(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 37 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

டந்த நான்கு நாட்களாக அருள்மொழியின் அலைபேசிக்கு அமுதன் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு இருந்தான். முதலில் ஹாய், ஹலோ என்ற குறுஞ்செய்தி வந்தது. இத்தனை நாட்கள் இல்லாமல் திடீரென்று இன்று அமுதன் குறுஞ்செய்தி அனுப்புவதற்கான காரணம் என்னவென்று அருள்மொழி முதலில் புரியாமல் விழித்தாள். அந்த செய்திக்கு பதில் செய்தி அனுப்பலாமா? வேண்டாமா? என்று யோசித்தவள்,

“சரி அனுப்பித்தான் வைப்போமே..” என்று முடிவு செய்து, பதிலுக்கு அவளும் “ஹாய்..” என்று அனுப்பி, அப்படியே செய்தியின் மூலமே நலமா என்றும் விசாரித்தாள்.

பதிலுக்கு நலம் என்று சொன்னவன் அவள் நலத்தையும் கேட்டான். அவளும் பதிலுக்கு  தன் நலத்தை தெரியப்படுத்தினாள். அடுத்து உடனே “நான் இந்தியா வந்திருக்கேன்.. இப்போது சென்னையில் தான் இருக்கிறேன்..” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அதை பார்த்து அவள் கொஞ்சமாய் அதிர்ந்து தான் போனாள்.

குறுஞ்செய்தி  வந்த விஷயத்தை இதுவரை இலக்கியாவிடம் தெரிவிக்காமல் தான் அவனுக்கு பதில் அனுப்பி வைத்திருந்தாள். அவன் லண்டனிலிருந்து அனுப்புகிறான் என்று நினைத்து பதில் அனுப்பியவள், அவன் சென்னையில் இருக்கிறான் என்று தெரிந்ததும், பதில் அனுப்பியது தவறோ என நினைத்து தான் பயந்தாள்.

ஆனால் பயம் எதற்கு என்று நினைத்தவள், “அப்படியா ரொம்ப சந்தோஷம்..” என்று ஒரு பதிலை அனுப்பிவிட்டு, இதோடு அவனுக்கு பதில் அனுப்பக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள். அவன் குறுஞ்செய்தி அனுப்பியதை இலக்கியாவிடம்  சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தவள், “ஏற்கனவே சார்லஸ், டயானா என்று உளறிக் கொண்டிருக்கிறாள், இதில் இதை சொல்லாமல் விட்டால், பின்னால் தெரிந்து என்னை இதை வைத்தே கேலி செய்து ஒருவழி செய்துவிடுவாள்..” என்று நினைத்துக் கொண்டு,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஒருவேளை அவன் இலக்கியாவிற்கும் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பானா? என்ற கேள்வியும் தோன்றவே,  அதை இலக்கியாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள நினைத்து, அவளிடம் அமுதன் குறுஞ்செய்தி அனுப்பிய விஷயத்தை கூறி, அந்த செய்தியை காட்டினாள்.

இலக்கியாவோ ஆச்சரியத்தில், “என்ன மச்சி சார்லஸ் உனக்கு மெசேஜ்ல்லாம் அனுப்பி இருக்காரு.. எனக்கு அனுப்ப காணோமே.. ஆமாம் என்னடி நடக்குது..” என்றுக் கேட்கவும்,

“ஹே எனக்கு மட்டும் என்ன மச்சி தெரியும்.. அமுதன் லண்டன்க்கு போகும் போது நம்பர்ல்லாம் கேட்கவும், அப்பவே ஏதாவது மெசேஜ் அனுப்பலாம்னு நானும் எதிர்பார்த்தேன்.. ஆனா அப்போ இல்லாம இப்போ அனுப்பியிருக்காரு.. அதுவும் சென்னை வந்திருக்கார்னா திரும்ப மீட் பண்ணலாம்னு ஏதும் சொல்வாரோன்னு இருக்கு..”

“சரி மச்சி மீட் பண்ணா என்ன தப்பு? அன்னைக்கு ஈவ்னிங் கூப்பிட்டதால நீ போகல.. இப்போ பகலில் போனா என்ன?”

“இதெல்லாம் தேவையில்லாத ஒன்னு.. ஏதோ பார்த்தோம், அதோட விடுவோமா.. அதைவிட்டு மீட் பண்ண்ணும்னு என்ன இருக்கு?”

“அப்புறம் எதுக்குடி ரிப்ளை பண்ண?”

“அது லண்டன்ல இருந்து அனுப்பியிருப்பார்னு நினைச்சேன்.. சரி ரொம்ப நாள் கழிச்சு மெசேஜ் வரவும், ரிப்ளை செய்யலாம்னு தோனுச்சு.. அதுமட்டுமில்லாம நம்ம ரெண்டுபேரையும் அமுதனுக்கு தெரியும், உனக்கும் இதுபோல மெசேஜ் வந்திருக்கும்னு நினைச்சேன்.. ஆனா அப்படி இல்லன்னா ஏதோ தப்பா தெரியல..”

“இதுல என்ன மச்சி தப்பு.. ஒருவேளை என்னோட நம்பரை மிஸ் பண்ணியிருக்கலாம், இல்ல நீ சம்திங் ஸ்பெஷலா இருக்கலாம், அதாவது என்னன்னா சார்லஸோட டயானாக்கு மெசேஜ் அனுப்புறது தப்பில்லையே..” என்று சொல்லிவிட்டு, அதற்கு அருள் என்ன செய்வாள் என்று தெரிந்ததால் உடனே எந்திரிக்க, அதற்குள் அவள் சொன்னது புரிந்து அருள் இலக்கியாவை அடிக்க ஓடினாள்.

கையில் மாட்டியவளிடம் ரெண்டு அடிக் கொடுத்து, “இனி இப்படியெல்லாம் பேசாத.. இருபது  நாள் பழக்கத்தை நீ ஓவரா கற்பனை செஞ்சுக்குற, இனி மெசேஜ் வந்தாலும் நான் ரிப்ளை செய்யப் போறதில்ல சரியா..” என்று அருள்மொழி சொல்லிக் கொண்டாள்.

அவர்கள் இருவரும் எதிர்பார்த்தது போலவே அவன் அடுத்ததாக, “மீட் பண்ணலாமா?” என்று அனுப்பியிருந்தான்.

“ஹே மச்சி ஒருமுறை போய் பார்த்துட்டு வருவோமா?” இலக்கியா கேட்கவும்,

“இப்போ மீட் பண்ண போனா, இதுபோல எப்போ சென்னைக்கு வந்தாலும் மீட் பண்ணலாம்னு சொல்லுவாங்க.. அப்போல்லாம் போய் பார்த்துட்டு இருப்பியா? அதுமட்டுமில்லாம எனக்கு மட்டும் மெசேஜ் அனுப்பி மீட் பண்ண கூப்பிட்டா என்ன அர்த்தம்? வேணா இதோட விடுவோம்..” என்று சொல்லி முடித்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.