(Reading time: 14 - 28 minutes)

“சூர்ய நாராயணன் வந்திருக்காரா?” அர்ச்சகரின் ஆச்சரியக்குரல் அசோக் மற்றும் சிவன்யாவின் கவனத்தை வெகுவாக இழுத்தது. விழிகளுக்குப் புலப்படும் தொலைவில் தந்தையாரின் முகதரிசனத்தை காண்கிறான். படுத்த படுக்கையாய் இருந்தவர் எப்படி வெளியுலகை காண்கிறார்??? தன்னையறியாமல் சிலையாகிப் போனான் அவன். சூர்ய நாராயணனை முதன்முறையாக அவள் இப்போது தான் காண்கிறாள். அசோக்கிற்கு அப்படியே அவன் தந்தையின் முகசாயல்! குணநலன்கள் யாவும் தாயாரின் வழியே!!  இறைவனின் படைப்பின் நேர்த்தியை ஒட்டுமொத்தமாய் அவனிடத்தில் கண்டாள் சிவன்யா!!

“ஒரு நிமிஷம் சார்!” அசோக்கை விலக்கிவிட்டு சூர்ய நாராயணரை வரவேற்க சென்றார் அர்ச்சகர். தந்தையின் கம்பீரம் விழிகளுக்கு வியப்பினை அளிப்பதை உணர்ந்தான் அவன். எனினும், தாயாருக்கு இழைக்கப்பட்டது மிகப்பெரிய துரோகமே!!அதிலும் நம்பிக்கை துரோகம்! மன்னிக்க மனமில்லை அவனுக்கு! மௌனமாக இறைவனிடம் கவனத்தை செலுத்தினான். தந்தை மற்றும் மகனின் போராட்டத்திற்கு தீர்வு காண இயலாமல் தவித்தது சிவன்யா தான்!!

“மன்னிக்கலாம்!!ஆனால், வலி அனைத்தையும் தாங்கியவன் அவனல்லவா!! தாயார் உயிரோடு இருந்திருந்தால் சுலபமாக இதற்கு ஒரு தீர்வு கிட்டியிருக்கும்! எப்படியோ, இது அவரது நீண்டக்கால கனவாக இருக்கும். இறைவனுக்குத் தான் நன்றி கூற வேண்டும், இப்படி ஒரு சந்திப்பை நிகழ்த்தியதற்கு!!” அவள் மன எண்ணங்கள் முகத்தில் புன்னகையாய் பிரதிபலித்தன.

“சிவா?” சூழ்நிலையை உணர்த்தினான் அவன்.

“ஆ..!என்னங்க?”

“என்ன யோசனை?”

“ஆ…ஒண்ணுமில்லையே! நான் என்ன யோசிக்கப் போறேன்! நான் சாமி கும்பிட்டு இருக்கேன்.” விழிகளை மூடிக் கொண்டாள் அவள். அவள் உண்மையை மறைத்தாலும், அவள் எண்ணம் அவனுக்கு விளங்காமல் இல்லை. அப்போது தான் உணர்ந்திருந்தான் தன்னை சில பார்வைகள் மொய்ப்பதை!!தன் சிற்றப்பா தன் தந்தையின் செவியில் எதையோ கிசுகிசுப்பதும், அவர் தன்னை கூர்மையாக கவனிப்பதையும் உணர்ந்துக் கொண்டான் அவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அந்தப் பொண்ணைத் தான் தம்பி விரும்புறான். பெயர் சிவன்யா!” என்பதும் செவியில் விழுந்தது.

“கிளம்பலாமா?” சற்றே கடுகடுப்பாக வினவினான் அசோக்.

“அர்ச்…சனை..தட்டு!” ராகமாக இழுத்தாள் அவள்.

“ப்ச்..! கொஞ்சம் சீக்கிரம் அர்ச்சனை பண்றீங்களா?கொஞ்சம் அவசரமா போகணும்!” அர்ச்சகரிடம் வேண்டினான்.

“கொஞ்சம் பொறுங்க சார்! வராதவா வந்திருக்கா! இரண்டுப் பேருக்கும் சேர்ந்தே பண்ணிடுறேன்!” இருவரிடமும் அர்ச்சனைத் தட்டுகளைப் பெற்றுக் கொண்டார் அவர்.

“சொல்லும்மா! உங்க பெயர் நட்சத்திரம் சொல்லுங்க!”

“சிவன்யா, திருவோண நட்சத்திரம், சிவ கோத்திரம்!” என்றான் அவன்.

“அசோக் குமார், மகம் நட்சத்திரம், சிவ கோத்திரம்!” என்றாள் அவள்.

“நல்லதும்மா! நீங்க சொல்லுங்க சார்!” நவீன்குமார் கண்களைக் காட்டினார்.

“புரிந்தது சார்!” இரு அர்ச்சனைகளுமே அசோக்கிற்கும், சிவன்யாவிற்குமே நிகழ்ந்தது. அங்கிருந்தவனுக்குத் தான் அங்கிருந்து சென்றால் போதும் என்றிருந்தது.

அர்ச்சனை முடிந்ததும், இறைவனை ஒருமுறை வணங்கிவிட்டு இருவரையும் கண்டும் காணாமல் விலகிவிட்டான் அவன். மனதில் சுருக்கென்று ஏதோ தைத்தது சூர்ய நாராயணனுக்கு!! கோபமாக கூட ஏதும் பேசவில்லையே!!அவன் நடைக்கு ஈடாக சிவன்யா ஓட வேண்டி இருந்தது. இரு அடி எடுத்து வைத்தவள், பின்னகர்ந்து, சூர்ய நாராயணன் பாதத்தைத் தொட்டு வணங்கிவிட்டு ஒரு புன்னகைப் பூத்தாள்.

“சிவா!”

“இதோ வரேங்க!” அவன் குரல் கேட்டதும், அவசரமாக ஓடிவிட்டாள் அவள். எதிர்பாராமல் கிட்டிய மருமகளின் அன்பான அக்கறை, புதல்வன் ஏற்படுத்திய காயத்தில் இருந்து முக்தி அளித்தது.

“என்னங்க…என்னங்க…கலெக்டர் சார்! கொஞ்சம் மெதுவா போங்க!” அவன் தனது வேகத்தினை குறைத்தான். அவன் முகத்தில் என்றுமே இல்லாத இறுக்கம் தொனித்தது. ஏதும் பேசாமல்  வாகனத்தை இயக்கினான் அவன்.

“எதுக்கு உங்க அப்பா அம்மாக்கிட்ட இன்னிக்குப் பேச வேணாம்னு சொன்ன?” கடுமை ஒலித்தது.

“அவங்க உங்களை எதாவது சொன்னா, நான் வேடிக்கைப் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்!”

“அவங்க உன்னுடைய அம்மா! பாதியிலே வந்தவனுக்காக அவங்கக் கூட நீ பேசாம இருக்கிறதுல எனக்கு விருப்பமில்லை!” அவன் ஏன் இப்படி பேசினான் என்று புரியாமல் கூர்மையாக அவனைப் பார்த்தாள் சிவன்யா.

“என்ன சொன்னீங்க?” அவனிடம் பதில் இல்லை.

“காரை நிறுத்துங்க!”

“ஏன்?”

“நிறுத்துங்க!” அவன் காரை நிறுத்தினான். ஏதும் பேசாமல் கீழே இறங்கினாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.