(Reading time: 13 - 25 minutes)

கயல்விழியும் வானதியும் விளக்கேற்றி தொடங்கி வைக்க, சேகர் கேமராவின் பின் அமர்ந்திருக்க “ரெடி ஸ்டார்ட் ஆக்ஷன் கேமரா” என  எப்போதும் போல தேன்மொழி சொல்லவும் படப்பிடிப்பு தொடங்கியது.

மரைன் போட்டோகிராபி பயிற்சி பெற தாத்தாவோடு லண்டனுக்குப் பறந்தாள் தேன்மொழி.

இவ்வுலகில் பல கண்டுபிடிப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அதில் ஒன்று தான் கேமரா.

காலத்தை சிறைபிடிக்க வல்லது. தருணங்களை தன் லென்ஸ் மூலம் உறையச் செய்து என்றென்றும் அழியாமால் நிலைபெறச் செய்யும் சக்தி கேமராவிற்கு உண்டு.

அது மட்டுமல்ல சரித்திரத்தையே புரட்டிபோட்ட, உலகத்தையே உலுக்கச் செய்த வல்லமை புகைப்படங்களுக்கு உண்டு.

புகைப்படம் எடுப்பது என்பது தனிப்பெரும் கலை. சித்திரமும் கைப்பழக்கமும் என்பது போல அக்கலையை கற்றுத் தெளிந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அதிலும் நீருக்கடியில் புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

நீருக்குள் படம் பிடிக்க விசேஷ கேமராக்கள் உள்ளன. நீருக்குள் இருக்கும் பல்வேறு உயிரனங்களை படம் பிடிக்க வேண்டும் எனில் அவற்றின் அருகாமையின் ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் செல்ல வேண்டியும் இருக்கும்.

மனிதன் கண்டறியாத, பெயரிடாத ஏராளமான உயிரனங்கள் சமுத்திரத்தில் அடியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

அவை வாழும் சூழலில் ஏதேனும் வித்தியாசமாக காணப்பட்டால் ஒன்று ஓடி ஒளிந்து கொள்ளும். இல்லை தாக்குதல் நடத்திக் கொல்லும்.

அப்படி உயிருக்கே அபாயம் நிறைந்த ஒன்று தான் மரைன் போட்டோகிராபி.

அக்கலையை கற்றுக் கொண்டால் மட்டும் போதாது அதில் தலைசிறந்தவர்களை குருவாகக் கொண்டு அவர்களிடம் பயில வேண்டும் என்று விருப்பம் கொண்ட தேன்மொழி அதற்கான முயற்சியை மேற்கொண்டாள்.

அவளது ஆர்வத்தைக் கண்டு மாணவியாக சேர்த்துக் கொண்ட தலை சிறந்த மரைன் போட்டோகிரபர்ஸ் கடல் மீது அவள் கொண்டிருந்த காதலை, அங்கு வாழும் உயிரனங்கள் மீது அவள் கொண்டிருந்த பாசத்தைக் கண்டு வியந்தனர்.

மூன்று வருடங்கள் உலகத்தின் பல்வேறு சமுத்திரங்களில் நீந்தித் திரிந்து சமுத்திரத்தின் மடியில் வியாபித்து இருக்கும் கொள்ளை அழகுகளை தனது கேமராவில் படம் பிடித்து தாத்தாவிடம் காண்பித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

“பாப்பா, இன்னிக்கு பாடம் படிச்சியா இல்லையா” வானதி தான் பெரும்பாடு பட்டாள்.

பதினைந்து வயது ஆகிவிட்டதால் கண்டிப்பாக பத்தாவது எழுதி பாஸ் செய்ய வேண்டும் என்று கயல்விழி திட்டவட்டமாக சொல்லிவிட்டிருந்தார்.

அவர்களது நூறாவது படம் மிகப் பெரிய வெற்றியைக் கண்டு கயல்விழிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தர மருமகளுடன் மேடையேறிப் பெற்றுக் கொண்டார்.

பாலிவுட்டின் பார்வை அவர் புறம் திரும்ப பல முன்னணி நட்சத்திரங்கள் தனிப்பட்ட முறையில் ஆடை வடிவமைத்து தரச் சொல்லிக் கேட்க மறுத்து விட்டிருந்தார்.

“நம்ம படங்களுக்கு மட்டும் செய்தா போதும். இது போல தனிப்பட்ட ஆர்டர்களை செய்தா குடும்பத்தை கவனிக்க நேரம் இருக்காது,. பாப்பாவை வேற படிக்க வைக்கணும்” மகளின் கல்வி குறித்து மிகுந்த வருத்தம் கொண்டார் கயல்விழி.

“அவளுக்குப் பிரியமான துறையில் சிறந்து விளங்குவா. நீ ஏன் இவ்வளவு விசனப் படுற” முத்துக்குமரன் ஆறுதல் படுத்த முயன்றார்.

“அவளுக்குப் பிடிச்சதை செய்யட்டும். அதில் சாதிக்கட்டும். அதுல எனக்குப் பெருமை தான். ஆனா அடிப்படை கல்வித் தகுதி கட்டாயம் வேண்டும்” உறுதியாக இருந்தார்.

பாரீசில் நடைபெற்ற சர்வதேச ஆடை வடிவமைப்பு போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று வானதி கூறவும் மருமகளின் விருப்பத்தை ஏற்று அதில் பங்கு பெற ஒப்புக் கொண்டிருந்தார்.

“பாப்பாவோட டென்த் எக்ஸாம் என் பொறுப்பு அத்தை. நீங்க போட்டிக்கு தேவையானதைப் பாருங்க” வானதி தேன்மொழியின் படிப்பிற்குப் பொறுபேற்றுக் கொண்டாள்.

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கயல் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் எல்லா  படத்திற்கும் போன் மூலமாக ரெடி ஸ்டார்ட் ஆக்ஷன் கேமரா என்று தொடங்கி வைப்பாள்.

அதே போல இளமாறன் தான் இசையமைக்கும் படங்களின் முதல் டியூனை தேன்மொழிக்கு அனுப்பி அவள் ஒகே சொன்னதும் தான் மேற்கொண்டு இசையமைப்பான்.

தேன்மொழியின் பிறந்த நாளுக்கு அவள் எங்கிருந்தாலும் குடும்பத்தினர் அனைவரும் அங்கே சென்று பிறந்தநாளைக் கொண்டாடினர்.

பத்தாவது தேர்வு எழுதவென மூன்று மாதங்கள் முன்பே வீடு வந்து சேர்ந்தாள்.

தான் எடுத்த புகைப்படங்களை எல்லாம் அனைவரிடம் காட்டினாள்.

“உலகத்தை காக்கும் கடவுள் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கார்ன்னு சொல்றோமே. ஏன் தெரியுமா. கடலும் அதில் வாழும் உயிர்களும் தான் இந்த உலகத்தையே காத்துட்டு இருக்காங்க” தேன்மொழி சொல்லவும் அனைவரும் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“மனுஷங்க கடலையும் விட்டு வைக்காம திமிங்கிலம், ஆமை எல்லாத்தையும் வேட்டையாடிட்டு இருக்காங்க”

“அதை வேட்டையாடி என்ன செய்வாங்க” வானதி சந்தேகம் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.