(Reading time: 10 - 19 minutes)

“என்னாச்சு அண்ணாக்கு?” புரியாமல் விழித்தான் உடையான். தர்மாவின் மனதை ஏதோ மர்மமான பந்து அடைப்பதாக ஓர் உணர்வு! ஆனால், அதன் காரணம் மட்டும் விளங்க மறுத்தது.

“இந்த வருஷம் நம்ம வயக்காட்டுல விளைச்சல் அமோகமா இருக்குதுங்க! எப்பவும் விட எண்பது மடங்கு அதிக லாபம் பார்த்தாங்க ஐயா! நம்ம லட்சுமி வேற கன்னுப் போட்டு இருக்கு! மழையும் தேவையை பார்த்துப் பெய்யுதுங்க!” முகமல்ர்ச்சியோடு விளக்கினான் இடும்பன். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த விஜயராகவன் அனைத்திற்கும் தலையாட்டி வைத்தார்.

“அடங்! யார்ரா அவன்? மாங்கா அடிக்குறது?” தூரத்தில் எவனையோ பார்த்து கத்தினார் இடும்பன். அதுவரை கவனத்தை எங்கோ வைத்திருந்தவர் சுயநினைவை அடைந்தார். சற்று தூரத்தில் மரத்திலிருந்து ‘டம்’ என்று குதித்தான் ஒருவன். இப்படி ஓடுவதா இல்லை அப்படியா என்று தெரியாமல் விழித்துக் கொண்டே இறுதியில் ஓடும் எண்ணத்தை கைவிட்டு நின்றுவிட்டான் அவன். சற்றே கோபத்துடன் அவனை நெருங்கினான் இடும்பன்.

“யார்ரா நீ? எவ்வளவு தைரியம்? ஐயா வீட்டு மாங்காயை அடிப்ப?” சண்டை தொடங்குவதை கவனித்த ராகவனார் இடும்பனை அமைதிப்படுத்த வாயைத் திறக்க, அவ்விளைஞனுக்காக எங்கிருந்தோ வந்தான் ஒருவன்.

“அண்ணா!எதோ தெரியாம பண்ணிட்டான் விடுங்கண்ணா!” என்றப்படி ராகவனை அவன் நோக்க, பேச்சு உடனடியாகத் தடைப்பட்டது. நான்கு விழிகளுமே உறைந்துப் போயின.

“வாடா போகலாம்!” வந்தவன் அவனை அழைத்துச் செல்ல முற்பட்டான்.

“மருவாதை இருக்கான்னு பாரு! பேசிட்டே இருக்கேன் போற? எவன் புள்ளடா நீ?” கத்தினார் அவர். அவனோ சிறிது மௌனம் சாதித்தான். பின்,

“என் பெயர் ஆதித்ய கரிகாலன்!” என்றதும் தூக்கிவாரிப் போட்டது அவருக்கு! அதுவரை குழப்பத்தில் இருந்தவர் பார்வையில் விளக்க இயலாத ஆச்சரியம்!!

“இவன் என் தம்பி உடையான்!!” என்றதும் கண் கலங்கிவிட்டது ராகவனாருக்கு!!

“நாங்க தர்மாவுடைய பசங்க!” அழுத்தி கூறினான் அவன். இடும்பனோ அதிர்ந்துப் போய் ராகவனை நோக்கினார். அவரது முகரேகையில் ஆயிரமாயிர விளக்க இயலாத உருமாற்றங்கள்!!தம்பியை அழைத்துக் கொண்டு தமையன் புறப்பட்டான்.

“தம்பி!” கூவினார் இடும்பன். அவர் குரலுக்குக் கட்டுப்பட்டவன் திரும்பினான்.

“மன்னிச்சிடுங்க தம்பி!” என்றார் கண்ணீரோடு!! அவன் பதில் பேசவில்லை. விஜயராகவனை, அதாவது, தனை ஈன்ற தந்தையை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு விலகிச் சென்றான் மௌனமாக!!

“உங்களை அவங்களுக்குத் தெரியுமாண்ணா? ஸாரி எல்லாம் கேட்குறாங்க?”ஆர்வத்தை கட்டுப்படுத்த இயலாதவனாக வினவினான் உடையான்.

“அது அம்மாக்கான மரியாதை!” ஒற்றை வரியில் விளக்கினான் கரிகாலன்.

“அம்மாக்கான மரியாதையா?” ஏதும் விளங்கவில்லை அவனுக்கு!!அப்படி என்ன மரியாதை தர்மாவிற்கு!!

“நம்ம தோட்டத்துல எல்லாம் மாங்காவே வரலையா?இங்கே ஏன் வந்து மாங்காய் எடுத்த?” என்றுமில்லாத வெறுப்பை அவன் குரலில் உணர்ந்தான் உடையான்.

“ஏன்ணா? எதாவது பிரச்சனையா?” அவனுக்குத் தெரிந்தது எல்லாம் தமையனின் கோபம் மட்டுமே!!உடையான் அஞ்சுவதும், அடிப்பணிவதும் ஆதித்யாவின் குரலுக்கு மட்டுமே!!!

“அதெல்லாம் எதுவுமில்லை. நீ வா! இனி இப்படி சொல்லாம கொள்ளாம அடுத்தவங்க இடத்திற்கு வராதே!” அவன் எதையோ உள் நிறுத்திப் பேசுகிறான் என்பது மட்டும் திண்ணமாக விளங்கியது உடையானுக்கு!அதன் முடிச்சுக்களை அவிழ்க்கும் வல்லமை காலத்திற்கு மட்டுமே உள்ளது!!

ஈன்ற புதல்வனை இத்தனை ஆண்டுகள் கழித்து கண்டோம் என்று ஆனந்திப்பதா? இல்லை, அவன் விழியில் இருந்த வெறுப்பை பழிப்பதா என்று புரியாமல் இல்லத்திற்கு வந்தார் ராகவன். என்றுமில்லாது அன்று மிகுந்த மயான அமைதி அங்கு!!!

“அப்பா நான் இங்கே இருக்கேன்!” பாலகனின் குரல் உயிரை சிலிர்க்க வைக்க சட்டென நிமிர்ந்தார் அவர். அவனோ தன் பால்மணம் மாறா சிரிப்போடு இங்கும், அங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஆதி! எங்கிருக்க நீ? எப்போதுமே விளையாட்டா? அப்பாவுக்கும், மகனுக்கும் வேற வேலையே இல்லையா?” என்றப்படி உள்ளறையில் இருந்து வந்தார் தர்மா. இவரை கண்டவர்,

“உங்களை தான் கேட்கிறேன்! சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டு எவ்வளவு நேரமாகுது! இங்கே விளையாடிட்டு இருக்கீங்க?நேரமாகுது வாங்க!” என்றப்படி அவர் கரத்தைப் பற்றினார் தர்மா. ஆனால், அவர் கரத்தைப் பற்றிய எவ்வித உணர்வும் ராகவனால் உணர இயலவில்லை.

“த..ர்…மா!” தடுமாறின வார்த்தைகள்.

“என்னாச்சுங்க? அப்படி பார்க்கிறீங்க?வாங்க!” என்றப்படியே காற்றோடு காற்றாக கரைந்தார் தர்மா, உடன் பாலகனும் தான்!

“தர்மா! போகாதே நில்லு!”தடுக்க முனைந்தவர், அருகிலிருந்த மேசையில் மோதி சுயநினைவை அடைந்தார். உண்மையில் அங்கே எவருமே இல்லை!!அனைத்தும் அவரது கற்பனைகளே!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.