(Reading time: 14 - 28 minutes)

முதல் பொத்தானை அவள் போட்டு முடிக்கும் போதே சில விளக்க இயலாத மாற்றங்களை உணர்ந்தனர் இருவரும்!! சிலையாகி போனாள் சிவன்யா. விழிகள் நான்கும் கதைகள் பரிமாறிக் கொள்ள, அங்கு எவ்வித உணர்வுகளும் தடையிடவில்லை. விலகல் அற்ற நெருக்கம்,  விரும்பிய ஸ்பரிசம், காலத்தை மறந்துவிட செய்தது. இருவரும் தாங்கள் அறியாமல் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டிருந்தனர். இதழ்களுக்கு மத்தியிலான நெருக்கம் குறையும் வேளை முதலில் சுதாரித்தது சிவன்யா தான்! ஏதோ ஒரு வித தயக்கம் அவளை விலக செய்ய அச்செயல் அசோக்கை சுயநினைவு அடைய வைத்தது. தடுமாறிப் போயினர் இருவரும்!!அருகிலிருந்த மேசையை இறுகப் பற்றி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் சிவன்யா. இவனோ, அவள் முகத்தை கூட பார்க்க துணிவில்லாதவனாய் திரும்பிக் கொண்டான். அவள் முகமெங்கும் பயிர்ப்பு!!

“சாப்பிட வாங்க!”என்று புன்னகைத்தப்படி அங்கிருந்து ஓடிவிட்டாள் அவள்.

என்றுமே இல்லாத உணர்வுகளில் தத்தளித்துக் கொண்டிருந்தான் அசோக். ஆண்மகனும் நாணம் கொள்ளும் தருணத்தை அச்சமயமே நன்கு அறிந்திருந்தான் நாயகன். ஒன்று மட்டும் உறுதியாகிப் போனது, இருவரும் சில நேரங்களில் தங்களின் கட்டுப்பாடுகளை மறந்துவிடுகின்றனர்.

புதல்வனின் அடையாளம் அறிந்துக் கொண்ட பின்னர் மனக்கவலைகள் யாவும் மண்ணோடு சாய்ந்துவிட்டன சூர்ய நாராயணனுக்கு! எப்போதுமின்றி புதுவித உற்சாகம் அவரிடம் தெரிந்தது. மனதில் இருந்த அழுத்தங்கள் குறைந்துவிட்டன. அவன் தன்னை ஏற்கின்றானோ இல்லையோ தான் இறந்தப் பின்பு தன்னைத் தூக்கி செல்ல தனது இரத்தம் இருக்கிறது என்பதே அவருக்கு இன்பம் நல்கியது. அதுவரை ஓய்வு நல்கிய அறையானது பாரமானது. புத்துணர்வோடு வெளியே செல்ல துடித்தது மனம்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“என்னண்ணா ரொம்ப நேரமா ஏதோ யோசித்துக் கொண்டிருக்கீங்க?” புரியாமல் வினவினார் நவீன். தனது ஒற்றை விரல் துணைக் கொண்டு சக்கர நாற்காலியையும், வாசலையும் சுட்டினார். இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட அவர் இவ்வாறு செய்ததில்லை.

“வெளியே போகணுமா அண்ணா?” கண்ணீர் ததும்பின விழிகளில். ஆம் என சைகை செய்தார் சூர்ய நாராயணன்.

“வாங்கண்ணா! நான் கூட்டிட்டுப் போறேன்!” படுத்தப் படுக்கையாய் கிடந்த தமையனாரை கைத் தாங்கலாய் தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்தார் சூர்ய நாராயணன்.

“எங்கேண்ணா போகணும்?” குரல் அடைத்தது இளவலுக்கு!!

“கோ…கோ…வி…!” ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைத்தார் அந்த நாத்திகன்.

“கூட்டிட்டுப் போறேன்ணா!” என்று லிப்டை உயிர்ப்பித்தார். அது சில நொடிகளில் அவர்களை அடித்தளத்திற்கு கொண்டுச் சென்றது.

“டேய்! காரை ரெடி பண்ணுங்கடா!” என்றுமே இல்லாத துள்ளல் அன்று அவரின் குரலில் பிரதிபலித்தது.

“ஏ..!ஏ…நவீன்! எங்கே போற அவரை கூட்டிட்டு போற?” தடுக்க முனைந்தார் மதுமதி.

“அண்ணன் தான் வெளியே கூட்டிட்டு போக சொன்னார்!” தயங்கியது அவர் குரல். அப்பெண்ணின் கண்களில் குழப்பம்!

“இத்தனை வருடமா இல்லாம என்ன திடீர்னு??சரி…மாத்திரை போட்டுட்டு போங்க!” என்று அவ்வில்லத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய பெரியவரை நோக்கினார். எப்போது அவர் பார்வைக்கு கட்டுப்பட்டு பணிப்புரிந்தவர் சிலையாகி நின்றார். சிலையாகி நிற்க வைத்தது சூர்ய நாராயணனின் பார்வை!! தேகம் செயல் இழந்தப் போதும், அப்பார்வைக்கான கம்பீரம் மீண்டும் உயிர்பெற்றது, பெற வைத்தான் அவர் புதல்வன்!! அனைத்தும் தலைக்கீழாய் மாறத் தொடங்கியது. மெல்ல தலையசைக்க நவீன்குமார் அவரை அழைத்துக் கொண்டு வெளியேறினார் சங்கிலி அறுந்த பட்சி இனமாய்!! விடுதலைப் பெற்ற உணர்வு! பாவப்புண்ணிய கணக்குகள் போட்ட மனம் தண்டனையோ, மன்னிப்போ எதையுமே ஏற்க சித்தமாய் இருந்தது.

“நானே கார் ஓட்டுறேன்ணா!” இளம் வயது நினைவுகள் கண்முன் வந்துப்போயின. நாராயணன். இதுவரை தன் இளவலைத் தவிர எவரையும் நம்பி பயணம் செய்ததில்லை சூர்ய நாராயணன். இத்தனை வருடங்கள் கடந்தும் அவன் அதை மறவாமல் இருப்பது மகிழ்ச்சியையே அளித்தது.

இறைவனின் ஆலயம் நோக்கி பல ஆண்டுகளுக்கு பின்னே பயணப்படுகிறார் சூர்ய நாராயணன். இறைவன் நம்பிக்கை துளியும் அற்றவர் அவர். ஆனால், அவள் அப்படியல்ல! அவளுக்காகவே பல தினங்கள் ஆலயம் சென்றிருக்கிறார்.

“மன்னிப்புக் கோர வேண்டும்! மனதார மன்னிப்புக் கோர வேண்டும். எந்தக் கன்னிகையை இறைவனே ஆராதித்தானோ, அன்னவளை நான் துறந்துப் பெரும் தீங்கினை இழைத்துவிட்டேன். அதற்கு நான் நிச்சயம் அவன் பாதம் பணியத்தான் வேண்டும்!!” அவ்வாகனம் நேராக ஆலயத்தில் நின்றது. நவீன்குமார் துரிதமானார். தன் தமையன் வசதியாக உள்நுழைய அவரது சக்கர நாற்காலியை தயார் செய்தார். அங்கிருந்தோர் பிரமித்துப் போயினர். இவர் சூர்ய நாராயணன் அல்லவா??? அனைவரது விழிகளும் விரியத் தான் செய்தன. அவர் விழியோ மன்னிப்பின் பாதச்சரணம் தேடி அலையத் தொடங்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.