(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 16 - தேவி

Kaanaai kanne

ரானா பிரதாப் தன்னுடைய தலைநகரான உதய்பூர் நோக்கித் தன் பயணத்தைத் துவக்க, ப்ரித்விராஜ்ஜும் இணைந்து கொண்டான்.

பிகானரில் இருந்து பாலைவனப் பகுதியைக் கடந்து வரவும், ராணா மற்றும் படைகளின் புரவிகள் தயார் நிலையில் இருந்தன.

ராணாவின் குதிரை சேத்தக் அத்தனை அழகாக பராமரிக்கப் பட்டு இருந்தது. அதைக் கண்டதும் ராணா ஆசையோடு அதைத் தடவிக் கொடுக்க, சேத்தக்கும் அவரை முட்டித் தன் மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டது.

ராணா அந்தக் புரவி காப்பாளனை அருகில் அழைத்துத் தன் முத்து மாலையைப் பரிசாக அளித்தார்.

“புரவிக் காவலனே.. என் சேத்தக்கை நன்றாகப் பராமரித்ததற்கு மிக்க நன்றி.” என்றார் ராணா.

“அது என் கடமை மகாராஜ் “ என்றான்.

“புரவிகளிடத்தில் காண்பிக்க வேண்டிய கனிவையும், கண்டிப்பையும் மிகத் துல்லியமாகக் கையாண்டு இருக்கிறாய். அதற்குத் தான் இந்தப் பரிசு” என்று கூறவும், அந்தப் புரவிக் காவலன் மிகுந்த மகிழ்ச்சியோடுப் பெற்றுக் கொண்டான்.

ராணா தன் சேத்தக்கின் மீது தாவி ஏற, மற்ற வீரர்களும் ஒட்டகத்தை விட்டுப் புரவிகளில் தாவி ஏறினர்.

ராணிகளின் வண்டிகள் மீண்டும் புரவிகளில் கட்டப்பட்டன. ஒரு சிலர் மட்டும் பல்லக்கில் ஏறினர்.

ப்ரித்விராஜ்ஜும் அங்கிருந்த புரவிகளில் ஒன்றில் ஏறிக் கொண்டான்.

ராணாவின் பயணம் பிகானர் நகரப் பகுதிகளின் வழியாகச் செல்லவே, ப்ரித்விராஜை முன்னால் செல்ல விட்டபடி ராணா பின் தொடர்ந்தார்.

அங்கிருந்த பிரஜைகள் மகாராணாவிற்கு தங்களுக்குத் தெரிந்தவாறு எளிய முறையில் வரவேற்பு அளித்தனர்.

ராஜபுத்திரர்களில் ஒரு சிலர் முஹலாயர்களின் அடிமைகளாகவும், திருமண உறவின் மூலமும் தங்கள் ராஜ்யத்தைத் தொலைத்து நின்று இருந்த காலகட்டம் அது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள் பகைவர்களுக்கு முகமன் கூறி, வசதியாக வாழ்ந்திட , பிரஜைகளே அதிக இன்னல்களுக்கு உள்ளானார்கள். வரித் திணிப்பு , பாதுகாப்பு உட்பட அத்தனை விஷயத்திலும் அவர்கள் அதிகார வர்க்கத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர்.

அந்த நேரத்தில் மகாராணாவின் உரிமை முழக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் அவரின் வீரமும், உருவமும் மக்களிடையே மிகவும் பிரசித்திப் பெற்று இருந்தது. அதற்காகவே அவர் வரும் வழியில் மக்கள் கூடி, ராணாவைப் பார்க்க விரும்பினர்.

இதைப் பற்றி ஏற்கனவே பிகானர் தலைவர் கூறி அனுமதியும் வாங்கியிருக்கவே, அவரும் அவர்களுக்குச் சமமான உற்சாகத்தைக் காட்டினர்.

நகரங்களின் கோட்டைகளைப் பார்வையிட்டவர், பிகானர் பகுதியை விட்டு வெளியேறத் தொடங்கினர். அப்போது ப்ரித்விராஜ்,

“மகாராஜ்,” என்று அழைக்கவே, அவர் திரும்பி என்ன என்பது போல் பார்த்தார்.

“மகாராஜ் , இன்னும் சற்றுத் தூரத்தில் கரணி மாதா கோவில் இருக்கிறது. தாங்கள் அனுமதி அளித்தால், அன்னையை தரிசனம் செய்து விட்டு வரலாம்.” என்று ப்ரித்விராஜ் கூறவும் , சரி என்றார் ராணா பிரதாப்.

அவரின் அனுமதி கிடைத்ததும், தன் புரவியை, அவர்கள் சென்று கொண்டு இருந்த முக்கிய நகர வழித்தடங்களில் இருந்து விலகி, அதன் பக்க வழிகளில் நடக்கத் தொடங்கினான் ப்ரித்வி.

அவன் செல்லும் பாதையில் ராணாவும் பின் தொடர, மற்ற அனைவரும் ரானாவைப் பின் தொடர்ந்தனர்.

சற்றுத் தூரத்தில் ஒரு கோவில் இருக்க, அருகில் சென்றனர். அங்கே ப்ரித்விராஜ் இறங்கவும், ராணாவும், அவரின் படைகளும் இறங்கினர்.

ரானாவோடு வந்த அனைத்துப் பெண்களும், கோவில் என்றவுடன் தங்கள் பல்லாக்கை விட்டு இறங்கினர்.

எல்லோரும் உள்ளே செல்ல, பெண்கள் அடியெடுத்து வைக்கவும், அவர்கள் வீல் என்று அலறினர்.

அலறல் சத்தம் கேட்டுத் திரும்பிய ராணாவின் முகத்தைப் பார்த்ததும் அவர்களுக்குப் பயம் ஏற்பட, சற்று இறங்கிய குரலில்,

“கால் வைக்கவும் முடியவில்லை. சூஹா காலின் கீழே ஓடுகிறது” என்று கூறினார்.

அதைக் கேட்ட ப்ரித்விராஜ் வேகமாக பெண்களின் அருகில் வந்து நின்றவன்,

“அரசி, கரணி மாதாவின் உருவம், கோவில் வாசலுக்கு நேரே கட்டப் பட்டுள்ளது. தாங்கள் நேரே கரணி தேவியின் சிலையைப் பார்த்தபடி நடந்தால், எலிகள் தாங்களாகவே வழி விடும் “ என்று கூறினான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கிரண் தேவி,

“இந்த தேவியின் சிறப்பு என்ன என்று கூற முடியுமா?” என்று கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.