தொடர்கதை - சிவகங்காவதி - 08 - ஸ்ரீ
“நெய்தல் திணை- தாய்க்கு உரைத்த பத்து
தலைவன் களவிலோ கற்பிலோ பிரிந்திருக்கும் போது வருந்தும் தலைவியின் நிலை குறித்துத் தாய் (செவிலித்தாய்) வருந்துவாள். வருந்தும் தாய்க்குத் தோழி சில சொல்லுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தாய்க்கு உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
அன்னை வாழி வேண்டன்னை உதுக்காண்
ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்புஇழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே- (101)
(உதுக்காண் = அதோ பார்; பாசடும்பு = பசிய அடப்பங்கொடி; பரிய = வருந்துமாறு; ஊர்பு இழிவு = ஏறியிறங்கி; உண்கண் = மையுண்ட கண்; கொண்கன் = கணவன்)
என்ற பாடலில் தலைவியின் பிரிவு நோய்க்கு மருந்தாகிய தலைவனின் தேர் வந்து விட்டது என்று தோழி செவிலியிடம் கூறும் ஆறுதல் செய்தி இடம் பெற்றுள்ளது. அறத்தொடு நிற்கும் பாடல்களும் இப்பகுப்பில் இடம் பெற்றுள்ளன. அன்னை வாழி, அம்ம வாழி போன்றவை விளிகள்”
தன்முன் சிலையென சமைந்திருந்த நஸீமை கையசைத்து நினைவிற்குக் கொண்டு வந்தாள் சிவகங்காவதி.
“நிச்சயம் நான் கூறியதை அன்றி வேறு காரணமேதுமில்லை தங்களைக் காப்பாற்றுவதற்கு.”
“ஆ..அதுவல்ல என் மௌனத்திற்கான காரணம்,முதன்முறையாய் என் எதிரி நாட்டைச் சேர்ந்த ஒருத்தி என்னை நல்லவன் என்று கூறக் கேட்கிறேன்.அந்த வியப்புதான் வேறொன்றுமில்லை.சரி வெகு நேரமாகிவிட்டது நீ தாதியின் அறைக்குச் செல் மற்றதை காலையில் பேசிக் கொள்ளலாம்.”
“வருகிறேன்.எதற்கும் பாதுகாப்பாய் இருங்கள்.”
சம்மதமாய் தலையசைத்தவன் எழுந்து அவளுக்கு வழிவிட்டு நிற்க அயர்வாய் அவனைக் கடந்துச் சென்றாள் சிவகங்காவதி.
காலை அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.இரவு நடந்த அனைத்தையும் இஷான் கூறியவாறே அவர்களின் திட்டத்தை தனக்குள் சிந்திக்கலானான்.
“இது வெகு நாட்களாய் போடப்பட்ட திட்டம் இவர்கள் நால்வரும் நம் வீரர்களுக்குள் கலந்திருந்து நால்வருக்கும் ஒரேநாளில் அரண்மனைக்கு உள்ளே காவல் பணி வரும் வரை காத்திருந்திருக்கின்றனர்.
இப்படி ஒரு பல நாள் சதிவலைப் பின்னப்படும் வரை யாரும் எதையும் கவனியாது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்!என்ன படைத் தளபதியாரே தங்களுக்கும் இதில் ஏதேனும் தொடர்பிருக்கிறதா?”
“ஐயோ உசூர்!!!என்னைப் பார்த்து என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள்.நிச்சயமாய் எப்போதும் நான் உங்கள் விசுவாசி தான்.”
“அப்படியென்றால் யாருக்கும் நாட்டின் பாதுகாப்பு மீது அத்துனை அக்கறை இல்லை அப்படித்தானே!இது என் ஆட்சிமுறைக்கே கிடைத்த மிகப் பெரிய அவமானம்.உங்களுக்கு பத்து நாட்கள் அவகாசம் தருகிறேன் அதற்குள் இந்த தாக்குதலுக்குக் காரணமானவனின் தலை என் பாதத்தை சரணடைந்திருக்க வேண்டும்.”
“இப்போதே இதற்கான பணியைத் தொடங்குகிறோம் உசூர்!”
ஆத்திரத்தில் அவனின் முகம் சிவந்து கண்கள் ரத்தமென கொதித்திருந்தது.சமீரா அவனைப் பார்த்துச் செல்வதற்காக அவனது அறைக்கு வந்தார்.
“நஸீம்!!இப்போது வலி குறைந்திருக்கிறதா?கையில் பட்ட காயம் வேறு எங்கும் பட்டிருந்தால் நினைக்கவே பயமாய் இருக்கிறது.இது எப்படி சாத்தியம் என்னால் இன்னமும் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை”
“எதிர்த்து போரிடுபவனை விட துரோகத்தால் சூழ்ச்சியால் வீழ்பவனே அதிகம் தாதி அவர்களே. நான் எதிர் கொண்டமுதல் சூழ்ச்சி இதுவே. அந்த கவனக் குறைவிற்கு தண்டனையாய் தான் இந்த காயம்.இந்த வடுவைப் பார்க்கும் நேரமெல்லாம் நடந்த துரோகம் மனக்கண்ணில் வந்து கொண்டேயிருக்கும்.
அதே நேரம் நேர்மையான ஒரு ஆத்மாவின் முகமும் மனதில் தோன்றிக் கொண்டேயிருக்கும்.”
“நஸீம்!!”
“ஆம் தாதி அவர்களே அந்த கங்காவைத் தான் கூறுகிறேன்.அவள் மட்டும் இல்லையென்றால் இப்போது நான் அல்லாஹ்வை சரணடைந்திருப்பேன்.எத்துனை பேருக்கு இந்த மனம் இருக்கும்.ஏன் நானே கூட கண்ணெதிரில் என் எதிரிக்கு ஆபத்தென்றால் இப்படி உதவியிருப்பேனா?
இன்னுமும் என்னால் அவளின் வார்த்தைகளில் இருந்து மீள முடியவில்லை.ஒரு சிறு பெண் எத்தனை பக்குவமாய் இருக்கிறாள்.நான் அவளுக்கு அளித்த கொடுமைகளுக்கு அவளிடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் என் உயிரைப் பற்றி கண்டிப்பாய் கவலைப் பட்டிருக்க மாட்டார்கள்.”