(Reading time: 10 - 19 minutes)

ழைகளின் ஊட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் ஏற்காட்டின் மடியின் வீற்றிருக்கும் சேலம்..!! நிஷாவிற்கு சொந்தமானது..!!

தாரிகைதான் நிஷாவின் பெற்றோர்களைக் காணச் செல்லலாம் என்ற யோசனை சொன்னவள்..!! அதைக்கேட்டதும் துள்ளிக்குதிக்கத் துவங்கியிருந்தாள் நிஷா..!!

ஹாஸ்டலில் இருந்து வீடு செல்லும் மனவோட்டம் அவளிடத்தில்..!!

இதோ இப்பொழுது அனைவரும் சேலத்தில்..!!

“நிஷாம்மா.. உனக்கு உங்க வீட்டுக்கு வழி தெரியும்தானே..??”, மாம்பழ ருசியில் தன்னை மறந்து லயித்திருந்தவளின் தோளைத்தொட்டு வெற்றி கேட்டிட..

“ம்.. ம்.. எங்க வீடுகூடத் தெரியாதா எனக்கு.. ஷோ..”, லேசாகத் தலைத்தட்டியபடி உரைத்தவளைக் கண்டு பெவேன்று ரியாக்ஷன் கொடுத்த வெற்றியைக்கண்டு மெலிதாக ஒரு புன்னகை மலர்ந்திருந்தது தாரிகையின் இதழுக்கிடையில்.. வெகு நாட்களுக்குப் பிறகு தோன்றியிருக்கும் மென்னகை அது..!!

“எல்லாம் என் நேரம்..”, தனக்குள்ளே பேசிக்கொண்டன் நிஷாவிடம், “அப்போ போலாமா நாம..??”, என்று கேட்டுவைத்திட..

தனது இதழ்களைத் துடைத்தபடியே வேக வேகமாய் தலையசைத்திருந்தாள் நிஷா..!!

அது ஒரு விசாலமான தெரு..!! இருபக்கமும் தோட்டத்துடன் கூடிய பெரிய பெரிய  வீடுகள்..!! பார்த்தாலே தெரிந்தது அது அப்பர் மிடில் கிளாஸ் மக்களுக்கான குடியிருப்பு பகுதி என்று..!!

“இந்த ஏரியாலதான் உன் வீடா நிஷா..??”, ஒவ்வொறு இடமாய் பார்வையிட்டவண்ணம் பரத்வாஜ் கேட்டிட..

“ஆமாப்பா.. இங்கதான்..”, என்றவள் மூன்று வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு வீட்டைக்காட்டி அதோ என்று சொல்ல..!!

அனைவருக்குள்ளும் ஒருவித பரபரப்பு..!! நிஷாவின் வீட்டினரின் ரியாக்ஷனை நினைத்து..!!

கீதாஞ்சலியுடன் வெற்றியும் தாரிகையும் காருக்குள்ளேயே அமர்ந்துகொள்ள நிஷாவும் பரத்வாஜும் காரைவிட்டு இறங்கியிருந்தனர்..!!

“ப்பா.. இங்கிருந்து போயிடலாமா..??”, நான்கு அடிகள் கடக்கும் முன்னே விழிகளில் நீர் கசந்திட நிஷா பரத்வாஜின் கைகளைத் தன்னுடன் பின்னிக்கொண்டு கேட்க.. அப்படியே உருகிவிட்டது அவருக்கு..!!

“ஏண்டா பயமாயிருக்கா..??”

“ப்ச்.. அதெல்லாம் இல்லைப்பா.. என்னைப்பார்த்தா அம்மாவ அப்பா அடிப்பாங்க.. பாவம் அம்மா வலிக்கும்ல அவங்களுக்கு..”, பாவமாய் நிஷா சொல்ல.. சற்றே தயங்கித்தான் போனது பரத்வாஜின் கால்கள்..!!

இவர்களின் ஒவ்வொறு அசைவுகளையும் பார்த்துக்கொண்டிருந்த தாரிகை காரைவிட்டு இறங்கி இருவரையும் நெறுங்கி, “என்னாச்சுப்பா..?? ஏன் இங்கையே நின்னுட்டீங்க..??”, என்று யோசனையுடன் கேட்க..

“க்கா.. அம்மா பாவம்.. அப்பா அம்மாவை அடிப்பாங்க.. நம்ம திரும்பிப் போலாமா..??”, பரத்வாஜிடம் சொன்னதையே திருப்பிச் சொல்ல.. திகைத்துத்தான் போனாள் தாரிகை..!! என்ன சொல்றா இவ என்பதாய்..!! இருந்தும் அதை எல்லாம் கண்டுகொள்ளாததுபோல் நிஷாவின் கைகளை இறுக்கமாக பிடித்தவள் கேட்டைத்திறந்து உள்ளே பிரவேசித்திருக்க.. அங்கே படிகளில் எங்கோ வெறித்தவண்ணம் ஒரு நாற்பது வயது பெண்மணி..!!

“ம்..மா.. ம்..மா..”, நிஷாவின் இதழ்கள் லேசாக முணுமுணுத்திட.. விழிகள் உயர்ந்தது அங்கு அமர்ந்திருந்தவருக்கு..!!

கண்களில் தென்ப்பட்ட வெறுமை கொஞ்சம் கொஞ்சமாக வடிந்துபோக அதில் இனி காணவே முடியாதென்று நினைத்த ஒன்றை கண்டுவிட்ட மகிழ்ச்சி..!!

அதெல்லாம் ஒரே ஒரு நொடிதான்..!!

சுற்றியும் முற்றியும் அவரது கண்கள் அலைமோதிட.. நிஷாவை நெறுங்கியவர், “ஏன் பாப்பா இங்க வந்த நீ..??”, குரலில் பயத்தைத் தேக்கியபடி..!!

“நாந்தாங்க கூட்டிட்டு வந்தேன்..”, நிஷாவை முந்திக்கொண்டு பதில்தந்த பரத்வாஜ் நடந்ததனைத்தும் சொல்லிட.. தனது மகள் பாதுகாப்பாய் இவர்களிடம் என்ற நிம்மதி அந்தத் தாயின் மனதிற்குள்..!!

கால்களிலேயே விழுந்துவிட்டார் அந்தப் பெண்மணி..!!

“அச்சோ.. என்ன பண்றீங்கம்மா நீங்க..??”, பதற்றமாய் அவரை எழுப்பிவிட.. இன்னும் அழுகையே நிஷாவைப் பார்த்து..!!

“ம்மா.. அழாதீங்க.. நா..ன்.. நா..ன்.. போறேன்..”, தாய்க்காய் சிரித்தபடியே அவரது விழிகளை இவள் துடைத்துவிட.. தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டார்..!!

சில நொடிகளில் தன்னைவிட்டு நிஷாவைப் பிரித்தெடுத்தவர், “அவங்க எல்லாம் திரும்பி வந்திடுவாங்க.. நீங்க சீக்கிரம் கிளம்புங்க..”, என்று அவசரப்படுத்த..

“எதுக்கும்மா இப்படி பயப்படறீங்க..?? யார் வராங்க..??”, கேட்டிருந்தார் பரத்வாஜ்..

“இவங்க அப்பாவும் பாட்டியும்தான்.. இவளை இங்க பார்த்தா கொலையே பண்ணிடுவாங்க.. நீங்க இவளைப் பத்திரமா பார்த்துக்கோங்க..”, என்றவருக்கு என்ன தோன்றியதோ, “ஒரு நிமிடம்..”, என்றுவிட்டு உள்ளே விரைந்திருந்தார்..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.