(Reading time: 14 - 28 minutes)

ருவிதமான இதமான மனநிலையில் விபாகரன் யாதவியின் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு அமைதியாக அதில் அமர்ந்திருந்தான். மஞ்சுளா சொல்லவே யாதவி கல்லூரி செல்வதற்குள் அவளுக்கு பணம் கொடுக்க வந்திருந்தான்.

பொதுவாக இப்படி எப்போதாவது வீட்டுக்கு வரும் சந்தர்ப்பம் அமைந்தால், ரத்னாவை பார்த்து பேசிவிட்டு வந்துவிடுவான். யாதவியை அடிக்கடி பார்க்க நேரிடாது. இன்று யாதவியை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா? என்று அவன் மனம் அதிகம் எதிர்பார்த்தது.

இன்னும் கல்லூரி சென்றிருக்க மாட்டாள் தானே, இப்படி ஏதாவது ஒரு அரிய சந்தர்ப்பத்தில் தான் அவளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும், அவன் நினைத்தால் அடிக்கடி கூட அவளை பார்க்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம், ஆனால் அதை அவன் விரும்புவதில்லை,

அன்னை அவள் தங்கள் வீட்டு மருமகள் என்று சொன்னதில் இருந்தே இப்படித்தான், அவளை விட ஏழு வயது பெரியவன் என்பது புரிந்து இது சரி வருமா என்று யோசித்தாலும், மனம் அவள் புறம் சாய்வதை அவனால் தடுக்க முடிவதில்லை.

அதற்கு தான் பெரியவர்களின் ஆசையை சிறியவர்கள் முன் பேசக் கூடாது என்று கூறுவார்கள். மஞ்சுளா ரத்னாவின் கவலையை போக்கும் தீர்வாக இப்படி ஒரு எண்ணத்தை விபாவை வைத்துக் கொண்டே சொன்னதால் அவனுக்குள்ளும் அந்த எண்ணம் உருவாக ஆரம்பித்திருந்தது.

ஆனாலும் யாதவியின் வயதையும் படிப்பையும் மனதில் வைத்து தான் அவனும் தன் ஆசைகளை அப்படியே மனதில் போட்டு மறைத்துக் கொண்டிருந்தான்.

பைக்கில் இருந்து இறங்கியவன் வீட்டு கதவைத் தட்ட, யாதவி நல்ல உறக்கத்தில் இருந்தவள் நெளிந்தாள். காலையில் சீக்கிரமே வேலைக்குச் செல்ல வேண்டும் என்று சமைத்து வைத்து விட்டு ரத்னா கிளம்பிவிட்டிருந்தார்.

பன்னீரும் எப்போது கடை திறப்பார்கள் என்று எதிர்பார்த்து சாராயக் கடையின் முன் தவம் இருக்க சென்றிருந்தார். இதில் வழக்கமாக இருக்கும் அன்னையின் அர்ச்சனை இல்லாததால் யாதவி நன்றாக உறங்கிக் கொண்டிருக்க,

தொடர்ந்து யாரோ கதவைத் தட்டிக் கொண்டிருக்கவும், “ச்சே கொஞ்சமாவது நிம்மதியா தூங்க விட்றாங்களா? யாரது காலங்கார்த்தால..” என்று புலம்பியப்படியே போய் கதவைத் திறக்க, அங்கே விபாகரன் நின்றுக் கொண்டிருந்தான்.

“என்ன இவ்வளவு நேரமா கதவைத் தட்டியும் ரத்னா அத்தை திறக்கல.. ஒருவேளை அதுக்குள்ள வேலைக்கு கிளம்பிட்டாங்களோ..” என்று சிந்தித்தப்படியே திரும்ப கதவை தட்டும் போது தான் யாதவி வந்து கதவைத் திறந்தாள்.

“காலேஜ்க்கு டைம் ஆகப் போகுது.. இன்னுமா தூங்கறா.. ஒருவேளை உடம்பு சரியில்லையோ..” என்று மனதில் நினைத்தாலும்,

உறக்கத்தில் இருந்து எழுந்து வந்ததால், இன்னும் உறக்கம் தெளியாமல் ஒரு கண்ணை மூடிக் கொண்டு ஒரு கண்ணால் அவனைப் பார்த்தப்படி இரவு போட்ட பின்னல் கலைந்து முன்னும் பின்னும் முடிகள் பறக்க நைட்டியில் வந்து நின்றவளை பார்த்த போது, “இதுவும் ஒரு அழகு தான்..” என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

ரசனையாய் அவளை அவன் பார்க்க, அவளோ நிற்பது அவன் என்று தெரிந்து, “அலட்சியமாக “ என்ன..” என்றுக் கேட்டாள்.

இவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற பேச்சு இருப்பது யாதவிக்கு தெரியாது. ரத்னா அந்த குடும்பத்துடன் நெருங்கி பழகும் அளவுக்கு, யாதவியோ பன்னீரோ அப்படி பழகியதில்லை.

இதுவே வசதி படைத்தவர்களாக இருந்திருந்தால், அவர்களையும் மதித்து பழக வேண்டும் என்று தோன்றியிருக்கும், ஆனால் அவனது குடும்பமும் அவர்களை போல் தான் என்பதால் தான் யாதவிக்கு ஒரு அலட்சியம் வந்து குடியேறியிருந்தது. அதனால் மஞ்சுளா உட்பட அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரையும் அவள் மதித்து அன்பாக பேசியதில்லை.

அர்ச்சனா அந்த அலட்சியத்தை கண்டுக் கொண்டாள். ஆனால் ரத்னா மீது இருக்கும் அன்பின் காரணமாக மஞ்சுளாவிற்கும், யாதவியின் மேல் எற்பட்டிருக்கும் காதலின் காரணமாக விபாவிற்கும் அவளது அலட்சியம் புரிவதில்லை.

தெரிந்தவர்கள் என்றாலும் வழிந்து உருகி பேசாமல் இப்படி தள்ளி நிறுத்தி பேசுவது தான் நல்லது என்பதாக யாதவியின் அலட்சியத்திற்கு விபாகரனே ஒரு காரணத்தை கற்பித்துக் கொண்டான்.

ஆனால் அனைவரிடமும் அவள் இதேபோல் இருப்பாளா? அவனது நிலையை வைத்தே அவள் இப்படி அலட்சியம் காட்டுகிறாள் என்பதை அவன் உணராமலேயே இருந்துவிட்டான்.

“உள்ள கூப்பிட மாட்டாளா?” என்று மனம் எதிர்பார்த்தாலும், “தனியா இருக்கால்ல.. அதனால இருக்கும்..” என்று அவனே நினைத்துக் கொண்டான்.

ஆனால் அவள் இந்த அளவுக்கெல்லாம் யோசித்துப் பார்ப்பாளா? என்று அவனுக்கு தெரிந்தால் தானே, அவனை கடுகளவு கூட அவள் முக்கியமாக நினைத்ததில்லை. பின் எப்படி உள்ளே கூப்பிடுவாள்.

“காலேஜ் எக்சாம் ஃபீஸ் கட்டணுமாமே.. நேத்து ரத்னா அத்தை வந்து பணம் கேட்டப்போ கையில் இல்லை. அதான் அம்மா இப்போ கொடுத்துவிட்டாங்க..” என்று கூறினான்.

அவன் பணம் தான், வேறு ஒரு செலவுக்கு வைத்திருந்ததை கூட அவளுக்கு தேவை என்று தெரிந்ததும் அப்படியே எடுத்து வந்துவிட்டான். இருந்தும் அவன் பணம் என்று சொல்லாமல் அன்னை கொடுத்து அனுப்பியதாக கூறினான்.

ஆனால் அது யார் பணமாக இருந்தால் என்ன? அவனிடம் வாங்குவதே அவளுக்கு அவமானமாக இருந்தது.

“இந்த அம்மாவே பணம் வாங்கிட்டு வரக் கூடாதா? இப்படி வீடு தேடி வந்து அவங்க கொடுத்து, அதுவும் நான் வாங்கணும்.. அய்யோ..” என்பது போல் நினைத்தவள், இருந்தும் பரிட்சைக்கு பணம் கட்ட வேண்டுமே அதனால் வாங்கிக் கொண்டவள்,

“அம்மா வேலைக்கு போயிருக்காங்க.. அவங்க வந்ததும் நீங்க பணம் கொண்டு வந்து கொடுத்தீங்கன்னு சொல்றேன்..” என்று “கிளம்பறீயா..” என்பது போல் கூற,

அவனோ, “ஆமாம் காலேஜ்க்கு டைம் ஆகுதே நீ இன்னும் கிளம்பாம இருக்க..” என்று பேச்சை வளர்த்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் " உன்னையே தொடர்வேன் நானே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அது கொஞ்சம் லேட்டா போனா போதும் இப்போ தான் கிளம்ப போறேன்..” என்று அவசர அவசரமாக பதிலளித்தாள்.

“ம்ம் படிப்பெல்லாம் எப்படி போகுது.. பாடமெல்லாம் புரியுதா? எக்சாம் வரப் போகுது ஏதாச்சும் சந்தேகம்னா கேளு..” என்று இன்னுமே அவன் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்க,

“எல்லாம் ஈஸியா தான் இருக்கு.. டவுட்னா கேக்கறேன்.. இப்போ எனக்கு காலேஜ்க்கு டைம் ஆகுது கிளம்பணும்..” என்று பாவமாக கூற,

“சரி சரி எனக்குமே நேரம் ஆகுது.. எக்ஸாம்க்கு நல்லா ப்ரீபேர் ஆகு..” என்று சிரித்தப்படியே சொல்லிவிட்டு செல்ல,

“சரியான டார்ச்சர்..” என்று வாய்விட்டு உரைத்துவிட்டு அவள் உள்ளே சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.