(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 42 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

சுடரொளி அன்று அலைபேசியில் புலம்பியதிலிருந்தே, மகிழ்வேந்தனிடம் பேச வேண்டும் என்று அமுதவாணன் நினைத்துக் கொண்டிருந்தான். மகியிடமும் ஒருமுறை தனியாக பேச வேண்டும் என்று வேறு சொல்லியிருந்தான். மகியிடம் என்ன பேசலாம்? எப்படி பேசலாம் என்று கூட யோசித்து வைத்திருந்தான். அதற்குள் சுடர் வந்து,

“அருள்மொழிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை.. ஆனால் அவளை ஒத்துக் கொள்ள வைக்கப் போகிறார்கள். ஞாயிற்றுக் கிழமை தான் அவளிடம் பேச போகிறார்கள்..” என்ற தகவலை கூறினாள்.

அருள்மொழிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்ற செய்தி அவனுக்கு ஒருவகையில் மனதிற்கு இதத்தை அளித்ததோ!! ஆனால் அதை அவன் மனதார உணரவில்லை. அப்படி உணர்ந்திருந்தால் அனைத்துமே இப்போதோ சுமூகமாக சென்றிருக்கும்.

ஆனால் அவளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பது அவனுக்கு வேறு ஒரு வகையில் நிம்மதியைக் கொடுத்தது. அப்படியானால் சுடரின் காதலுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாதில்லையா? அதை அவன் வாய்விட்டு சுடரிடம் சொல்லவும்,

“இல்ல சார்லி.. அருள் வேண்டாம்னு சொன்னாலும் கலை பெரியம்மா அவளை கட்டாயப்படுத்தி ஒத்துக்க வச்சிடுவாங்க.. ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் அவளை சம்மதிக்க வைக்கப் போறாங்களாம்.. ஏற்கனவே மகிழ்க்கிட்டேயும் பேசியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..” என்று கூறினாள்.

“அப்போ மகிழ்க்கு இதுல விருப்பம் இருக்கும்னு சொல்றியா?”

“இதுதான் குடுமபத்துக்கு நல்லதுன்னு பேசி சம்மதிக்க வச்சிருப்பாங்க..”

“எனகென்னவோ இதெல்லாம் உன்னோட கற்பனையோன்னு தோனுது சுடர்..”

“இல்ல சார்லி.. மகிழ், அருள் ரெண்டுப்பேரும் குடும்பத்துக்காகன்னு சொன்னா ஒத்துப்பாங்க”

“அது தப்பில்லையா.. கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு வைக்கலாமா? அருள் அம்மா வேணும்னா அப்படிப்பட்ட டைப்பா தெரியுது.. ஆனா மகிழ் அப்பா, அம்மாவை பார்த்தா அப்படிப்பட்டவங்களா தெரியலையே சுடர்..”

“அவங்க அப்படிப்பட்டவங்க இல்லை தான்.. ஆனா கலை பெரியம்மா அப்புறம் பாட்டி மனசை கஷ்டப்படுத்த விருப்பப்பட மாட்டாங்க.. அதனால அதுக்காக மகிழ்க்கிட்ட பேசியிருப்பாங்க..”

“மகிழ் அதுக்கு எப்படி ஒத்துக்கலாம்.. இனியும் தாமதிக்க கூடாது.. அதனால மகிழ்க்கிட்ட நான் இப்பவே பேசப் போறேன்..” என்றான்.

“இல்ல சார்லி.. மகிழ்க்கிட்ட நீ பேச போய், மகிழ் வந்து நான் சுடரை காதலிக்கல.. என்னோட வீட்ல சொல்ற பொண்ணை தான் நான் கல்யாணம் செஞ்சுக்குவேன்னு சொல்லிட்டா .. அதை என்னால தாங்கிக்க முடியாது..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இல்ல சுடர், மகிழ் அப்படியெல்லாம் பேச மாட்டான்..”

“ஒருவேளை சொல்லிட்டா என்ன செய்றது..”

“எது சொன்னாலும் இப்படி பேசினா எப்படி சுடர்.. மகிக்கிட்ட பேசறது தான் எனக்கு பெஸ்ட்னு தோனுது.. அதுவும் வேண்டாம்னா நான் வேறென்ன செய்றது..”

“எனக்கு ஒரு ஐடியா தோனுது.. ஞாயிற்றுக்கிழமை மட்டும் அருள் வீட்ல இல்லன்னா அவளை எப்படி கன்வீன்ஸ் பண்ணுவாங்க..”

“அவ எங்கப் போகப் போறா..” ஒன்றும் புரியாமல் கேட்டான்.

“அவ எங்க போவா.. நீதான் அவளை கூட்டிட்டுப் போகணும்..” என்று அவள் சொன்னதும்,

“இது நடக்கக் கூடிய காரியமா? என்னால எப்படி கூட்டிட்டு போக முடியும்..” என்று கேட்டு அவளை முறைத்தான்.

“உங்களுக்கு ஆல்ரெடி அறிமுகம் இருக்குல்ல.. அதனால் நீதன் இந்த உடவியை செய்ய முடியும் சார்லி..” என்று அவள் சொல்ல,

“ஆமாம் நான் கூப்பிட்டதும் என்கூட வந்துட்டு தான் மறுவேலை பார்ப்பா.. முதலில் நடக்கறதா பேசு சுடர்.. அதுமட்டுமில்லாம ஞாயிற்றுக்கிழமை போனா அடுத்து வேற நாளே வராதா.. அப்போ அவக்கிட்ட அவங்களால பேச முடியாதா?”

“இல்ல இப்படி ஒரு விஷயம் பேசப் போறாங்கன்னு தெரிஞ்சும் அவ வீட்ல இல்லன்னா, அவளுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லன்னு தெரிஞ்சிப்பாங்க சார்லி..”

“முதலிலேயே  அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு தெரிஞ்சு தானே அவளை ஒத்துக்க வைக்க முயற்சி செய்றாங்க..”

“அது வேற சார்லி.. சாதாரணமா அவ வேண்டாம்னு சொன்னா.. அவளை சம்மதிக்க வச்சிடலாம்னு நினைப்பாங்க.. இதுவே அவ வீட்ல இல்லன்னு வச்சிக்கோயேன் அப்போ அவளுக்கு உறுதியா பிடிக்கலன்னு நினைச்சிக்கிட்டு மேற்கொண்டு இந்த கல்யாணம் பேச யோசிப்பாங்க..”

“சரி அவ சாதாரணமா வெளியப் போறதுக்கும் அதனால அவளுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு நினைக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்றுக் கேட்டான்.

இதையெல்லாமா ஒரு காரணமாக திருமணத்திற்கு சம்மதமில்லை என்று எடுத்துக் கொள்வார்கள் என்றிருந்தது அவனுக்கு,

“நமக்கு இதெல்லாம் ஒன்னுமில்ல சார்லி.. ஆனா கலை அத்தை இதெல்லாம் பார்ப்பாங்க.. அதனால இது தான் நல்ல ஐடியாவா தோனுது..” என்றவளுக்கும் இந்த விஷயங்களில் உள்ள தீவிரங்கள் தெரியவில்லை.

சாதாரண நாட்கள் என்றால் கூட பரவாயில்லை. ஆனால் பெண் பார்க்க வரும் சமயத்தில் அந்த பெண் வீட்டில் இல்லையென்றால் அது அவளது நன்னடத்தையை  கூட சந்தேகிக்க வைக்கலாம், அனைவருக்குமே பெருந்தன்மையான மனதோ, பக்குவமோ இருப்பதில்லை. ஒருவருக்கு சாதாரணமாக தெரியும் விஷயம் இன்னொருவருக்கு முக்கியமானதாக படும்..

ஆனால் அருளை முதலில் பெண் பார்க்க தான் வருகிறார்கள் என்பதை சுடர் அறியாததாலும், இங்கு உள்ள பழக்கவழக்கங்கள் கட்டுப்பாடுகள் இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளாததாலும் இப்படியெல்லாம் அவளுக்கு யோசனைகள் தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.