக்கு பேசியிருந்தான்.

இப்போதுதான் சென்னைக்கு வந்து  இறங்கியதாகவும், ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாகவும்  விஷயத்தை சொல்லிவிட்டு,  சுடரொளிக்கு என்ன பிரச்சனை? அவள் சோர்வாக தெரிவதாக எழில் ஆன்ட்டி கூறினார். அதனால்தான் அவளை காண வந்திருப்பதாகவும், இப்போதைக்கு அவளுக்கு அதை தெரிவிக்கவில்லை. நான் நேரில் சென்று பார்த்து கொள்கிறேன் என்றும் கூறியிருந்தான்.

சுடருக்கு ஏதோ பிரச்சனை என்று மகியும் உணர்ந்து தான் இருந்தான். ஆனால் அதைப்பற்றி  மேற்கொண்டு ஆராய நேரமில்லாமல் அவனது புதிய ஹோட்டல் வாங்கும் வேலை அவனை திசை திருப்பி இருந்தது. இந்த நிலையில் அவளிடம் நேரம் கிடைக்கும்போது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அமுதன் உடனடியாக வந்ததை பார்த்தால் அவள் விஷயம் பெரியதாக தோன்றியது. அவளை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இருந்திருக்கிறேனே என்று அவனே அவன்மீது கோபப்பட்டுக் கொண்டான்.

அவளை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்படியே அமுதன் வந்த விஷயத்தையும் அவளிடம் கூறி விட்டு, வேண்டுமென்றால் அவளுடன் சென்று அவனை பார்த்து விட்டு வரலாம் என்று நினைத்து கிளம்பினான்.

அமுதனுக்கோ நேராக அவளை வீட்டில் சென்று பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. கதிரவன் அவளோடு பேசாமல் இருப்பதால் அந்த வீட்டிற்கு செல்ல தோன்றவில்லை. அவளை அலைபேசியில் அழைத்தாலும் அவள் எடுக்க போவதில்லை. அதனால் நேராக அவள் வேலை பார்க்கும் பள்ளிக்கு சென்று பார்க்கும் பார்க்கலாம் என்று கிளம்பியிருந்தான். அவளுக்கு பள்ளி விடும் நேரம் தெரிந்துதான் வந்திருந்தான்.

சுடரொளி அவனை எதிர்பார்க்கவில்லையே, அவள் பாட்டுக்கு எதையோ நினைத்தபடி வந்து கொண்டிருந்தாள். திடீரென அமுதனை அங்கு பார்த்ததும், அவனிடம் கோபம் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து, ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சார்லி.. எப்போ லண்டனிலிருந்து வந்த? நான் உன்னை எதிர்பார்க்கவே இல்லை, ஏண்டா என்கிட்ட சொல்லவே இல்ல.. இப்படி சர்ப்ரைஸா வந்து நிக்கிற..”

“ஆமா நீ போன எடுத்தா தானே சொல்றதுக்கு, இப்போ என்கிட்ட பேச விருப்பம் இல்லாத அளவுக்கு அப்படி என்ன கோபம் என் மேல, சொல்லு நான் என்ன தப்பு பண்ணேன்..”

“எல்லாம் உன்னால தாண்டா வந்தது.. நீ மட்டும் அன்னைக்கு அப்படி சொல்லலன்னா, நான் நிம்மதியா இருந்திருப்பேன்..”

“நான் என்ன சொன்னேன்..” அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போத, மகியும் வந்து அங்கே நின்று கொண்டிருந்ததை சுடர் பார்த்தாள். இப்போது அந்த விஷயத்தை பற்றி பேச முடியாது என்று தெரிந்து கொண்டு அமைதியாக அவனைப் பார்த்தபடி நின்றாள். அவள் பார்வை போன திசையை பார்த்து அமுதனும் என்னவென்று திரும்பி பார்த்தான்.

“ஹாய் மகி வா வா.. எப்ப வந்த?”

“இப்பதான் வந்தேன், நீ வர விஷயத்தை சுடர்க்கிட்ட சொல்லி, உன்னைப் பார்க்க கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன்..”

“ எனக்குதான் சுடர் வேலைப் பார்க்கும் ஸ்கூல் தெரியுமே, அதான் நேர்ல பார்க்க இங்கேயேவந்துட்டேன்.. சரி வாங்க மூணு பேரும் வெளிய போய் ஏதாச்சும் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்..” என்று அமுதன் இருவரையும் அழைக்க,

மகிழ் உடன் வந்தால் அமுதனிடம் அவன் சம்பந்தப்பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேச முடியாதே என்று சுடர் தயக்கத்தோடு நின்றிருக்க,

ஏதாவது பிரச்சினை என்றால் என்னிடம் சொன்னாலென்ன? அந்த அளவுக்கு நான் அவளுக்கு நெருக்கம் இல்லையா? அமுதனை பார்த்ததும் அவனை கட்டி அணைத்து தன் வருத்தத்தை வெளிப் படுத்துகிறாள் என்றால், அவளுக்கு அப்படி என்ன பிரச்சினை? ஏன் என்னிடம் அவள் சொல்லவில்லை என்று மகிழ்வேந்தனுக்கு லேசாக பொறாமை எட்டிப் பார்த்தது.

அதுமட்டுமில்லாமல் அவனும் உடன் வருவதை சுடர் விரும்பதாது போல் ஒரு தோற்றம் தெரிய, “எனக்கு வேலை இருக்கு அமுதன்.. நீங்க ரெண்டுப்பேரும் போயிட்டு வாங்க.. நான் இன்னொரு நாள் வரேன்..” என்றுக் கூறினான்.

“இப்போ தான் சுடரை அழைச்சிக்கிட்டு என்னைப் பார்க்க வர இருந்ததா சொன்ன.. அதுக்குள்ள என்ன? சும்மா வா மகி..” என்று அமுதன் வற்புறுத்தினான்.

“இல்ல அமுதன், வர வழியில் தான் அறிவு போன் பண்ணான்.. அந்த வேலையை முடிச்சிட்டு தான் சுடரை கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன்.. நல்லவேலை அதுவரை சுடர் என்னோட இருக்க வேண்டியதா இருந்திருக்கும்.. அதுக்குள்ள நீயே வந்துட்ட, நீங்க ரெண்டுப்பேரும் போயிட்டு வாங்க, அப்புறம் இந்த முறை நீ எங்க வீட்டுக்கு கண்டிப்பா வரணும்..” என்று சொல்லிவிட்டு சென்றான்.

மகிழ் ஏதோ வேண்டுமென்றே காரணம் சொல்லிவிட்டு செல்வதாக தான் அமுதனுக்கு தோன்றியது. இதில் அவனை இருக்கச் சொல்லி சுடர் சொல்லவே இல்லை, அப்படியானால் இவர்கள் இருவரின் நடுவில் தான் ஏதோ பிரச்சனை என்பதை அமுதன் யூகித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.