(Reading time: 11 - 21 minutes)

பின் அங்கு அவளுக்கு பிடித்தமில்லாத பல விஷயங்களை தந்தையிடம் பகிர்ந்துக் கொள்வது போல் எழுதியிருந்தாள்.

அப்பா பாட்டி என்னை எப்போ பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க.. அவங்களுக்கு என்னை பிடிக்கவேயில்லை. பிடிக்காதவங்க ஏன்ப்பா இங்க என்னை அழைச்சிக்கிட்டு வரணும்

அப்பா நான் இன்னைக்கு தப்பே செய்யலப்பா.. ஆனா பாட்டி என்னை அடிச்சிட்டாங்க.. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல

அப்பா நான் இப்போ கோர்ட்ல கேட்டா உங்கக் கூடவே இருக்கேன்னு சொல்லிட்றேன் ப்பா.. இங்க அம்மா கொஞ்ச நேரம் கூட என்கூட இருக்க மாட்டேங்குறாங்க.. எப்போதும் புது அங்கிள் கூடவே இருக்காங்க.. அவரை தான் நான் இனி அப்பான்னு கூப்பிடணும்னு சொல்றாங்க.. எனக்கு பிடிக்கவே இல்லை. என்னை வந்து கூட்டிட்டு போயிடுங்கப்பா

அப்பா இன்னைக்கு எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு.. பாட்டி என்னை ஒரு ரூம்ல போட்டு அடைச்சிட்டாங்க.. சின்ன தப்பு தான் செஞ்சேன். அதுக்கு என்னை அடிச்சு ரூம்ல உக்கார வச்சிட்டாங்க.. அந்த ரூம் இருட்டா இருந்தது ப்பா.. பேய்ல்லாம் பயமுறுத்துறது போல இருந்துச்சு.. கொஞ்ச நேரத்துக்கு என்ன செய்றதுன்னே தெரியல.. அப்புறம் நான் அப்போ உங்களை தான் மனசுல நினைச்சுக்கிட்டேன் ப்பா.. அப்புறம் பயம் போயிடுச்சு தெரியுமா? பாட்டி என்னை ரூம்ல இருந்து வெளியே விட்டதும், அப்படியே உங்களை ட்ராயிங்கா வரைஞ்சுட்டு தான் இந்த லெட்டரே எழுதுறேன் தெரியுமா?

இப்போல்லாம் பாட்டி என்னை அடிக்கடி அடிச்சு அந்த இருட்டு ரூம்ல பூட்டி வச்சிட்றாங்க.. உங்களை சொல்லி சொல்லி என்னை திட்றாங்க.. ஆனா இப்போல்லாம் அந்த ரூம்ல எனக்கு பயமே இல்லை. நான் உங்களையே நினைச்சுக்கிட்டு இருப்பேன் ப்பா.. அப்போ தான் நான் உங்களை அழகா வரைய முடியுது.. இப்போக் கூட இதை எழுதறதுக்கு முன்ன உங்களை வரைஞ்சேன்.. முன்ன விட அழகா வரையறேன் இல்ல..

அப்பா எனக்கு ஸ்கூல்ல ஒரு ப்ரண்ட் கிடைச்சிருக்கான்.. அவன் பேரு சார்லி. ரொம்ப நல்ல பையன் ப்பா.. அவனுக்கு தமிழெல்லாம் தெரியுது.. உங்களுக்கு ஒரு சீக்ரெட் தெரியுமா? அவன் என்னோட பெரிய பையன், ஆனா அவனை சார்லின்னு பேர் சொல்லி தான் கூப்பிடுவேன்

அப்பா அம்மாக் கூட இருக்க அங்கிளோட பார்வையே சரியில்லைப்பா என்னை ஒருமாதிரி பார்க்கிறாரு. எனக்கு பயமா இருக்குப்பா

அப்பா இன்னைக்கு அம்மாவும் பாட்டியும் என்னை விட்டுட்டு வெளிய போயிட்டாங்க.. அப்போ அந்த அங்கிள் வீட்ல தான் இருந்தாரா.. எப்போதும் போல என்னை ஒருமாதிரி பார்த்தார். அப்புறம் உள்ள போய் சாராயம் குடிச்சாரா அப்புறம் வந்து என்னை வந்து சேர்த்து இறுக்கமா பிடிச்சிக்கிட்டாருப்பா.. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு.. அவர் என்னை விடவே இல்லை. நான் கத்தினேன் அழுதேன் ஆனா அவர் விடவே இல்லை. அப்போ நான் கண்ணை மூடி உங்களை நினைச்சுக்கிட்டு அவரோட கையில் நல்லா கடிச்சு விட்டுட்டேன்

அவர் என்னை துரத்திக்கிட்டு வந்தாரா.. பயத்துல அங்க இருந்த பூச்சாடியை தூக்கி அவர் மேல போட்டுட்டேன்.. அது அவர் தலையில் பட்டுச்சா.. அவருக்கு ரத்தம் வந்துச்சா.. அப்போ பார்த்து அம்மாவும் பாட்டியும் வந்து என்னை அடிச்சாங்க.. பாட்டி என்னை இன்னைக்கும் இருட்டு ரூம்ல போட்டு பூட்டிட்டாங்க.. அவர் என்ன செய்தார்னு என்னை சொல்லவே விடல..

அந்த சம்பவத்துக்கு பிறகு அந்த அங்கிள் வீட்ல இருந்தாலே நான் ரூம்க்குள்ள தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு உள்ளேயே இருப்பேன். எனக்கு அந்த அங்கிளை பார்த்தா பயமா இருக்குப்பா

இதற்கு மேல் கதிரவனால் படிக்க முடியவில்லை. இதற்கே அவர் குலுங்கி குலுங்கி அழுதார். சிறு வயதிலேயே தன் மகள் எத்தனை வேதனைப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த போது அவர் மனம் கனத்து போனது.

அவரை தேற்ற நினைத்தாலும் எழிலரசியால் முடியவில்லை, ஏனெனில் அவருடன் இதையெல்லாம் படித்துக் கொண்டிருந்த அவளுமே கண்ணீர் வடித்தாள்.

“இப்படி கஷ்டப்படுத்தவா என் பொண்ணை அங்க கூட்டிட்டு போனாங்க எழில்.. அவ பாரமா இருந்தா அவளை என்கிட்டேயே விட்டுட்டு போயிருக்கலாமே.. அவளை தேவதை போல வச்சிருந்திருப்பேனே.. ஏன் இப்படி செஞ்சாங்க எழில்?

அந்த அளவுக்கு நானும் என்னோட மகளும் என்ன தப்பு செஞ்சோம்.. நான் வெண்மதி மேல உண்மையான காதல் வச்சதுக்கும், சுடர் என்மேல அன்பா இருந்ததுக்கும் எங்களுக்கு இத்தனை பெரிய தண்டனையா?

என்னோட பொண்ணு எத்தனை கஷ்டப்பட்டிருக்கா.. மனுஷனா அவன் மிருகம் மாதிரி நடந்திருக்கான். ஆனா அது கூட தெரியாம இருந்திருக்காங்க அந்த ரெண்டு பொம்பளைங்களும், ச்சே அவளுங்க பொம்பளைங்களா ராட்சஷிங்க.. என் பொண்ணு அந்த மனித மிருகத்துக்கிட்ட இருந்து தன்னை காப்பாத்திக்க எத்தனை பாடுபட்டிருக்கா..

இத்தனை வேதனை அனுபவிச்சிட்டு கடைசியா என்னை தேடி வந்த என்னோட பொண்ணை நானே கஷ்டப்படுத்தி பார்த்திருக்கேனே எழில், எனக்கெல்லாம் நரகத்தில் கூட இடம் கிடைக்காது.

ஆனா என் பொண்ணு இத்தனை கஷ்டப்பட்டிருப்பான்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்லையே, அவ போனதுக்கு பிறகு கிட்டத்தட்ட பைத்தியக்காரன் போல சுத்திக்கிட்டு இருந்தேன்.. புகழ் சாரும் ஆனந்தியும் பேசி தான் உனக்கும் எனக்கும் கல்யாணம் செஞ்சு வச்சாங்க.. அப்போக்கூட உன்கூட கொஞ்ச நாள் கடமைக்காக தான் வாழ்ந்தேன்..

நமக்கு ரெண்டு பிள்ளைங்க ஆனதுக்கு பிறகு தான் நமக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் ஏற்பட்டுச்சுன்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்லை. என்னோட குடும்பம் நடத்தின உனக்கு என்னைப்பத்தி தெரியாதா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.